

ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனத்திடமிருந்து பெற்ற ரூ.4.25 கோடியை 12 சதவீத வட்டியுடன் திருப்பி வழங்க வேண்டுமென இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுஉள்ளது.
ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனத்தை நடத்தி வரும் எல் ரெட் குமார் என்பவர் கடந்த 2013-ம் ஆண்டு இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், நடிகர் சிம்புவை நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனனுடன் இணைந்து 2008-ல் புதிய படத்தை தயாரிப்பதற்காக ஒப்பந்தம் போட்டதாகவும் அதற்காக ரூ.4.25 கோடி முன்பணமாக கவுதம் வாசுதேவ் மேனனுக்கு வழங்கியதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால், ஒப்பந்தத்தின்படி படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிக் கொடுக்கவில்லை என்றும் வாங்கிய முன்பணத்தையும் திருப்பித் தரவில்லை எனவும் குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, திரைப்படம் இயக்குவதற்காக வாங்கிய ரூ.4.25 கோடியை பட தயாரிப்பாளரிடம் வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டுமென கவுதம் வாசுதேவ் மேனனுக்கு கடந்த 2022-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் டிவிசன் அமர்வு முன்பு கவுதம் வாசுதேவ் மேனன் மேல்முறையீடு செய்திருந்தார். விசாரணையின்போது எல்ரெட் குமார் தரப்பில், திரைப்படத்தை இயக்கிக் கொடுக்கவில்லை எனவும் வாங்கிய பணத்தையும் கவுதம் வாசுதேவ் மேனன் திருப்பித் தரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு, கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில், 2012-ல் வெளியான ‘நீ தானே என் பொன்வசந்தம்’ திரைப்படமே அந்த ஒப்பந்தத்தின் கீழ் எடுக்கப்பட்ட படம் என்றும், அதன் மூலம் தங்களது கடமை முடிந்துவிட்டது என்றும் வாதிடப்பட்டது. ஆனால், இந்த வாதத்தை நிராகரித்த சென்னை உயர் நீதிமன்ற டிவிசன் அமர்வு, நீதானே என் பொன்வசந்தம் திரைப்படம் 2011-ல் போடப்பட்ட முற்றிலும் புதிய ஒப்பந்தத்தின் கீழ் எடுக்கப்பட்டது என்றும், 2008 ஒப்பந்தத்துக்கு பெறப்பட்ட ரூ.4.25 கோடி இதற்காகப் பயன்படுத்தப்படவில்லை எனவும் தெரிவித்தது.
மேலும் தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்த டிவிசன் அமர்வு, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததோடு, வாங்கிய ரூ.4.25 கோடியை கவுதம் வாசுதேவ் மேனன், 2010 மே மாதம் முதல் கணக்கிட்டு ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் ஆணையிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த ஆணைக்கு எதிராக கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் அவரது போட்டான் ஃபேக்டரி நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் ஜெ.பி. பர்திவாலா, கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை பரிசீலித்த நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணையில் தலையிடுவதற்கு எந்த காரணத்தையும் காண முடியவில்லை என்று கூறி இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதன் மூலம் கவுதம் வாசுதேவ் மேனன், ஆர்.எஸ். இன்போடெயின் மென்ட் நிறுவனத்திடமிருந்து பெற்ற ரூ.4.25 கோடியை நீதிமன்றம் நிர்ணயித்த வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.