

தனுஷ் நடித்துள்ள படத்துக்கு ‘கர’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. இதன் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடித்துவிட்டது படக்குழு. கோடை விடுமுறைக்கு படத்தினை வெளியிட இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.
வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு ‘கர’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், மாலையில் படத்தின் டீஸரையும் வெளியிட்டுள்ளது படக்குழு. இரண்டிற்குமே இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 90-காலகட்டத்தின் பின்னணியில் நடக்கும் உணர்வுப்பூர்வ த்ரில்லராக இதனை உருவாக்கி இருக்கிறது படக்குழு.
90-களின் காலகட்டத்தில் ‘கரசாமி’எனும் இளைஞனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி, மர்மம் கலந்த பரபரப்பான கதைக்களத்தில், எமோஷனல் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷ், மமிதா பைஜு, கே.எஸ்.ரவிக்குமார், ஜெயராம், சுராஜ் வெஞ்சரமுடு, கருணாஸ், ப்ரித்வி பாண்டிராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதற்கு ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், “’கர’ ஒரு தனித்துவமான திரையனுபவமாக உருவாகி வருகிறது.
இப்படத்தின் முதல் பதிப்பைப் பார்த்தபின், படத்தின் உணர்வுப்பூர்வ தாக்கத்திலும், தொழில்நுட்ப சிறப்பின் மீது எனக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அனைத்து நடிகர்களின் நடிப்பும், கதைக்கு ஆழம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. பார்வையாளர்களின் மனதில் நீண்ட நாள் நிற்கும் சக்தி இந்தப் படத்திற்கு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.