

‘தினந்தோறும்’ நாகராஜ் இயக்கி உள்ள ‘ஆகாயம்’ படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், லிஷா மிராணி, ஷீலா, கனிகா, சந்தான பாரதி, ஜெயப்பிரகாஷ், கிரி துவாரகிஷ் என பலர் நடித்துள்ளனர். டெல்டா டாக்கீஸ் சார்பில் ஜெயச்சந்திரன், கார்த்திகா தேவி தயாரித்துள்ள இப்படத்துக்கு கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. படக்குழுவினருடன் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சசி, சேரன், அஜயன் பாலா, தயாரிப்பாளர் டி.சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் நாகராஜ் பேசும்போது, “என்னைப் போல வாழ்க்கையில் தவறான பாதைக்குச் சென்று மீண்டும் திரும்பி வர நினைப்பவர்கள் எல்லா துறைகளிலும் இருக்கிறார்கள். இந்தப் படத்தில் ‘குடி உள்ளே போனால் குடும்பம் வெளியே போயிடும்’ என்று ஒரு வசனம் இருக்கிறது. குடித்தால் வியாதி வரும், கடன் வரும், போலீஸ் வரும், பிரச்சினை வரும், குடும்பம் இரண்டாகும்.
அதனால் குடியை கொண்டாட வேண்டிய விஷயமாகப் பார்க்கக்கூடாது. அதே நேரத்தில் தவறிவிட்ட ஒருவர் மீண்டும் எழுந்து வர வேண்டும் என்ற எண்ணத்துக்கும் அவருக்கு பெரிய ஆதரவு கிடைக்க வேண்டும் என்பதற்கும் இந்தப் படம் ஒரு குரலாக இருக்கும். என்னால் மீண்டும் வர முடிந்தது என்றால், என்னைப் போல பலராலும் முடியும் என்று நம்புகிறேன்.
இதில் குடியைப் பற்றிப் பேசுவது கதையாகவோ, விளம்பரமாகவோ, போரடிக்கும் வகையிலோ இருக்காது. ஓர் அழகான காதல் கதைக்குள், வாழ்க்கைக்கு பயனுள்ள சிறிய விஷயமாகத்தான் அது இருக்கும். அதேபோல் அரசியலும் இந்தப் படத்தில் இருக்கிறது. ஆனால் இந்தப் படம் அன்பைப் பற்றித்தான் பேசுகிறது. அன்பால் தான் விஜய் தமிழகத்தின் முதல்வரானார். அந்த அன்பைத்தான் ‘ஆகாயம்’ பேசுகிறது” என்றார்.