

துரந்தர்
சினிமாவின் காட்சி அமைப்பில், ஒளிப்பதிவாளருக்கு இருக்கும் மிகவும் நம்பகமான கருவி, மீடியம் ஷாட். வைட் ஷாட்கள் சூழலை விவரிக்கின்றன; க்ளோஸ்-அப் ஷாட்கள் உணர்ச்சிகளை ஆழமாகப் படம்பிடிக்கின்றன.
ஆனால், இவை இரண்டுக்கும் இடையே பாலமாக இருந்து, மனித உறவுகளையும் அவர்களின் செயல் பாடுகளையும் மிக இயல்பாகக் காட்டுவது மீடியம் ஷாட் மட்டுமே.
பொதுவாக இடுப்புக்கு மேல் தலை வரை காட்டும் இந்தச் சட்டகம், சினிமாவின் “உரையாடல் மொழி” (லேங்குவேஜ் ஆஃப் கான்வர்சேஷன்) என்று அழைக்கப்படுகிறது.
உரையாடல்களின் முக்கியம்
சினிமாவில் இரு கதாபாத்திரங்களுக்கு இடையிலான உரையாடல் என்பது அவர்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டி அல்லது அன்புப் பரிமாற்றம். மீடியம் ஷாட் ஒரு பார்வையாளரை அந்த உரையாடலில் 3-வது நபராக அமர வைக்கிறது.
க்ளோஸ்-அப் ஷாட்டில் முகம் மட்டுமே தெரியும் என்பதால், அந்த நபர் எங்கே இருக்கிறார் அல்லது யாருடன் பேசுகிறார் என்ற சூழல் சில நேரங்களில் மறைந்துவிடும்.
ஆனால் மீடியம் ஷாட்டில், பேசுபவரின் முகத்தோடு சேர்த்து அவர்களின் கைகள், அவர்கள் அமர்ந்திருக்கும் விதம் மற்றும் அவர்களுக்கு அருகில் இருப்பவர் என அனைத்தும் காட்டப்படும். இது உரையாடலுக்கு ஒரு நம்பகத்தன்மையையும் தொடர்ச்சியையும் வழங்குகிறது.
மனிதர்களை இணைக்கும் பாலம்
ஒளிப்பதிவில் மீடியம் ஷாட் அல்லது மீடியம் வைட் ஷாட்போன்ற அமைப்புகள் 2 அல்லது அதற்கு மேற்பட்ட மனிதர்களை ஒரே ஃபிரேமில் இணைக்கின்றன.
இதை ‘டூ-ஷாட்’ என்றும் அழைக்கலாம். கதாபாத்திரங்களுக்கு இடையிலான இடைவெளி (ஸ்பேசியல் ரிலேஷன்ஷிப்) அவர்களின் மனநிலையைச் சொல்லும்.
அவர்கள் மிக நெருக்கமாக அமர்ந்து பேசுகிறார்களா அல்லது தூரமாக நின்று தர்க்கம் செய்கிறார்களா என்பதை மீடியம் ஷாட் மிகத் தெளிவாகக் காட்டும்.
ஒரு ஃபிரேமுக்குள் மனிதர்களைப் பிணைப்பதன் மூலம், அந்தச் சூழலில் நிலவும் ‘கெமிஸ்ட்ரி’ பார்வையாளர்களுக்குக் கடத்தப்படுகிறது.
முகபாவனையும் உடலசைவும்
க்ளோஸ்-அப் ஷாட்டில் கண்கள் மட்டுமே பேசும்; மீடியம் ஷாட்டில் முழு உடலும் பேசும். ஒரு நடிகர் சொல்லும் வசனத்துக்கு அவரது கண்கள் ஓர் உணர்ச்சியைக் காட்டினாலும், அவரது கைகள் பதற்றத்தில் நடுங்கலாம் அல்லது கைகளை இறுக்கிக் கட்டிக்கொண்டு ஒருவிதத் தற்காப்பு நிலையில் இருக்கலாம்.
