

சினிமா என்பது, திரையில் எதைக் காட்டுகிறோம் என்பதோடு எதை காட்டாமல் விலக்குகிறோம் என்பதாலும் அதன் மாயம் உருவாகிறது. அந்த ‘விலகல்’ கலைதான் கட்-அவே ஷாட்.
ஒரு முதன்மைக் காட்சியில் இருந்து (சப்ஜெக்ட் ஏ) சட்டென்று வேறொரு விவரத்துக்குச் (சப்ஜெக்ட் பி) சென்று, மீண்டும் பழைய காட்சிக்குத் திரும்புவது – இந்த இடைச்செருகல்என்ற கதை சொல்லல் மூலம் தாளத்தைக் கட்டுப்படுத்தும், பார்வையாளரின்உளவியலை வழிநடத்தும், எதிர்பார்ப்பை உருவாக்கும் நுட்பமான உத்தி.
திசைத்திருப்பலின் தத்துவம்: எதிர்பார்ப்பின் கட்டமைப்பு
ஒரு கதாபாத்திரம் கதவைத் திறக்க முனைகிறது. பார்வையாளர் அவன் முகத்தில் என்ன இருக்கிறது என்று எதிர்பார்க்கிறார். அந்த நேரத்தில் இயக்குநர் அவனது முகத்தைக் காட்டாமல், சுவரில் தொங்கும் கடிகாரத்தின் நொடிகாட்டி ஓடுவதைக் காட்டுகிறார்.
அல்லது ஒரு பூனை திடீரென தலையைத் திருப்புவது. அந்தச் சிறிய விலகல் – ஒரு நொடி மட்டுமே நீடித்தாலும் – இதயத் துடிப்பை இரட்டிப்பாக்கும். இது ஒரு ‘தாமதக் கலையியல் (ஆர்ட் ஆஃப் டிலே).
மிஷ்கின்
திரையில் நிகழும் செயலை நேரடியாகக் காட்டாமல்,அதற்கு முன் ஓர் உளவியல் இடைவெளியை உருவாக்குவது. இந்த இடைவெளியே சஸ்பென்ஸின் உயிர். கட்-அவே ஷாட் இங்கு பார்வையாளரின் மூச்சைக் கட்டுப்படுத்தும் மறைமுக இயக்குநர்.
மிஷ்கின் பாணி: முகங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைச் சொல்லுதல்
தமிழ் சினிமாவில் கட்-அவே ஷாட்டுகளைத் தனித்துவமாகப் பயன்படுத்திய இயக்குநர்களில் முக்கியமானவர் மிஷ்கின். அவரது படங்களில், முகங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைச் சொல்லும் முயற்சி தெளிவாகத் தெரியும்.
‘பிசாசு’ மற்றும் ‘யுத்தம் செய்’ திரைப்படங்களில், வன்முறைக் காட்சிகளின் உச்சத்தில் கூட அவர் நேரடி அடிதடியை காட்டுவதில்லை. பதிலாக, உடைந்த கண்ணாடி, தரையில் கிடக்கும் குழந்தையின் பொம்மை, சுவரில் நீளும் நிழல் – இவையே கட்-அவே-க்களாகக் காட்டப்படும்.
இது ஒரு நுண்ணிய அறிகுறி: ‘ஒளி என்பது வெறும் வெளிச்சமல்ல.’ நிழல், அமைதி, பொருளின் தனிமை – இவை சேர்ந்து ஓர் உளவியல் பரப்பை உருவாக்குகின்றன. பார்வையாளர் அந்த இடைவெளியில் தன் கற்பனையால் காட்சியை நிரப்பிக்கொள்கிறார். இங்கே இயக்குநர் காட்டுவது குறைவு; உணர வைப்பது அதிகம்.
