டிஜிட்டல் இமேஜிங் டெக்னீஷியன் (DIT): நவீன சினிமாவின் டிஜிட்டல் பாதுகாவலர் | ஒளி என்பது வெளிச்சமல்ல 46

டிஜிட்டல் இமேஜிங் டெக்னீஷியன் (DIT): நவீன சினிமாவின் டிஜிட்டல் பாதுகாவலர் | ஒளி என்பது வெளிச்சமல்ல 46
Updated on
2 min read

டிஜிட்டல் சினிமா யுகத்​தில் திரைப்​படத் தயாரிப்​பின் மிக முக்​கிய​மான தொழில்​நுட்​பக் கலைஞர்​களில் ஒரு​வர் டிஜிட்​டல் இமேஜிங் டெக்​னீஷியன் (DIT) ஆவார்.

ஒரு காலத்​தில் படப்​பிடிப்பு முடிந்​தவுடன் ஃபிலிம் ரோல்​கள் லேப்​களுக்கு அனுப்​பப்​பட்​டு, அவை பாது​காப்​பாக டெவலப் செய்​யப்​பட்ட பிறகே ஒளிப்​ப​தி​வாள​ரும் இயக்​குநரும் நிம்​ம​தி​யடைந்​தனர்.

இன்று ஃபிலிம் லேப்​கள் இல்​லை​யென்​றாலும் அந்​தப் பொறுப்பு மறைந்​து​விட​வில்​லை. அது டிஐடி என்ற நவீன தொழில்​நுட்​பக் கலைஞரின் தோள்​களுக்கு வந்து சேர்ந்துள்​ளது.

பலருக்கு டிஐடி என்​றால் மெமரி கார்​டிலிருந்து ஹார்டு டிஸ்க்​கிற்கு காட்​சிகளை காப்பி செய்​பவர் என்ற எண்​ணம் உள்​ளது. ஆனால் அது அவருடைய வேலை​யின் சிறு பகுதி மட்​டுமே.

உண்​மை​யில் டிஐடி என்​பவர் படப்​பிடிப்பு தளத்​திலேயே செயல்​படும் ஒரு நடமாடும் டிஜிட்​டல் ஃபிலிம் லேப்​புக்கு ஒப்​பானவர். ஒளிப்​ப​தி​வாளரின் கலைநோக்​கை​யும், கேம​ரா​வில் பதி​வான டிஜிட்​டல் தரவு​களை​யும் பாது​காத்​து, அவற்றை போஸ்ட் புரொடக் ஷன் வரை எந்த இழப்​புமின்​றி கொண்டு செல்​லும் பெரிய பொறுப்பு அவருடையது.

கேமரா அறிவு மற்​றும் ஒர்க்ஃப்ளோ

ஒரு சிறந்த டிஐடி-க்கு ஆரி, ரெட், சோனி வெனிஸ், பிளாக் மேஜிக், கேனான் சினிமா இஓஎஸ் போன்ற நவீன சினிமா கேம​ராக்​களின் தொழில்​நுட்ப அறிவு இருக்க வேண்டியது அவசி​யம்.

ஒவ்​வொரு கேம​ரா​வும் வெவ்​வேறு கலர் சயின்​ஸ், RAW பதிவு முறை, Color Space மற்​றும் Gamma அமைப்​பு​களைக் கொண்​டிருப்​ப​தால், அவற்றை எடிட்​டிங் மற்​றும் கலர் கிரேடிங் ஒர்க்ஃப்​ளோவுக்​குச் சரி​யாகத் தயார்​படுத்​து​வது டிஐடி-ன் முக்​கியப் பொறுப்​பாகும்.

கேம​ராவைப் பற்றி அறிந்​திருப்​ப​தோடு மட்​டுமல்​லாமல், எடிட்​டிங், கலர் கிரேடிங் மற்​றும் விஎஃப்​எக்ஸ் ஒர்க்ஃப்ளோ பற்​றி​யும் தெளி​வாக அறிந்​திருக்க வேண்​டும். ஏனெனில், படப்​பிடிப்​பில் தொடங்​கும் டிஜிட்​டல் பயணம் இறு​தி​யில் திரையரங்​கில் முடிகிறது.

