கலரிஸ்ட்: திரைப்படத்துக்கு இறுதி வண்ணம் தீட்டும் திரைக்கலைஞர் | ஒளி என்பது வெளிச்சமல்ல 47

கலரிஸ்ட்: திரைப்படத்துக்கு இறுதி வண்ணம் தீட்டும் திரைக்கலைஞர் | ஒளி என்பது வெளிச்சமல்ல 47
Updated on
3 min read

ஒளி, நிழல், வண்​ணம், உணர்வு ஆகிய அனைத்​தும் ஒன்​றிணை​யும் கலையே திரைப்​படம். இயக்​குநர் உரு​வாக்​கும் கதையை ஒளிப்​ப​தி​வாளர் ஒளி​யின் மூலம் காட்​சிகளாக மாற்​றுகிறார். அந்​தக் காட்​சிகளை ஒரே உலக​மாக​வும், ஒரே உணர்​வாக​வும், பார்​வை​யாளர்​களின் மனதில் பதி​யும் வகை​யில் மாற்​று​பவரே கலரிஸ்ட். அவர் காட்சி மொழிக் கலைஞர் (Visual Storyteller).

திரைப்​படத்​தின் உணர்ச்​சி, காலப்​பின்​னணி, கதா​பாத்​திரங்​களின் மனநிலை மற்​றும் இயக்​குநரின் பார்வை ஆகிய​வற்றை வண்​ணங்​களின் மூலம் வெளிப்​படுத்​தும் முக்​கிய​மான படைப்​பாளி. ஒரு திரைப்​படத்​தின் இறு​தித் தோற்​றம் என்​பது இயக்​குநர், ஒளிப்​ப​தி​வாளர், கலரிஸ்ட் ஆகிய மூவரின் கூட்​டுப் படைப்​பாகவே உரு​வாகிறது.

ஃபிலிம் லேபிலிருந்து டிஜிட்​டல் இன்​டர்​மீடியேட் வரை டிஜிட்​டலுக்கு முன்​பு, திரைப்​படங்​கள் ஃபிலிம் சுருளில் பதிவு செய்​யப்​பட்​டன. படப்​பிடிப்பு முடிந்​ததும் அவை ஃபிலிம் லேபிற்கு அனுப்​பப்​பட்டு கலர் டைமிங் எனப்​படும் செயல்​முறை​யின் மூலம் நிறச்​சமநிலை, பிர​காசம் (Exposure), அடர்த்தி (Density) ஆகியவை சரிசெய்​யப்​பட்​டன.

இதன் முக்​கிய நோக்​கம் ‘விஷுவல் கன்​சிஸ்​டன்​சி’. ஒரு திரைப்​படம் பல நாட்​கள், பல மாதங்​கள், வெவ்​வேறு நேரங்​களி​லும் வேறு​பட்ட காலநிலைகளி​லும் படமாக்​கப்படு​கிறது. காலை, மதி​யம், மாலை, மேகமூட்​டம், வெயில் என ஒளி​யின் தன்மை மாறி​னாலும், திரை​யில் பார்ப்​பவருக்கு அனைத்து காட்​சிகளும் தொடர்ச்​சி​யாக நடந்​தது போலத் தோன்ற வேண்​டும். அந்த ஒற்​றுமையை உரு​வாக்​கு​வதே கலர் டைமிங்.

அந்​தக் காலத்​தில், முழு ஃபிரேமின் நிறத்தை மட்​டுமே மாற்ற முடிந்​தது. ஆனால் டிஜிட்​டல் இன்​டர்​மீடியேட் (DI) வந்த பிறகு ஒரு ஃபிரேமிற்​குள் இருக்​கும் நடிகரின் முகம், வானம், பின்​னணி அல்​லது குறிப்​பிட்ட பொருளை மட்​டும் தனி​யாகத் தேர்வு செய்து மாற்ற முடிந்​தது. இதனால் கலரிங் என்​பது ஒரு தொழில்​நுட்​பச் செய​லாக இல்​லாமல், காட்​சியை மறு​வடிவ​மைக்​கும் கலை வடிவ​மாக மாறியது.

இந்​திய சினி​மா​வில் டிஐ தாக்​கம்: இந்​திய சினி​மா​வில் டிஐ தொழில்​நுட்​பம் 2000- களில் அறி​முக​மானது. இயக்​குநர் சஞ்​சய் லீலா பன்​சாலி​யின் ‘ப்​ளாக்’ (2005) திரைப்​படம் இந்​திய அளவில் டிஜிட்​டல் கலர் கிரேடிங்​கின் கலைந​யத்தை வெளிப்​படுத்​திய முக்​கிய​மான படைப்​பாகக் கருதப்​படு​கிறது.

