

சூரி கதாநாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். தெலுங்கு நடிகர் சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்த இப்படத்தை ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இதன் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, “ஒரு படத்தைப் பற்றி பேசும்போது முக்கியமாக கவனிக்க வேண்டியது மக்களுடைய ஏற்புதான். அவர்கள் கொண்டாடுகிறார்கள் என்கிறபோது நாமும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இப்போது இயக்குநர் மதிமாறனுக்குச் சொல்ல வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. இவ்வளவு காலம் எதற்குப் போராடினோமோ அந்த இடத்துக்கு வந்திருக்கிறோம். இனி நிதானம் தேவை. எல்லாவற்றிலும் நிதானமாகச் சென்றால் எல்லாமே சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
தயாரிப்பாளர் எல்ரெட்குமார் சிறப்பானவர். நீண்ட நாளுக்கு முன்பு ‘விடுதலை 1’ கதையைச் சொன்னேன். எடுக்கும் போது செலவு அதிகமாகும் என்று தயங்கினேன். ஆனால் அவர் விடாமல் பரவாயில்லை, எடுக்கலாம் என்று கூறினார். அந்த ஒரு தருணம் மறக்க முடியாதது. சினிமாவின் மீது காதல் உள்ள தயாரிப்பாளர் அவர். எப்போதும் தன்னை ஓர் உதவி இயக்குநராகவே நினைத்துக் கொண்டு ஈடுபாடு காட்டுபவர்.
சூரியைப் பார்க்கும்போது அவரது பயணம் கண்கூடாகத் தெரிகிறது. சூரியை, மக்கள் தங்களில் ஒருவராகவும் அவர் வெற்றியை தங்கள் வெற்றியாகவும் கொண்டாடுகிறார்கள். அதை அவர் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.