விஎஃப்எக்ஸ்: கேமராவும் கற்பனையும் சந்திக்கும் இடம் | ஒளி என்பது வெளிச்சமல்ல 52

விஎஃப்எக்ஸ்: கேமராவும் கற்பனையும் சந்திக்கும் இடம் | ஒளி என்பது வெளிச்சமல்ல 52
Updated on: 
3 min read

விஎஃப்​எக்ஸ் (VFX) என்​பது கேம​ரா​வால் காண முடி​யாத ஒரு காட்​சி​யை, கணினி​யில் உரு​வாக்கி திரை​யில் தோன்​றச் செய்​யும் ஒளிப்​ப​தி​வின் கலை.

நடுக்​கடலில் ஒரு சிறு​வன் புலி​யுடன் பயணிப்​பது, திரவ உலோக மனிதன் உரு​வம் மாறு​வது, ஒரு சின்​னஞ்​சிறிய ஈ, கதா​நாயக​னாக மாறு​வது, ஒரு சாதாரண கட்​டிடம் பிரம்​மாண்​ட​மான அரண்​மனை​யாக விரிவடைவது—இவை அனைத்​தும் விஎஃப்​எக்ஸ் மூலம் சாத்​தி​ய​மாகின்​றன.

விஎஃப்​எக்ஸ் என்​பது படப்​பிடிப்பு முடிந்த பிறகு கணினி​யில் செய்​யப்​படும் வேலை மட்​டுமல்ல. சிறந்த விஎஃப்​எக்ஸ் காட்சி திரைக்கதை​யிலேயே பிறக்​கிறது. இயக்​குநரும் ஒளிப்​ப​தி​வாள​ரும் எது உண்​மை, எது பின்​னர் உரு​வாக்​கப்​படும் காட்​சி, இரண்​டை​யும் எவ்​வாறு ஒரே உலக​மாகத் தோன்​றச் செய்​வது என்​பதை ஆரம்​பத்​திலேயே தீர்​மானிக்க வேண்​டியது அவசி​யம்.

‘லைஃப் ஆஃப் பை’ திரைப்​படம் இதற்கு சிறந்த உதா​ரணம். கடலில் பயணிக்​கும் புலி உண்​மை​யான​தாகத் தோன்​றி​னாலும், அதன் பெரும்​பாலான காட்​சிகள் கணினி​யில் உரு​வாக்​கப்​பட்​ட​வை. புலி இல்​லாத இடத்தை நோக்கி நடிகர் நடிக்க வேண்​டும். அவரது பார்​வை, உடல் மொழி, கேம​ரா​வின் கோணம், புலி​யின் இருப்​பிடம்​—எல்​லாமே முன்​கூட்​டியே சரி​யாகத் திட்​ட​மிடப்​பட்​டிருக்க வேண்​டும்.

நடிகரின் மீது விழும் கடல் நீரின் பிர​திபலிப்​பு, புலி​யின் மீதும் இருக்க வேண்​டும். சூரிய ஒளி​யின் திசை இரு​வருக்​கும் ஒன்​றாக இருக்க வேண்​டும். படகில் புலி இருப்​ப​தால் உரு​வாகும் நிழல், அசைவு, அதன் உடல் எடை​யால் ஏற்​படும் தாக்​கம் போன்​றவை காட்​சிக்கு நம்​பகத்​தன்​மையை உரு​வாக்​கு​கின்​றன. பார்​வை​யாள​ருக்கு இவை தனித்​தனி​யாகத் தெரி​யாது. அவர், புலி அங்கே இருக்​கிறது என்று நம்​பு​கிறார்.

அதே சவால், ஆனால் இன்​னும் தீவிர​மாக ‘ஈ’ திரைப்​படத்​தில் வரு​கிறது. இங்கே விஎஃப்​எக்ஸ் ஓர் உயி​ரினத்தை மட்​டும் உரு​வாக்​க​வில்​லை; ஒரு கதா​நாயகனை உரு​வாக்​கு​கிறது. ஈ கோபப்பட வேண்​டும், பயப்பட வேண்​டும், காதலை வெளிப்​படுத்த வேண்​டும், திட்​ட​மிட வேண்​டும். நடிகர்​கள் உண்​மை​யான ஈயுடன் நடிக்​க​வில்​லை. எனவே, ஈ எங்கே இருக்​கிறது, எந்த உயரத்​தில் இருக்​கிறது, எந்​தத் திசை​யில் பார்க்​கிறது என்​பவை படப்​பிடிப்​பிலேயே குறி​யிடப்பட வேண்​டும்.

