

படப்பிடிப்பு முடிந்த பிறகு திரைப்படம் பார்வையாளர்களைச் சந்திக்கத் தயாராகிறது. எடிட்டிங், கலர் கிரேடிங், பின்னணி இசை, ஒலி மிக்ஸிங், விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) போன்ற அனைத்து பணிகளும் முடிந்த பிறகு, படம் திரையரங்குகள், தொலைக்காட்சி, ஓடிடி தளங்கள் மற்றும் உலகம் முழுவதும் வெளியிடப்படுவதற்கான இறுதி வடிவம் உருவாக்கப்படுகிறது. இந்த இறுதிக் கட்ட செயல்முறையே டிஜிட்டல் மாஸ்டரிங் (Digital Mastering) எனப்படுகிறது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பழைய திரைப்படத்தை மீண்டும் வெளியிட வேண்டிய சூழல் வந்தால், அந்தப் பழைய மாஸ்டரை அப்படியே பயன்படுத்துவதில்லை. அசல் ஃபிலிம் நெகட்டிவ் அல்லது சிறந்த தரத்தில் இருக்கும் மாஸ்டரை வைத்து, இன்றைய தொழில்நுட்பத்துக்கு ஏற்ப புதிதாக உருவாக்கப்படும் வடிவமே டிஜிட்டல் ரீமாஸ்டரிங் (Digital Remastering) எனப்படும்.
எளிமையாகச் சொன்னால், டிஜிட்டல் மாஸ்டரிங் என்பது ஒரு புதிய திரைப்படத்தின் முதல் இறுதி வடிவம். டிஜிட்டல் ரீமாஸ்டரிங் என்பது பழைய திரைப்படத்துக்கு அளிக்கப்படும் புதிய தொழில்நுட்ப மறுபிறவி.
டிஜிட்டல் மாஸ்டரிங் என்றால் என்ன?
ஒரு திரைப்படத்தின் அனைத்து படைப்புப் பணிகளும் முடிந்த பிறகு, அது வெளியீட்டுக்குத் தயாராகிறது. இந்நிலையில்தான் ஒரு ஃபைனல் மாஸ்டர் உருவாக்கப்படுகிறது. இந்த ஃபைனல் மாஸ்டரிலிருந்துதான் திரையரங்குகளுக்கான DCP, OTT-க்கான மாஸ்டர், தொலைக்காட்சிக்கான ப்ராட்கேஸ்ட் காப்பி போன்ற பல்வேறு வடிவங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதைக் கட்டிடம் கட்டி முடித்த பிறகு அதன் வரைபடத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதைப் போலக் கருதலாம். எதிர்காலத்தில் எந்த வடிவம் தேவைப்பட்டாலும் அதே மாஸ்டரிலிருந்துதான் உருவாக்கப்படும்.
ரீமாஸ்டரிங் ஏன் தேவை?
20, 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படங்கள் அன்றைய திரையரங்குகளுக்காகத் தயாரிக்கப்பட்டவை. ஆனால் இன்று திரையரங்கங்களின் தரம் மிகவும் உயர்ந்துவிட்டது. 4கே திரைகள், ஐமேக்ஸ், டால்பி அட்மாஸ், ஹெச்டிஆர் போன்ற புதிய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. அதே நேரத்தில், பல ஆண்டுகள் பழமையான ஃபிலிம் சுருள்களில் கீறல்கள், தூசி, நிறம் மங்குதல் போன்ற பாதிப்புகளும் ஏற்பட்டிருக்கும். அதனால் பழைய திரைப்படங்களை இன்றைய தரத்தில் மீண்டும் வெளியிட, அவற்றை மறுபடியும் சீரமைக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. எனவே டிஜிட்டல் ரீமாஸ்டரிங் அவசியமாகிறது.
ரீமாஸ்டரிங் எப்படி நடக்கிறது?
முதலில் திரைப்படத்தின் ஒரிஜினல் நெகடிவ் அல்லது சிறந்த தரமுள்ள ஃபிலிம் சுருள் தேர்வு செய்யப்படுகிறது. அது மிக உயர்தரத்தில் கணினிக்குள் மாற்றப்படுகிறது. பின்னர் திரைப்படத்தில் இருக்கும் கீறல்கள், தூசி, ஃபிலிம் நடுக்கம், மங்கிய நிறங்கள் போன்றவை ஒவ்வொன்றாக சரி செய்யப்படுகின்றன. இது ஒரு புதிய திரைப்படத்தை உருவாக்குவதற்காக அல்ல; பழைய திரைப்படத்தை அதன் இயல்பான அழகுடன் மீண்டும் உயிர்ப்பிப்பதாகும்.
மீண்டும் கலர் கிரேடிங்: ரெஸ்டொரேஷன் முடிந்த பிறகு திரைப்படம் மீண்டும் டிஐ பிரிவுக்குச் செல்கிறது. இங்கு புதிய நிறங்கள் சேர்க்கப்படுவதில்லை. மாறாக, அசல் ஒளிப்பதிவாளர் உருவாக்கிய காட்சியின் அழகைப் பாதுகாத்தபடி, இன்றைய திரைகளில் இன்னும் தெளிவாகத் தோன்றும் வகையில் நிறங்கள் சமநிலைப்படுத்தப்படுகின்றன. இதனால் பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட திரைப்படமும், புதிதாக எடுத்த படம் போல உயிரோட்டமாகத் தோன்றுகிறது.
