

பாரி இளவழகன் இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ‘அன்பே டயானா’. ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன் என பலர் நடித்துள்ள இப்படத்துக்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.
நியோ கேசில் கிரியேஷன்ஸின் சத்யா கரிகாலன், மில்லியன் டாலர் ஸ்டூடியோஸின் யுவராஜ் கணேசன் இணைந்து தயாரித்துள்ளனர். வரும் 17ம் தேதி வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக சமுத்திரக்கனி, சசி குமார் கலந்து கொண்டனர்.
நடிகை ரம்யா ரங்கநாதன் பேசும்போது, ”இந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் என் திரைப்பயணத்தில் சிறப்பான ஒன்றாக இருக்கும். ஒரு நடிகையாக அதிக உணர்வுகளை வெளிப்படுத்தும் வாய்ப்பை கொடுத்த படம் இது. டயானா கதாபாத்திரத்தில் முடிந்த அளவுக்கு அர்ப்பணிப்புடன் நடித்திருக்கிறேன். இந்தப் படம் பெரம்பூரின் கலாச்சாரத்தையும், குறிப்பாக ஆங்கிலோ-இந்திய சமூகத்தின் வாழ்க்கை முறையையும் அழகாகப் பதிவு செய்துள்ளது.
இது முழுமையான குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படம். படத்தில் ரோஜாவுடன் பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத அனுபவம். சிறு வயதிலிருந்தே அவருடைய ரசிகை நான். திரையில் மிகவும் கம்பீரமாகத் தோன்றினாலும், நேரில் மிகவும் அன்பான, இனிமையான மனிதர். அவருடன் நடித்த ஒவ்வொரு நாளும் எனக்கு புதிய அனுபவமாக இருந்தது” என்றார்.