

தினா ராகவன் இயக்கத்தில் கவுதம் ராம் கார்த்திக் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பிளடி பாலிட்டிக்ஸ்’ படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
இன்றைய இளைஞர் ஒருவரின் அரசியல்வாதியாகும் ஆசை, முயற்சி, வலியை விவரிக்கிறது இந்த டீசர். சுமார் 1.45 நிமிடங்கள் ஓடும் டீசரின் தொடக்கத்தில் இளையா என்கிற பள்ளி மாணவர் ஒருவர் அரசியல்வாதியாக வேண்டும் என்கிற தன் லட்சித்தை சொல்ல, சக மாணவர்கள் சிரிக்கிறார்கள்.
வாட்ச்மேன் ஒருவரின் மகனான அம்மாணவர் வளர்ந்து அந்த பகுதியின் வட்டச் செயலாளராகி அரசியலில் அடி எடுத்து வைப்பதைச் சொல்கிறது ‘பிளடி பாலிட்டிக்ஸ்’ டீசர்.
‘எல்லாம் தெரிஞ்சவன் அரசியலுக்கு வந்தது அந்த காலம். எல்லாருக்கும் தெரிஞ்சவன் அரசியலுக்கு வர்றதுதான் இந்தக் காலம்’. ‘பேரறிஞர் அண்ணாவே வந்தாலும் பிரசாந்த் கிஷோர் இல்லாம ஜெயிக்க முடியாது’, ‘லேட்டஸ்ட் பாலிட்டிக்ஸ் என்ன சொல்லுது தெரியுமா’ போன்ற வசனங்கள் அரசியலின் குறியீடாக கவனம் ஈர்க்கின்றன.
கணேஷ் பாபு தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் தினா ராகவன் இயக்கி இருக்கிறார். இந்த அரசில் அதிரடி படத்தில் கவுதம் ராம் கார்த்திக் உடன் செல்வராகவன், பி.வாசு, அஞ்சனா நேத்ருன், ராப்பி, ஏ.வெங்கடேஷ், லெனின் பாரதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.