ஒலிக்கும் புத்துயிர்: பழைய திரைப்படங்களில் பெரும்பாலும் மோனோ அல்லது ஸ்டீரியோ ஒலி மட்டுமே இருக்கும். ரீமாஸ்டரிங்கின்போது தேவையற்ற சப்தங்கள் நீக்கப்பட்டு, வசனம், இசை மற்றும் பின்னணி ஒலிகள் தெளிவுபடுத்தப்படுகின்றன. தேவையான இடங்களில் அவை டால்பி 5.1 அல்லது டால்பி அட்மாஸ் போன்ற நவீன ஒலி வடிவங்களுக்கும் மாற்றப்படுகின்றன. இதனால் பழைய திரைப்படத்தைப் பார்க்கும்போது புதிய ஒலி அனுபவமும் கிடைக்கிறது.
கியூப், டிசிபி மற்றும் கேடிஎம்: ஒரு திரைப்படம் தயாரான பிறகு அது திரையரங்கங்களுக்கு அனுப்பப்பட வேண்டும். இந்தியாவில் இந்தப் பணியில் கியூப் சினிமா முக்கியப் பங்கு வகிக்கிறது. ஃபைனல் மாஸ்டரிலிருந்து திரையரங்குகளில் இயக்கப்படும் டிசிபி (டிஜிட்டல் சினிமா பேக்கேஜ்) உருவாக்கப்படுகிறது. டிசிபி என்பது ஒரு சாதாரண வீடியோ கோப்பு அல்ல. திரையரங்குகளில் இயக்குவதற்காகவே தயாரிக்கப்படும் ஒரு பிரத்யேக வடிவம். பாதுகாப்பிற்காக இந்த டிசிபி பூட்டப்பட்டிருக்கும். அதைத் திறக்க கேடிஎம் (கீ டெலிவரி மெஸேஜ்) என்ற டிஜிட்டல் சாவி தேவைப்படும். இதை மொபைல் போனுக்கு வரும் ஓடிபி போலப் புரிந்து கொள்ளலாம்.
ஓடிபி இல்லாமல் ஒரு செயலியைத் திறக்க முடியாது என்பது போல, கேடிஎம் (KDM) இல்லாமல் திரைப்படத்தையும் திரையிட முடியாது. மேலும், அந்த கேடிஎம் ஒரு குறிப்பிட்ட திரையரங்குக்கும், குறிப்பிட்ட தேதிக்கும், குறிப்பிட்ட நேரத்துக்கும் மட்டுமே வேலை செய்யும். இதனால் திரைப்படங்கள் சட்டவிரோதமாக நகலெடுக்கப்படுவது பெருமளவில் தடுக்கப்படுகிறது.
ஐமேக்ஸ் மற்றும் பல்வேறு வெளியீட்டு வடிவங்கள்: தற்காலத்தில் ஒரு திரைப்படம் ஒரே வடிவத்தில் மட்டுமே வெளியிடப்படுவதில்லை. சாதாரண டிஜிட்டல் திரையரங்குகள், ஐமேக்ஸ் திரைகள், ஓடிடி தளங்கள், தொலைக்காட்சிகள் என ஒவ்வொரு தளத்துக்கும் தனித்தனி மாஸ்டர்கள் தயாரிக்கப்படுகின்றன. பெரிய ஐமேக்ஸ் திரையில் கூட படத்தின் தரம் குறையாமல் இருக்கத் தேவையான மாற்றங்களும் செய்யப்படுகின்றன.
டிஜிட்டல் மாஸ்டரிங் என்பது ஒரு திரைப்படத்தின் இறுதி அதிகாரப்பூர்வ வடிவத்தை உருவாக்கும் செயல்முறை. டிஜிட்டல் ரீமாஸ்டரிங் என்பது ஏற்கெனவே வெளியான ஒரு திரைப்படத்தை, அதன் அசலான கலைத்தன்மையைப் பாதுகாத்தபடி, இன்றைய தலைமுறையின் திரையரங்குகள் மற்றும் தொழில்நுட்பத்திற்கேற்ப மீண்டும் உயிர்ப்பிக்கும் பணியாகும்.
அதனால்தான் நாயகன், பாட்ஷா, ஷோலே, தி காட்ஃபாதர் போன்ற காலத்தால் அழியாத திரைப்படங்கள், பல ஆண்டுகளுக்குப் பிறகும் புதிய பொலிவுடன் திரையரங்குகளில் மீண்டும் ஒளிர்கின்றன. டிஜிட்டல் ரீமாஸ்டரிங் என்பது ஒரு தலைமுறையின் கலைப் பொக்கிஷத்தை தரம் குறையாமல், உணர்வு மாறாமல் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லும் மிக முக்கியமான தொழில்நுட்பமாகும்.
(புதன்தோறும் ஒளிகாட்டுவோம்)