உடலசைவுகளைப் படம்பிடிக்க மீடியம் ஷாட் அவசியம். ஒரு கதாபாத்திரம் பொய் சொல்கிறதா அல்லது உண்மையாகவே வருந்துகிறதா என்பதை பார்வையாளர் அறிந்துகொள்ள மீடியம் ஷாட் வழிவகை செய்கிறது. இது நடிப்பின் பரிமாணத்தை முழுமையாக்குகிறது.
சேவிங் பிரைவேட் ரையன்...
பல்ப் ஃபிக் ஷன்
ஹாலிவுட் மாஸ்டர்களின் பார்வையில் மிட்-ஷாட் உதாரணங்கள்:
பல்ப் ஃபிக் ஷன் (1994) – உரையாடல்களின் டைனமிக்ஸ்
இயக்குநர் க்வென்டின் டரன்டினோவின் படங்களில் வசனங்களே பிரதான கதாபாத்திரங்கள். பல்ப் ஃபிக் ஷன் படத்தின் புகழ்பெற்ற டைனர் காட்சிகளில், கதாபாத்திரங்கள் அமர்ந்து பேசும்போது மிட்-ஷாட்களை அவர் கையாண்ட விதம் அபாரமானது.
இடுப்புக்கு மேல் எடுக்கப்படும் இந்த ஷாட்கள், கதாபாத்திரங்களின் உடல் மொழி மற்றும் அவர்களின் கைகளில் இருக்கும் காபி கோப்பை போன்ற விவரங்களைச் சேர்த்துக்காட்டி, அந்த உரையாடலுக்கு ஓர் உயிரோட்டமான ‘ரிதத்தை’ கொடுக்கின்றன.
சேவிங் பிரைவேட் ரையன் (1998) – உணர்ச்சியின் ஆழம்
இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தனது போர்க்களக் காட்சிகளுக்குப் புகழ்பெற்றவர். படத்தின் இறுதியில், வயதான ரையன், கேப்டன் மில்லரின் கல்லறையைப் பார்க்கும் காட்சியில் மிட்-ஷாட் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
இது ரையனின் முகத்தில் இருக்கும் குற்ற உணர்வையும், நன்றியையும் காட்டுவதோடு, பின்னணியில் இருக்கும் கல்லறைகளின் வரிசையையும் காட்டி, அந்தத் தியாகத்தின் கனத்தை பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது.
ஒளிப்பதிவாளர் மீடியம்-ஷாட்டை அமைக்கும்போது, உடல் மொழியின் மிட்-ஷாட்டில் நடிகரின் தோள்கள், கைகளின் அசைவு மற்றும் அவர் நிற்கும் தோரணை ஆகியவை நடிப்பின் 50 சதவிகித விவரங்களைச் சொல்கின்றன.
இது கதாபாத்திரங்களின் ‘சமூக இடைவெளியை’ விளக்குகிறது. சமீபத்தில் பெரு வெற்றிபெற்ற ஹிந்தித் திரைப்படமான துரந்தரில் மிட்-ஷாட் என்பது பாதுகாப்பற்ற ஒரு வெளியை உருவாக்குகிறது.
கதாபாத்திரத்தைச் சுற்றி இருக்கும் ஆபத்தையும், அவர்களின் உள்மனப் போராட்டத்தையும் ஒரே சட்டகத்தில் இணைத்து, த்ரில்லர் உணர்வை படம் முழுவதும் தக்கவைக்கிறது. இத்திரைப்படத்தில் மிட்-ஷாட்கள் பயன்படுத்தப்பட்ட விதம் குறித்த சில முக்கிய குறிப்புகள்:
ஒற்றறியும் சூழலும் பாதுகாப்பற்ற உணர்வும்
ஸ்பை த்ரில்லர்களில் ஒரு கதாபாத்திரம் எப்போதுமே கண்காணிக்கப்படுகிறது என்ற உணர்வு இருக்க வேண்டும். துரந்தர் படத்தில், மிட்-ஷாட்கள் கதாபாத்திரத்தை இடுப்புக்கு மேல் காட்டும்போது, அவர்களுக்குப் பின்னால் இருக்கும் மர்மமான நிழல்கள் அல்லது மங்கலான (ப்ளர்ட்) உருவங்களையும் சேர்த்தே காட்டும்.