படப்​பிடிப்​புத் தளத்​தின் தொழில்​நுட்​பக் கண்​கள்

படப்​பிடிப்பு நடை​பெறும் போது டிஐடி, கேம​ரா​வில் இருந்து வரும் லைவ் ஃபீடை (Live Feed) தொடர்ந்து கண்​காணித்​துக் கொண்​டிருப்​பார். Waveform Monitor, Vectorscope, Histogram மற்​றும் False Color போன்ற கருவி​களின் மூலம் Exposure, Contrast, Skin Tone, Highlight Clipping மற்​றும் Shadow Detail ஆகிய​வற்​றைப் பரிசோ​திப்​பார்.

மேலும், சென்​சா​ரில் தூசி உள்​ள​தா, டிஜிட்​டல் நாய்ஸ் ஏற்​பட்​டுள்​ள​தா, போகஸ் அல்​லது இமேஜ் குவாலிட்​டி​யில் பிரச்​சினை​கள் உள்​ளனவா என்​ப​தை​யும் உடனுக்​குடன் கண்​டறிந்து ஒளிப்​ப​தி​வாளரிடம் தெரி​விப்​பார். இதனால் விலைம​திப்​பற்ற நேர​மும் காட்​சிகளை மீண்​டும் படமாக்க வேண்​டிய நிலை​யும் தவிர்க்​கப்​படு​கிறது.

டிஜிட்​டல் நெகட்​டிவ் மற்​றும் On-Set Grading இன்​றைய திரைப்​படங்​களில் பெரும்​பாலான காட்​சிகள் RAW அல்​லது Log வடிவத்​தில் பதிவு செய்​யப்​படு​கின்​றன. இவை இறுதி நிறத்​துடன் இருப்​ப​தில்லை; மாறாக அவை டிஜிட்​டல் நெகட்​டிவ்​களாகச் செயல்​படு​கின்​றன.

இயக்​குநரும் தயாரிப்​பாள​ரும் காட்​சி​யின் உண்​மை​யான தோற்​றத்​தைப் பார்க்​கும்​படி டிஐடி, எல்​யுடி(Look Up Table) மற்​றும் சிடிஎல் (Color Decision List) ஆகிய​வற்​றைப் பயன்​படுத்தி தற்​காலிக வண்ண அமைப்பை உரு​வாக்​கு​கிறார். இதனால் ஒளிப்​ப​தி​வாளர் நினைத்த காட்​சித் தோற்றம் படப்​பிடிப்பு தளத்​திலேயே அனை​வருக்​கும் தெளி​வாகத் தெரி​கிறது.

தரவு பாது​காப்பு

ஒரு மெமரி கார்டு என்பது வெறும் சேமிப்​பகம் மட்டுமல்ல; நடிகர்​களின் நடிப்​பு, நூற்​றுக்​கணக்​கான தொழில்​நுட்​பக் கலைஞர்​களின் உழைப்​பு, இயக்​குநரின் கனவு மற்​றும் தயாரிப்​பாளரின் முதலீட்டை தன்​னுள் பாது​காத்து வைத்​திருக்​கும் டிஜிட்​டல் நெகட்​டிவ்.

அதனால் டிஐடி, சாதாரண காப்பி பேஸ்ட் முறையைப் பயன்​படுத்து வதில்​லை. Checksum Verification (MD5, SHA) போன்ற பாது​காப்பு முறை​களின் மூலம், தரவு​களை இரண்டு அல்​லது மூன்று தனித்​தனி ஹார்டு டிஸ்க்​கு​களில் பாது​காப்​பாக நகலெடுக்​கிறார். இதுவே டிஜிட்​டல் சினி​மா​வின் மிக முக்​கிய​மான பாது​காப்பு செயல்​முறை​யாகும்.

போஸ்ட் புரொடக் ஷனுக்​கான பாலம்

படப்​பிடிப்பு முடிந்​தவுடன் டிஐடி-ன் வேலை முடிவடைவ​தில்​லை. அவர் எடிட்​டர்​களுக்​கான புராக்ஸி ஃபைல்ஸை உரு​வாக்​கு​கிறார். தனி​யாகப் பதிவு செய்​யப்​பட்ட ஒலியைக் காட்​சிகளு​டன் ஒத்​திசைக்​கிறார். காட்சி ஃபிரேம் ரேட் போன்ற மேடா டேட்டாக்​களை​யும் ஒழுங்​குபடுத்​துகிறார்.