நடிகரின் பார்​வை, உடல் இயக்​கம், கேம​ரா​வின் பார்​வை—அனைத்​தும் பின்​னர் உரு​வாகப்​போகும் ஈயுடன் பொருந்த வேண்​டும். அது மேசை​யில் அமர்ந்​தால் அதன் நிழல் இருக்க வேண்​டும்; பறந்​தால் அதன் இயக்​கம் இயல்​பாக இருக்க வேண்​டும்; அதன் மீது விழும் ஒளி அந்த இடத்​தின் ஒளி​யுடன் பொருந்த வேண்​டும். எனவே, விஎஃப்​எக்ஸ் கதா​பாத்​திரம் கணினி உரு​வ​மாக மட்​டுமல்​லாமல், ஒரு நடிகரைப் போலவே கதைக்​குள் வாழ வேண்​டும்.

‘டெர்​மினேட்​டர் 2’ இன்​னொரு முக்​கிய​மான மாற்​றத்தை ஏற்​படுத்​தி​யது. T-1000 என்ற திரவ உலோக மனிதனின் உரு​வ​மாற்​றம் கதா​பாத்​திரத்​தின் இயல்​பாக மாறியது. தொழில்​நுட்​பம் புதிய கதைசொல்​லலுக்கு வழி அமைத்​தது.

விஎஃப்​எக்ஸில் கதா​பாத்​திரத்தை மட்​டுமல்ல, சிறிய இடத்தை மிகப்​பெரிய உலக​மாக​வும் மாற்ற முடி​யும். ‘மகதீ​ரா’ இதற்​கான சிறந்த இந்​திய உதா​ரணம். படப்​பிடிப்​புத் தளத்​தில் கோட்​டை​யின் ஒரு பகுதி மட்​டுமே உண்​மை​யாக இருக்​கும். அதன் பின்​னால் விரி​யும் கோட்​டை, மலைகள், நகரங்​கள், ஆயிரக்​கணக்​கான வீரர்​கள் போன்​றவை பின்​னர் உரு​வாக்​கப்​படும். இதுவே காட்​சித் தள விரி​வாக்​கம்.

ஆனால் உண்​மை​யான கட்​டிட​மும் டிஜிட்​டல் உலக​மும் ஒன்​றாகத் தோன்ற வேண்​டுமென்​றால், ஒளி, கண்​ணோட்​டம், அளவு, தூரம், வளிமண்டல மங்​கல், நிறம் ஆகியவை ஒன்​றோடொன்று பொருந்த வேண்​டும். ஒரு சிறிய சுவரின் பின்​னால் ஒரு பேரரசை உரு​வாக்​கு​வது விஎஃப்​எக்ஸ் கலைஞரின் திறமை. அந்​தப் பேரரசு உண்​மை​யில் அங்கே இருந்​தது என்று நம்ப வைப்​பது ஒளிப்​ப​தி​வாளரின் திறமை.

‘எந்​திரன்’ இந்த சிந்​தனையை இன்​னும் விரிவுபடுத்​தி​யது. ஒரு மனிதனின் பல உரு​வங்​கள் ஒரே காட்​சி​யில் தோன்​று​வது, ரோபோக்​களின் கூட்​டங்​கள், ஒன்​றோடொன்று இணை​யும் வடிவங்​கள் போன்ற காட்​சிகளில் கேமரா இயக்​கம், ஒளி, இடம் ஆகியவை மிகத் துல்​லிய​மாகக் கட்​டுப்​படுத்​தப்பட வேண்​டும்.

ஒரே நடிகரைப் பலமுறை படமாக்கி பின்​னர் ஒன்​றிணைக்​கும்​போது, கேமரா ஒரே பாதை​யில் அதே இயக்​கத்தை ஒளியமைப்பு மாறாமல் மீண்​டும் உரு​வாக்க வேண்​டும்.