காட்டாமல் காட்டும் வித்தை
பிரம்மாண்டமான வெடிப்பு காட்சி, கார் விபத்துஅல்லது பெரும் கட்டடம் சரிவது ஆகியவற்றை நேரடியாகப் படமாக்குவது பொருட்செலவுமிக்க தொழில்நுட்ப முயற்சி. ஆனால் திறமையான இயக்குநருக்கு கற்பனையே மிகச் சிறந்த வி.எஃப்.எக்ஸ் என்பது தெரியும்.
வெடிப்பு நிகழும் நொடியில், கேமரா நேரடியாக தீப்பொறிகளைப் பார்க்காமல், வானில் பயத்தில் பறக்கும் பறவைகளைப் பார்க்கலாம். அல்லது ஜன்னல் கண்ணாடி அதிர்வில் உடைவதை மட்டும் காட்டலாம்.
அடுத்த ஷாட்டில் புகைமூட்டம், சிதறிய சாம்பல் இவற்றைக் காட்டுவதன் மூலம் பார்வையாளரின் மனதில் முழு வெடிப்பும் தானாக உருவாகிவிடும்.
இந்த உத்தி, செலவைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்ல, நம்பகத்தன்மையையும் அதிகரிக்கிறது. ஏனெனில் மனக்காட்சி எப்போதும் திரைக்காட்சியை விடப் பெரிது.
திருப்பங்களின் ரகசியம்: தி வில்லேஜ்
ஹாலிவுட்டில் கட்-அவே ஷாட் ஒரு ‘மறைப்புக் கருவி’ ஆக பயன்படுத்தப்பட்ட சிறந்த உதாரணம் ‘தி வில்லேஜ்’ திரைப்படம். இயக்குநர் மனோஜ் நைட் சியாமளன் சிறிய விவரங்களைக் கட்-அவே-யாகச் சேர்த்து, உண்மையை மறைத்து வைத்தார்.
சிவப்பு நிறக் கதவின் கைப்பிடி, குளிரில் மூச்சு, பனியாக மாறுவது, சுவரில் தொங்கும் ஒரு ஓவியம், ஆகியவை அப்போது சிறிய விஷயங்களாகத் தோன்றினாலும், இறுதித் திருப்பத்தின் போது அவை முழுக் கதையின் அஸ்திவாரமாக மாறுகின்றன.
மனோஜ் நைட் சியாமளன்
கட்-அவே இங்கு ஒரு திசைத்திருப்பல் அல்ல; அது ஒரு மாயத் திரை. பார்வையாளர் உண்மையைப் பார்த்துக்கொண்டே, ஆனால் அதை உணராமல் இருக்கச் செய்யும் உத்தி.
தாளம் மற்றும் நேர அளவு: சிறியதும் நீண்டதும்
கட்-அவே ஷாட் எவ்வளவு நேரம் நீடிக்கிறது என்பதும் மிக முக்கியம். சிறிய கட்-அவே (1–3 விநாடிகள்): வேகமான ஆக் ஷன் அல்லது டென்ஷன் காட்சிகளில் பயன்படுத்தப்படும். இவை ‘பல்ஸ்’போல செயல்படும். துடிப்பு வேகமாகும். பார்வையாளருக்கு சிந்திக்க நேரமில்லை; உணர்ச்சியே முதன்மை.
நீண்ட கட்-அவே (5 விநாடிகளுக்கு மேல்):
உளவியல் காட்சிகளில் இவை ஆழத்தை உருவாக்கும். ஒரு காலியான அறை, அதன் ஒரு மூலையில் தொங்கும் பழைய புகைப்படம், காற்றில் அசையும் திரை ஆகிய காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் பார்வையாளரை, இந்த நீண்ட அமைதி நிறுத்தி சிந்திக்க வைக்கிறது.
