
‘யாத்திசை’ படம் மூலம் கவனம் ஈர்த்த தரணி ராஜேந்திரன் அடுத்து இயக்கியிருக்கும் படம், ‘டெத் ரயில்வே’. இரண்டாம் உலகப் போர் பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படத்தை ஜே.கே.ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஜே.கமலக்கண்ணன் தயாரித்திருக்கிறார். சேயோன் நாயகனாகவும் பவானி நாயகியாகவும் நடித்திருக்கும் இதில், சசிகுமார், சமுத்திரக்கனி, அசோக் செல்வன், கிஷோர், ஷிவதா என பலர் இருக்கிறார்கள். படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் தரணி ராஜேந்திரனிடம் பேசினோம்.
சயாம் மரண ரயில் பாதையைதான் ‘டெத் ரயில்வே’ன்னு சொல்வாங்க. இது அதுதொடர்பான கதையா?
இல்லை. இது 2-ம் உலகப் போர் காலகட்டத்துல நடந்த ஒரு சம்பவத்தை மையப் படுத்திய கதை. இதுக்கும் சயாம் மரண ரயில் பாதை சம்பவத்துக்கும் தொடர்பில்லை. ஆனா அந்த காலகட்டத்துல நடக்கிற கதைதான். இரண்டாம் உலகப்போர் தீவிரமடையும் போது பர்மா, நாகாலாந்தை ஆக்கிரமித்து இந்தியாவை நோக்கி முன்னேறிச்சு ஜப்பான். இந்த வரலாற்றை நேரடியா படமாக்காம அந்த துயரத்தை பதிவு செய்ய நினைச்சேன். அதுதான் இந்தப் படம். நாகாலாந்துல கொகிமா, ஜப்பூ பீக் மாதிரியான இடங்கள்ல நடந்த சண்டையை கதைக்களமா எடுத்திருக்கேன். அதுக்கு சயாம் மரண ரயில் பாதையைக் குறிக்கிற ‘டெத் ரயில்வே’ டைட்டிலை பயன்படுத்தி இருக்கேன்.
எதுக்கு அந்த தலைப்பு?
ஏன்னா, அது என்னை மிகவும் பாதிச்ச ஒரு சம்பவம், அது ஓர் இருண்ட வரலாறு. இந்த தலைப்பை சினிமாவுல பதிவு பண்ணணும்னு ரொம்ப நாளா தோணுச்சு. அதனால வச்சேன். இந்தப்படம், வரலாற்று ரீதியான விஷயம்னாலும் அதுல கற்பனை கதையைதான் படமாக்கி இருக்கேன். இது யாரோட பயோபிக்கும் இல்லை. 2-ம் உலகப் போர்ல ஜப்பான் இந்தியாவுக்குள்ள வரும்போது, நாம பிரிட்டிஷ் இந்தியாவா இருந்தோம்.
பிரிட்டிஷை எதிர்க்க இந்திய தேசிய ராணுவம் ஜப்பானோட கூட்டுச் சேர்ந்துச்சு. அந்த வரலாறை அடிப்படையா வச்சு இந்தப் படம் பண்ணியிருக்கேன். 1942-44 வரையிலான காலக்கட்டத்துல நடந்த போரையும், போரால சாதாரண மக்கள் எப்படி பாதிக்கப்பட்டாங்க அப்படிங்கறதையும் இதுல பதிவு பண்ணியிருக்கோம். வெறும் அந்த காலகட்ட நிகழ்வை மட்டும் சொல்லிட்டுப் போயிட்டேன்னா அது டாக்குமென்டரி மாதிரி ஆயிரும். அதனால இதுல ஒரு விஷயம் பேசியிருக்கேன். இந்தப் படம் பார்த்துட்டு வெளியில வரும்போது யுத்தம் ஏன் அப்படிங்கற கேள்வி எழும்.
‘யாத்திசை’ பேசப்பட்ட படம். அப்ப சில ஹீரோக்கள், “இந்த டீம்கிட்ட பெரிய பட்ஜெட் கொடுத்தா பிரம்மாண்டமான படமா பண்ணியிருப்பாங்க”ன்னு சொன்னாங்க... பெரிய ஹீரோவை வச்சு இந்தப் படத்தை பண்ணியிருக்கலாமே?