பின்​னர் எடிட்​டிங், விஷுவல் எபெக்ட்ஸ் மற்​றும் கலர் கிரேடிங் என அனைத்​துக்​கும் இந்​தத் தகவல்​கள் அடிப்​படை​யாக அமை​கின்​றன. அதனால் டிஐடி என்​பவர் கேம​ரா​வுக்​கும் போஸ்ட் புரொடக் ஷனுக்​கும் இடையி​லான முக்​கிய​மான பால​மாகக் கருதப்​படு​கிறார்.

ஒளிப்​ப​தி​வாளரின் டிஜிட்​டல் துணை

ஒரு டிஐடி தின​மும் ஒளிப்​ப​தி​வாளர், கேமரா உதவி​யாளர்​கள், சவுண்ட் துறை, எடிட்​டர், விஎஃப்​எக்ஸ் குழு மற்​றும் கலரிஸ்ட் ஆகியோ​ருடன் இணைந்து பணி​யாற்​றுகிறார். படப்​பிடிப்​புத் தளத்​தில் உரு​வாக்​கப்​பட்ட LUT, Metadata மற்​றும் கேமரா ரிப்​போர்ட்ஸ் அனைத்​தும் இறுதி கலர் கிரேடிங் வரை சரி​யாகச் சென்​றடைவதை அவர் உறுதி செய்​கிறார்.

இதன் மூலம் ஒளிப்​ப​தி​வாளர் கற்​பனை செய்த நிறங்​களும் ஒளி​யும் எந்த மாற்​ற​முமின்றி பார்​வை​யாளர்​களைச் சென்​றடைகின்​றன. ஒரு காலத்​தில் திரைப்​படம் ஃபிலிம் கேன்​களுக்​குள் பாது​காக்​கப்​பட்​டது.

இன்று அது மிகச்​சிறிய மெமரி கார்​டு​களுக்​குள் வாழ்​கிறது. அந்த டிஜிட்​டல் நெகட்​டிவ்​களைப் பாது​காத்​து, ஒளிப்​ப​தி​வாளரின் பார்​வையை எந்த இழப்புமின்றி எடிட்​டிங் அறைக்​கும், கலர் கிரேடிங் ஸ்டூடியோ​வுக்​கும், இறு​தி​யில் திரையரங்​குக்கும் கொண்டு சேர்க்​கும் அமை​தி​யான தொழில்​நுட்​பக் கலைஞர்​தான் டிஐடி.

அவர் டேட்​டாவை மட்​டும் நகலெடுப்​ப​தில்​லை. ஒவ்​வொரு ஃபிரேமை​யும், ஒவ்​வொரு நிறத்​தை​யும், பலரது கனவு​களை​யும் பாது​காக்​கிறார். பழைய ஃபிலிம் லேப்​களின் பொறுப்பை இன்று ஒரே மனிதர் தனது கணினி, மானிட்​டர்​கள் மற்​றும் தொழில்​நுட்ப அறி​வின் மூலம் சுமந்து செல்​கிறார்.

அதனால்​தான் நவீன திரைப்​படத் தயாரிப்​பில் டிஐடி என்​பவர் ஒரு தொழில்​நுட்ப நிபுணர் மட்​டுமல்ல; ஒரு திரைப்​படத்​தின் டிஜிட்​டல்​ பாது​காவலரும்​, ஒளிப்​ப​தி​வாளரின்​ நம்​பிக்​கைக்​குரிய நண்​பரும்​ ஆவார்​.

(புதன்​தோறும்​ ஒளி​காட்​டுவோம்​)

- cjrdop@gmail.com

டிஜிட்டல் இமேஜிங் டெக்னீஷியன் (DIT): நவீன சினிமாவின் டிஜிட்டல் பாதுகாவலர் | ஒளி என்பது வெளிச்சமல்ல 46
கிரேன், டிராலி மற்றும் கிரிப் துறை: கேமராவை நகர்த்தும் கலைஞர்கள் | ஒளி என்பது வெளிச்சமல்ல 45

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in