இங்கு தாளம் மெதுவாகிறது; உணர்ச்சி கனமாகிறது. ஒளிப்பதிவாளருக்கு இங்கு மிக முக்கியமானது ‘கிராஃபிக் வெயிட்’ – காட்சியின் காட்சியியல் எடை. முதன்மைக் காட்சி சோகமாக இருந்தால், கட்-அவேயும் அதே நிறத் தன்மையிலும் நிழல் அமைப்பிலும் இருக்க வேண்டும். இல்லையெனில் காட்சியின் ரிதம் முறியும்.
காட்டாத காட்சிகளின் கலை
சினிமா என்பது காட்சிகளின் வரிசை மற்றும் உணர்ச்சிகளின் ஒழுங்கு. அந்த ஒழுங்கைக் கட்டுப்படுத்தும் மவுனக் கருவிதான் கட்-அவே ஷாட். அது பார்வையாளரை ஒரு நொடி திசைத் திருப்பி, அடுத்த நொடியில் அதிசயத்தை உருவாக்கும்.
ஒரு மாயாஜாலக்காரன் கைக்குட்டையை அசைத்து கவனத்தை மாற்றுவது போல, இயக்குநர் கட்-அவே ஷாட்டைப் பயன்படுத்துகிறார். ஆனால் அந்தக் கைக்குட்டையின் பின்னால் இருக்கும் அறிவியல் – தாளம், ஒளி, நிழல், உளவியல் – ஆகியவையே உண்மையான கலை. அந்த நொடியில் தான் சினிமாவின் மாயம் உயிர்ப்பெடுக்கிறது.
கட்-அவே மற்றும் இன்சர்ட் ஷாட்: ஒரு நுட்பமான வேறுபாடு
திரைக்கதை மற்றும் படத்தொகுப்பில் ‘கட்-அவே’ மற்றும் ‘இன்சர்ட்’ ஷாட்கள் பெரும்பாலும் ஒன்றாகக் கருதப்பட்டாலும், அவற்றுக்கிடையே தெளிவான வேறுபாடு உண்டு. இன்சர்ட் ஷாட் என்பது அதே சூழலுக்குள் (சேம் சீன்) இருக்கும் ஒரு குறிப்பிட்ட விவரத்தைக் காட்டுவது; உதாரணமாக, ஒரு கதாபாத்திரம் செய்தி கேட்கும்போது அவரது முகபாவனையைக் காட்டுவது அல்லது போனில் வரும் தகவலை க்ளோஸ்-அப்பில் காட்டுவது.
ஆனால், கட்-அவே ஷாட் என்பது அந்தச் சூழலை விட்டு வெளியேறி (லீவ்ஸ் த சீன்), வேறொரு காலத்துக்கோ அல்லது இடத்துக்கோ பார்வையாளரை அழைத்துச் செல்வது. பொதுவாக, இன்சர்ட் ஷாட்கள் பெரும்பாலும் மிக நெருக்கமான பிம்பங்களாகவோ (க்ளோஸ்- அப்) அல்லது மைக்ரோ விவரங்களாகவோ மட்டுமேஅமையும்.
ஆனால், கட்-அவே ஷாட்கள் அப்படிப்பட்ட வரம்புகளுக்கு உட்பட்டவை அல்ல. அவை ஒரு சிறிய பொருள் முதல் ஒரு பிரம்மாண்டமான நிலப்பரப்பு (வைட் ஷாட்) வரை எந்த வொரு காட்சி அளவிலும் (ஷாட் வால்யூம்) அமையலாம்.
இன்சர்ட் என்பது காட்சியின் ஒரு பகுதியைத் துல்லியமாகப் பார்ப்பது; கட்-அவே என்பது காட்சியின் போக்கை மாற்றியமைக்கும் சுதந்திரமான நகர்வு. சுருக்கமாகச் சொன்னால், இன்சர்ட் ஷாட் காட்சியின் ஆழத்தைக் கூட்டுகிறது; கட்-அவே ஷாட் கதையின் எல்லையை விரிவுபடுத்துகிறது.
- cjrdop@gmail.com
(புதன்தோறும் ஒளி காட்டுவோம்)