

சென்னை: “என் இனிய தமிழ் மக்களே” என்ற அவரது குரல் சினிமா உள்ளவரை நிலைத்து நிற்கும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில்: ”தென் தமிழகத்தின் கிராமத்தில் இருந்து புறப்பட்டு, தமிழ் சினிமாவின் கேமராவை கிராமங்களை நோக்கி திருப்பியவர்; திரைத் துறையை மண் வாசனையால் நிரப்பியவர்; தமிழ் சினிமாவை தமிழ் மண்ணுக்குரிய விழுமியங்களோடு உலகம் திரும்பிப் பார்க்கச் செய்தவர் பாரதிராஜா.
அவர்தம் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். “என் இனிய தமிழ் மக்களே” என்ற அவரது குரல் சினிமா உள்ளவரை நிலைத்து நிற்கும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த பாரதி ராஜாவின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.” என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக கடும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாரதிராஜா, இன்று (ஜூன் 10) அதிகாலையில் காலமானார். அவரது மறைவுச் செய்தி திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.