இந்தக் கதையை, ஹீரோக்களை மனசுல வச்சு நான் எழுதலை. என் கதைக்கு பெரிய ஹீரோக்கள் தேவைப்படலை. அதை கதாபாத்திரங்களாகத்தான் பார்க்கிறேன். இதுல நடிச்சிருக்கிற சசிகுமார், சமுத்திரக்கனி, ஷிவதா எல்லாருமே பெரிய நடிகர்கள்தான்.
‘யாத்திசை’யில நடிச்ச சேயோன் ஹீரோவா பண்ணியிருக்கார். பவானி ஸ்ரீ இருக்காங்க. அசோக் செல்வன், சிறப்பு தோற்றத்துல நடிச்சிருக்கார். இன்னொன்னு இந்த தயாரிப்பு நிறுவனம். நான் சுதந்திரமா படம் எடுக்க இந்த நிறுவனம் என்னை அனுமதிக்குது. அதனால, வேற ஹீரோ, நிறுவனங்களை நான் தேடலை.
சசிகுமார் என்னவா வருகிறார்?
சசிகுமார் இந்திய தேசிய ராணுவ கமாண்டராகவும், இந்திய வீரர்களோட தலைவரா சமுத்திரக்கனியும் வர்றாங்க. சேயோன் போர் வீரரா நடிச்சிருக்கார். அவருக்கு காதல் காட்சிகள் இருக்கு. பவானி ஸ்ரீ நாகாலாந்து பழங்குடி பெண்ணா வர்றாங்க. 1942 காலகட்டத்துல பெண்கள் எப்படி இருந்தாங்களோ, அப்படி வருவாங்க. இந்த போர், மலைகள்ல நடக்கிறதுங் கறதால நாகாலாந்துல படமாக்க அனுமதி கிடைக்கலை. ரொம்ப முயற்சி பண்ணியும் கிடைக்காததால, நாகர்கோவில்ல ஷூட் பண்ணினோம், சில காட்சிகளை செட் போட்டு எடுத்தோம்.
தரணி ராஜேந்திரன், பவானி, தயாரிப்பாளர் கமலக்கண்ணன், சேயோன்.
வரலாற்று படங்களுக்கு லொகேஷனும் காஸ்ட்யூமும் ரொம்ப முக்கியம்னு சொல் வாங்க...
உண்மைதான். காஸ்ட்யூமுக்கு இப்ப ஆவணங்கள் இருக்கு. ரொம்ப பழங்காலம்னா நம்மகிட்ட அதுக்கான ‘ரெஃபரன்ஸ்’ இருக்காது. ஆனா, இதுக்கு இருக்கு. இப்ப ஒரு பிரிட்டிஷ் கேப்டன் வர்றார்னா, அவர் எப்படி இருந்திருப்பார்ங்கறதுக்கு ‘ரெஃபரன்ஸ்’ இருக்கு. ஒவ்வொரு விஷயத்துலயும் நிறைய டீட்டெயிலிங் பண்ணியிருக்கோம். கதையில மகாத்மா காந்தி வர்றார், அப்போதைய ஜப்பான் பிரதமர் வர்றார், அவங்கள்லாம் எப்படி வந்தாங்களோ அதே போல காஸ்ட்யூம் ரெடி பண்ணியிருக்கோம். நிறைய விஷயங்கள் கதைக் குள்ள இருக்கும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இருக்கீங்களா?
ஆமா. ‘யாத்திசை’ பண்ணும்போது ஏஐ தொழில்நுட்பம் இந்தளவு வளரலை. ஆனா, இன்னைக்குத் தவிர்க்க முடியாததா ஆயிடுச்சு. அது கிராபிக்ஸ் கூடவே சேர்ந்து வந்துருது. அதனால இதுல பயன்படுத்தி இருக்கோம். அது கதையை இன்னும் உயிர்ப்போட சொல்றதுக்கு உதவி பண்ணுது. தமிழ்ல ‘வார்’ படங்கள் டீட்டெய்லா வந்ததில்லை. அந்தக் குறையை இந்தப் படம் போக்கும்னு நம்பறேன். சர்தக் கல்யாணி இசையும் சேதுமுருகவேல் ஜெகநாதன் ஒளிப்பதிவும் படத்துக்கு பெரிய பலம்.