தமிழில் ‘விரு​மாண்​டி’ (2004) குறிப்​பிடத்​தக்க மைல்​கல். ஒரே சம்​பவத்தை 2 மனிதர்​களின் பார்​வை​யில் சொல்​லும் அந்​தப் படத்​தில், 2 வெவ்​வேறு கலர் பேலட்​டு​கள் பயன்​படுத்​தப்​பட்​டன. இதன் மூலம் வண்​ணங்​களும் கதை சொல்​லும் மொழி என்​பதை அந்​தப் படம் நிரூபித்​தது.

கலரிஸ்​டின் பணி: சிறந்த திரைப்​படங்​களில் கலரிஸ்ட் முன் தயாரிப்பு நிலை​யிலேயே இயக்​குநர் மற்​றும் ஒளிப்​ப​தி​வாள​ருடன் இணைந்து பணி​யாற்​றத் தொடங்​கு​கிறார். படத்​தின் மனநிலை, அது இயற்​கை​யான தோற்​றமா அல்​லது ஸ்டைலிஷான தோற்​ற​மா? எந்த வண்​ணங்​கள் ஆதிக்​கம் செலுத்த வேண்​டும் என்ற முடிவு​கள் ஆரம்​பத்​திலேயே எடுக்​கப் படு​கின்​றன. பிறகு ஆர்ட் டைரக்​டர், காஸ்ட்​யூம் டிசைனர், மேக்​கப் குழு, விஎஃப்​எக்ஸ் குழு ஆகியோ​ருடன் இணைந்து செட் நிறங்​கள், உடை வண்​ணங்​கள், தோல் நிறங்​கள் போன்​றவை கதைக்​கேற்ப திட்​ட​மிடப்​படு​கின்​றன.

கேம​ரா, லென்ஸ் மற்​றும் எல்​யுடி: படப்​பிடிப்​புக்கு முன் பல்​வேறு கேம​ராக்​கள், லென்​​ஸுகள், விளக்​கு​கள் சோதனை செய்​யப்படு​கின்​றன. ஆரி, ரெட், சோனி போன்ற கேம​ராக்​கள் ஒவ்​வொன்​றும் நிறங்​களை வெவ்​வேறு வித​மாகப் பதிவு செய்​கின்​றன. அதே​போல் Cooke, Zeiss அல்​லது Vintage லென்​ஸ்​களும் தனித்​து​வ​மான காட்சி மொழியைக் கொண்​டுள்​ளன.

இந்​தச் சோதனை​களின் அடிப்​படை​யில் கலரிஸ்ட் ஒரு எல்​யுடி- ஐ (Look Up Table) உரு​வாக்​கு​வார். இதன் மூலம் Log-ஆக பதிவு செய்​யப்​படும் காட்​சிகள், இறு​தி​யில் எப்​படித் தோன்​றும் என்​பதை படப்​பிடிப்​புத் தளத்​திலேயே இயக்​குநரும் ஒளிப்​ப​தி​வாள​ரும் பார்க்க முடி​யும்.

டிஐ மற்​றும் கலர் கிரேடிங்: படம் எடிட் செய்​யப்​பட்ட பிறகு அது டிஐ ஸ்டூடியோவுக்கு வரு​கிறது. அங்கு முதலில் ஒவ்​வொரு காட்​சி​யின் எக்​ஸ்​போசர், கான்ட்​ராஸ்ட், ஒயிட் பேலன்ஸ் ஆகியவை சரிசெய்​யப்​படு​கின்​றன. அதன்​பிறகு கதா​பாத்​திரத்​தின் முகம், பின்​னணி, உடை போன்ற குறிப்​பிட்ட பகு​தி​களுக்கு மட்​டும் தனித்​தனி​யாக மாற்​றங்​கள் செய்​யப்​படு​கின்​றன.

சில காட்​சிகளில் முகத்​துக்கு மட்​டும் மென்​மை​யான ஒளி சேர்க்​கப்​படும். சில காட்​சிகளில் பின்​னணி இருண்​ட​தாக மாற்​றப்​படும். சில நேரங்​களில் பிலிம் கிரைன் அல்​லது விண்​டேஜ் லுக்போன்ற காட்சி அமைப்​பு​களும் சேர்க்​கப்​படும். இவை கதை​யின் உணர்வை வலுப்​படுத்​து​வதற்​காகவே செய்​யப்படு​கின்றன.

