

நடிகர் ராஜ்கிரண்
திரைப்படத்துக்காகப் பெற்ற ரூ.40 லட்சம் முன் பணத்தைத் திருப்பி கொடுக்காதது தொடர்பான வழக்கில், நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மீஞ்சூரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் சரவணன் என்பவர், கடந்த 2022-ம் ஆண்டு திரைப்படத்துக்காக நடிகர் ராஜ் கிரணுக்கு ரூ.50 லட்சம் முன்பணம் அளித்துள்ளார். பட தயாரிப்புப் பணிகள் தொடங்காததால், பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி, ராஜ்கிரணிடம் சரவணன் கேட்டுள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் ரூ.10 லட்சத்தை 2025-ம் ஆண்டு சரவணனுக்குத் திருப்பிக் கொடுத்த நிலையில், ரூ.40 லட்சத்தை மோசடி செய்துவிட்டதாக, மீஞ்சூர் போலீசில் கடந்த 2025-ம் ஆண்டு சரவணன் புகார் அளித்தார். பொன்னேரி மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த ஆக.28-ம் தேதி ராஜ்கிரண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி நடிகர் ராஜ்கிரண், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “படம் தயாரிப்பு தொடர்பாக 2022-ம் ஆண்டில் ஒப்பந்தம் நடந்த நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிமையியல் வழக்கான இந்த வழக்குக்கு குற்றவியல் சாயம் பூசப்பட்டுள்ளது.
தமிழக திரைப்பட ரசிகர்களுக்குப் பரிச்சயமான நடிகரான தான், எங்கும் தப்பி விட மாட்டேன்” எனக் கூறியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ரமேஷ், ராஜ்கிரணுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 15 நாட்களுக்குச் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.