இது “யாரோ பின்னால் இருக்கிறார்கள்” என்ற அச்சத்தை பார்வையாளருக்குத் தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருக்கும். உடல் மொழியில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் உளவாளி பொய் சொல்கிறானா அல்லது உண்மையை மறைக்கிறானா என்பதை அவனது முகம் மட்டும் சொல்லாது.
இப்படத்தின் மிட்-ஷாட்களில், கதாபாத்திரத்தின் கைகள் துப்பாக்கியை நோக்கியோ அல்லது ரகசியக் கருவியை நோக்கியோ செல்வதை நாம் காணலாம். க்ளோஸ்-அப்பில் முகம் காட்டும் அமைதிக்கு மாறாக, மிட்-ஷாட்டில் தெரியும் பதற்றமான உடல் மொழி காட்சியின் சஸ்பென்ஸை அதிகப்படுத்துகிறது.
ஒளிப்பதிவாளரின் சவால்: காம்போசிஷன்
ஒளிப்பதிவாளராக, மீடியம் ஷாட்டை அமைக்கும்போது பின்னணியில் கவனம் செலுத்துவது மிக முக்கியம். பின்னணி முழுமையாக மங்கலாக இருக்கக் கூடாது, அதே நேரம் அது கதாபாத்திரத்தை விட அதிகக் கவனத்தை ஈர்க்கவும் கூடாது.
லென்ஸ் தேர்வு - பொதுவாக 35 எம்எம் முதல் 50 எம்எம் வரையிலான லென்ஸ்கள் மீடியம் ஷாட்டுக்கு பொருத்தமானவை. இவை மனிதக் கண் பார்க்கும் அதே இயல்பான கோணத்தைத் தருகின்றன.
கிராஃபிக் வெயிட்- ஃபிரேமில் கதாபாத்திரத்துக்கு மேலிருக்கும் இடைவெளி (ஹெட்ரூம்) மற்றும் அவர்கள் பார்க்கும் திசையில் இருக்கும் இடைவெளி (லுக்கிங் ஸ்பேஸ்) ஆகியவை காட்சியின் தாளத்தைத் தீர்மானிக்கின்றன.
எடிட்டிங் ரிதம்
எடிட்டிங் மேஜையில் மீடியம் ஷாட்கள் ‘மாஸ்டர் ஷாட்’டிற்கும் ‘க்ளோஸ்-அப்’பிற்கும் இடையே ஒரு பாதுகாப்பான மாற்றத்தை (ட்ரான்ஸிஷன்) வழங்குகின்றன.
ஒரு காட்சியின் வேகத்தை (பேஸ்) நிலைநிறுத்தவும், பார்வையாளருக்கு ஒரு நிதானமான அனுபவத்தைத் தரவும் எடிட்டர்கள், மீடியம் ஷாட்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
மீடியம் ஷாட் என்பது ஒளிப்பதிவாளரின் “பாதுகாப்பான புகலிடம்” (சேஃப் ஹேவன்). அது கதையை நகர்த்துகிறது, மனிதர்களை இணைக்கிறது, மற்றும் நடிப்பின் நுணுக்கங்களை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
ஒரு முகத்தை மட்டும் காட்டாமல், அந்த மனிதன் வாழும் சூழலையும் அவனது உடல் மொழியையும் இணைத்துக் காட்டுவதன் மூலம், சினிமா ஒரு முழுமையான கலை வடிவமாக மாறுகிறது. ஒவ்வொரு மிட்-ஷாட்டும் ஒரு கதை சொல்கிறது; அது மவுனத்துக்கும் சத்தத்துக்கும் இடையிலான ஓர் அழகான சமநிலை.
(புதன்தோறும் ஒளி காட்டுவோம்)
- cjrdop@gmail.com