வண்​ணங்​களின் உளவியல்: மனித மனதில் மிகப்​பெரிய தாக்​கத்தை வண்​ணங்​கள் ஏற்​படுத்​துகின்​றன. வார்ன் டோன்ஸ் காதல், குடும்​பம், நினை​வு​கள் மற்​றும் கிராமத்து வாழ்க்​கையை வெளிப்​படுத்​துகின்​றன. கூல் டோன்ஸ் தனிமை, திகில், மர்​மம் மற்​றும் நகர வாழ்வை உணர்த்​துகின்​றன. Desaturated நிறங்​கள் யதார்த்​த​மான மற்​றும் தீவிர​மான கதைகளுக்கு ஏற்​ற​தாக அமை​கின்​றன. எனவே கலரிஸ்ட் பார்​வை​யாளர்​களின் உணர்ச்​சிகளுக்​கும் சேர்த்தே வண்​ணம் தீட்​டு​கிறார்.

பல்​வேறு திரைகளுக்​கான இறுதி வடிவம்: இன்​றைய படங்​கள் ஓடிடி, தொலைக்​காட்​சி, மொபைல், ஐமேக்ஸ் உள்​ளிட்ட பல்​வேறு தளங்​களில் வெளி​யாகின்​றன. ஒவ்​வொரு தளத்​துக்​கும் தனித்​தனித் தொழில்​நுட்​பத் தரநிலைகள் உள்​ளன. ஒவ்​வொரு திரை​யிலும் வண்​ணங்​கள், பிர​காசம் மற்​றும் காட்​சி​யின் தரம் ஒரே மாதிரி​யாகத் தோன்ற வேண்​டும் என்​ப​தை​யும் கலரிஸ்ட் உறுதி செய்​கிறார்.

இறுதி டெலிவரபிள்ஸ் (Deliverables): கிரேடிங் முடிந்த பிறகு திரையரங்​கு​களுக்​கான டிசிபி (Digital Cinema Package) உரு​வாக்​கப்​படு​கிறது. ஓடிடி தளங்​களுக்​காக ProRes, IMF, EXR போன்ற உயர்தர மாஸ்​டர் ஃபைல்​கள் தயாரிக்​கப் படு​கின்​றன. இறு​தி​யாக குவாலிட்டி கன்ட்​ரோல் (QC) மூலம் ஒவ்​வொரு ஃபிரே​மும் பரிசோ​திக்​கப்​படு​கிறது. Dead Pixels, Flicker, Color Shift, Compression Errors போன்​றவை உள்​ளனவா என்​பதை ஆய்வு செய்த பிறகே படம் வெளி​யீட்​டுக்கு அனுப்​பப்​படு​கிறது.

ஒளிப்​ப​தி​வாளர் உரு​வாக்​கிய உலகுக்கு இறுதி வண்​ணத்​தை​யும், உணர்ச்​சி​யை​யும், ஆழத்​தை​யும் வழங்​குபவர் கலரிஸ்ட். அவர் ஒரு திரைப்​படத்​தின் காட்​சித் தொடர்ச்​சி​யைப் பாது​காத்து இயக்​குநரின் பார்​வையை முழு​மைப்​படுத்​துகிறார்; ஒளிப்​பதிவாளரின் உழைப்பை மேலும் மெரு​கேற்​றுகிறார்; இறு​தி​யில் எந்த திரை​யில், எந்த வடிவத்​தில் படம் பார்க்​கப்​பட்​டாலும்​ அதன்​ காட்​சிமொழி ஒரே மா​திரி​யாக இருக்​கும்​ என்​ப​தை உறு​தி செய்​கிறார்​.

(புதன்​தோறும்​ ஒளி​காட்​டுவோம்​)

கலரிஸ்ட்: திரைப்படத்துக்கு இறுதி வண்ணம் தீட்டும் திரைக்கலைஞர் | ஒளி என்பது வெளிச்சமல்ல 47
டிஜிட்டல் இமேஜிங் டெக்னீஷியன் (DIT): நவீன சினிமாவின் டிஜிட்டல் பாதுகாவலர் | ஒளி என்பது வெளிச்சமல்ல 46

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in