விஎஃப்​எக்ஸ் கலைஞர் உரு​வத்தை உரு​வாக்​கலாம்; அந்த உரு​வம் எந்த உலகில் வாழ்​கிறது என்​பதை ஒளிப்​ப​திவு​தான் தீர்​மானிக்​கிறது. இங்​கு​தான் ‘க்​ரீன் ஸ்க்​ரீன்’ தொழில்​நுட்​பத்​தின் முக்​கி​யத்​து​வம் வரு​கிறது. ஒரு நடிகரை பின்​னர் வேறொரு உலகில் வைக்க வேண்​டி​யிருந்​தால், அவருக்​குப் பின்​னால் பச்​சைத் திரை அமைக்​கப்​படு​கிறது. பின்​னர் அந்​தப் பச்சை நிறம் நீக்​கப்​பட்டு அதன் இடத்​தில் புதிய பின்​னணி சேர்க்​கப்​படு​கிறது. ஆனால், பச்​சைத் திரை இருப்​பதே விஎஃப்​எக்ஸ் காட்​சி​யின் வெற்றி அல்ல. அதில் எவ்​வாறு ஒளியமைக்​கிறோம் என்​பதுதே பிர​தானம்.

பச்​சைத் திரை​யில் ஒளி சமமாகப் பட வேண்​டும். அதி​க​மான நிழல், சுருக்​கம், ஒளிப் பிர​திபலிப்பு அல்​லது நிற வேறு​பாடு இருந்​தால் பின்​னர் பச்சை நிறத்​தைத் தனி​யாகப் பிரிப்​பது சிரம​மாகும். பச்​சைத் திரைக்கு நாம் தரும் ஒளி​யும் நடிகருக்​குத் தரும் ஒளி​யும் ஒன்​றாக இருக்க வேண்​டிய அவசி​யமில்​லை. இது மிக​வும் முக்​கிய​மான ஒளிப்​ப​திவு நுணுக்​கம்.

பச்​சைத் திரையை சீரான வெளிச்​சத்​தில் வைத்​திருக்க வேண்​டும். நடிகருக்​குத் தேவை​யான ஒளி அவரது கதா​பாத்​திரம் வாழும் உலகத்​தின் ஒளி​யாக இருக்க வேண்​டும். உதா​ரண​மாக, நடிகர் பின்​னர் இருண்ட காட்​டுக்​குள் இருப்​ப​தாகக் காட்​டப்பட வேண்​டு​மா​னால், அவரை வெறும் பச்​சைத் திரை​யின் வெளிச்​சத்​துக்கு ஏற்ப ஒளியூட்​டி​விட்டு பின்​னர் இருண்ட பின்​னணி​யைச் சேர்த்​தால் காட்சி செயற்​கை​யாகத் தெரி​யும்.

பின்​னணி எப்​படி இருக்​கும் என்​பதை முன்​கூட்​டியே அறிந்​து, அந்த உலகத்​தின் ஒளியை நடிகர் மீது உரு​வாக்க வேண்​டும். அதாவது, திரைக்​குப் பின்​னால் பச்​சை; நடிகர் மீது கதை​யின் உலகம். இரண்​டை​யும் குழப்​பக்​ கூ​டாது. மேலும் பச்​சைத் திரை​யின் வெளிப்​பாடு மற்​றும் நடிகரின் வெளிப்​பாடு ஒரே அளவில் இருக்க வேண்​டிய​தில்​லை. பச்​சைத் திரை சமமாக​வும் போது​மான அளவிலும் வெளிப்பட வேண்​டும்; நடிகரின் வெளிப்​பாடு அவரது முகம், உடை, தோல் நிறம் மற்​றும் பின்​னர் சேர்க்​கப்​படும் உலகத்​தின் ஒளி ஆகிய​வற்​றைப் பொறுத்து தனி​யாகக் கட்​டுப்படுத்​தப்பட வேண்​டும்.

நடிகர் இருக்​கும் இடத்​தைத் துல்​லிய​மாகக் குறிக்க தரை​யில் குறி​யீடு​கள் இடப்​படு​கின்​றன. அவரது பார்வை எங்கு இருக்க வேண்​டும் என்​ப​தற்​கும் குறி​யீடு​கள் பயன்​படுத்​தப்​படும். பின்​னர் கணினி​யில் சேர்க்​கப்​படும் கதா​பாத்​திரம் அல்​லது பொருள் அந்த இடத்​தில்​தான் இருப்​ப​தாகக் கருதப்​படும்.இவ்​வாறு ஒரு சிறிய குறி​யீடு கூட பின்​னர் உரு​வாகும் பெரிய காட்​சி​யின் நம்​பகத்​தன்​மையை தீர்​மானிக்​கிறது.

கேமரா நகரும் விஎஃப்​எக்ஸ் காட்​சிகளில் சவால் இன்​னும் அதி​கம். லென்​ஸின் குவிய நீளம், கேம​ரா​வின் உயரம், கோணம், இயக்​கப் பாதை போன்ற தகவல்​கள் பதிவு செய்​யப்பட வேண்​டும். இல்​லை​யெனில் டிஜிட்​டல் பொருள் காட்​சிக்​குள் மிதப்​பது போலத் தோன்​றும். ஒளி​யும் அதே அளவு முக்​கிய​மானது. ஒரு டிஜிட்​டல் பொருளின் மீது விழும் ஒளி, அதைச் சுற்​றி​யுள்ள உண்​மை​யான உலகத்​துடன் பொருந்த வேண்​டும். சூரிய ஒளி, பிர​திபலிப்பு ஒளி, நிழல், சுற்​றுப்​புற நிறம் ஆகியவை அனைத்​தும் ஒரே இயற்கை விதி​யைப் பின்​பற்ற வேண்​டும்.

இதற்​காகப் படப்​பிடிப்​பின்​போது ஒளி​யின் தன்மை மற்​றும் திசையைப் பதிவு செய்​வது மட்​டுமல்​லாமல், பின்​னர் டிஜிட்​டல் உலகை உரு​வாக்க உதவும் ஒளித் தகவல்​களும் சேகரிக்​கப்​படு​கின்​றன. நவீன விஎஃப்​எக்ஸ் காட்​சிகளில் நடை​முறை விளைவு​களும் முக்​கிய​மானவை. உண்​மை​யான புகை, நீர், தூசி, தீ, மழை போன்​றவற்றை கேம​ரா​வில் பதிவு செய்​து, அவற்​றுடன் டிஜிட்​டல் விளைவு​களை இணைத்​தால் காட்​சிக்கு இயற்​கை​யான உணர்வு கிடைக்​கிறது.

நிஜத்​தைப் பயன்​படுத்​தக்​கூடிய இடத்​தில் பயன்​படுத்​தி, முடி​யாததை மட்​டும் கணினி​யிடம் ஒப்​படைப்​பதே சிறந்த அணுகு​முறை. விஎஃப்​எக்ஸ் என்ற காலத்​தின் ஒளிப்​ப​தி​வாளர் ஒரே நேரத்​தில் மூன்று உலகங்​களைப் பார்க்க வேண்​டும். கேமரா முன் இருக்​கும் நிஜ உலகம்; பின்​னர் உரு​வாகப்​போகும் கற்​பனை உலகம். இந்த இரண்​டை​யும் ஒன்​றாகப் பார்த்து நம்​பப்​போகும் பார்​வை​யாளரின் மன உலகம்.

கேமரா பார்க்​காததை ஒளிப்​ப​தி​வாளர் முன்​கூட்​டியே கணிக்க வேண்​டும். பச்​சைத் திரைக்கு முன்​னால் இன்​னும் உரு​வா​காத ஓர் உலகத்​தைப் பார்க்க வேண்​டும். அது​தான் விஎஃப்​எக்ஸ் காலத்​தின் புதிய விரி​வாக்​கப்​பட்ட ஒளிப்​ப​திவு.

(புதன்​தோறும் ஒளி​காட்​டுவோம்)

விஎஃப்எக்ஸ்: கேமராவும் கற்பனையும் சந்திக்கும் இடம் | ஒளி என்பது வெளிச்சமல்ல 52
திரைக்கதை: காட்சியின் நீல வரைபடம் | ஒளி என்பது வெளிச்சமல்ல 51

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in