

நாயகனை முன்னிலைப்படுத்தும் வில்லன் கதாபாத்திரத்தை விரும்பவில்லை என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
ரஜினி நடித்துவரும் ’ஜெயிலர் 2’ படத்தில் கவுரவ கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இது தகவலாக இருந்தாலும், தற்போது விஜய் சேதுபதி அளித்த பேட்டியொன்றில் உறுதிப்படுத்தி இருக்கிறார். அப்பேட்டியில் வில்லனாக நடிப்பது குறித்து தனது எண்ணத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
அப்பேட்டியில் விஜய் சேதுபதி, “’ஜெயிலர் 2’ படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறேன். ஏனென்றால் ரஜினி சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் இருக்கும் போது நிறைய கற்றுக் கொள்ள முடிகிறது. இப்போது எனக்கு உற்சாகமூட்டும் கதைகளில் மட்டுமே வில்லன் மற்றும் கவுரவ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளேன்.
வில்லனாக நடிப்பதற்கு பல கதைகள் கேட்டேன். ஆனால், பல இயக்குநர்கள் என்னிடம் ஒரு நாயகனை முன்னிலைப்படுத்தும் வழக்கமான வில்லன் கதாபாத்திரத்தையே கொண்டு வந்தார்கள். அதனை செய்ய விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி. தற்போது பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி.