

லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் ‘டிசி’ படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் படம் ‘டிசி’. இதன் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. தற்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுற்றதாக படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் இறுதிகட்டப் பணிகளை முடித்து வெளியிட படக்குழு மும்முரமாக பணிபுரிந்து வருகிறது.
இதில் வாமிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் லோகேஷ் கனகராஜ் உடன் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக முகேஷ், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரித்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் படம் என்பதால் இதற்கு எதிர்பார்ப்பு இருக்கிறது.
‘டிசி’ பணிகளை முழுமையாக முடித்து கொடுத்துவிட்டு, அல்லு அர்ஜுன் படத்தின் பணிகளைத் தொடங்க லோகேஷ் கனகராஜ் முடிவு செய்திருக்கிறார். இதன் கதை விவாதமும் ஒருபுறம் மும்முரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.