

இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஸ்ரீதிகா, பி.ஆர்.ஜி ஜெகந்நாதன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘டே 11’. இதில் புதுமுகங்கள் ஆதர்ஷ், மனோஜ் நாயகர்களாகவும் ஸ்வேதா அபிராமி நாயகியாகவும் நடித்துள்ளனர்.
ரவிச்சந்திரன், அபிமன்யு, தமிழ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனில் இசையமைத்துள்ள இப்படத்துக்குச் செல்வா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி ஸ்ரீதிகா கூறும்போது, “இது சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம். ஒரு பெண் உள்பட 5 தோழர்கள் ஒரு விசித்திர விளையாட்டை விளையாடுவதற்குக் கட்டாயப் படுத்தப்படுகிறார்கள். விளையாட்டில் தோழி இறந்து விடுகிறார். அவர் வந்தால்தான் விளையாட்டை முடிக்க முடியும்.
வந்தாரா, இல்லையா? என்பதுதான் கதை. 11 நாட்களில் நடக்கும் விஷயங்கள்தான் கதை என்பதால் அதையே தலைப்பாக வைத்துள்ளோம். தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதையை இதில் கூறியிருக்கிறோம். ஊட்டி, கொடைக்கானல், இமயமலை பகுதிகளில் படமாக்கி இருக்கிறோம். விரைவில் திரையரங்குகளில் வெளியாகும்” என்றார்.