

சென்னை: நம்மையெல்லாம் பாசத்தோடு கட்டிப்போட்டவர் ஏவி.எம்.சரவணன் என்று முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
மறைந்த திரைப்படத் தயாரிப்பாளர் ஏவி.எம்..சரவணனின் நினைவேந்தல் நிகழ்ச்சி, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஏவி.எம். மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. சரவணன் படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நிகழ்வில் முதல்வர் பேசியதாவது: வரலாற்றில் தமிழ் திரையுலகத்தை பற்றி குறிப்பிட வேண்டுமென்றால், அதில் நிச்சயமாக ஏவி.எம். நிறுவனத்தை குறிப்பிடாமல் இருக்கவே முடியாது. அப்பச்சி என்று மரியாதையுடன் அழைக்கப்படும் ‘மெய்யப்ப செட்டியார்’ மறைவுக்கு பிறகு இந்நிறுவனத்தை சரவணன் எப்படியெல்லாம் கட்டிக் காத்திருக்கிறார் என்று அவருடன் நெருங்கிப் பழகியிருக்கக்கூடிய ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் குறிப்பிட்டு சொன்னார்கள்.
நான் சென்னை மேயராக இருந்தபோது கடற்கரையில் நடை பயிற்சிக்கு செல்வதுண்டு. அப்போது சரவணனும், அவருடைய நண்பர்களோடு நடைபயிற்சிக்கு வருவார். நான் அடிக்கடி அவரை சந்தித்து பேசுவதுண்டு. சென்னை எப்படி இருக்கிறது, எப்படி அதை டெவலப் செய்ய வேண்டும் என்றெல்லாம் அறிவுரைகளை சொல்லியிருக்கிறார். இங்கே திறந்து வைக்கப்பட்ட படத்தில் சரவணன் கை கட்டி இருக்கின்ற அந்த காட்சி எல்லோருக்கும் தெரியும்.
எல்லோரும் கை கட்டுகிறோம். ஆனால், அவர் கை கட்டி நிற்பதுதான் இன்றைக்கும் அனைவரின் நினைவிலும் பரவலாக இருக்கிறது. ஏதோ பயத்தின் காரணமாக அல்ல, அன்பின் காரணமாக, பாசத்தின் காரணமாகத்தான் அவர் அவ்வாறு கை கட்டி நிற்கிறார். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், அவர் நம்மையெல்லாம் பாசத்தோடு கட்டிப்போட்டு வைத்ததால்தான் அவ்வாறு கை கட்டி நின்று நமக்கு பாடமாகியிருக்கிறார். இவ்வாறு முதல்வர் பேசினார்.
நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, “சினிமா மட்டுமின்றி, தனிப்பட்ட முறையிலும் எனக்கு உதவியவர் ஏவி.எம் சரவணன். ராகவேந்திரா திருமண மண்டபத்தை கட்ட ஆலோசனை வழங்கியவர்.
திரைப்படங்களை எடுக்கும்போதே அனைத்து கோணங்களிலும் யோசிக்கக் கூடியவர் அவர். ‘சிவாஜி’ படம் முடிந்த பிறகு ‘நீங்க ஏன் 2 வருஷம் 3 வருஷத்துக்கு ஒரு முறை படம் பண்றீங்க? வேண்டாம், வருஷத்துக்கு ஒரு படம் நடிங்க. வயசு ஆக ஆக பிசியா இருக்கணும், ஆக்டிவா இருக்கணும்’ என்று சொன்னார்.