

தனது கல்யாணக் கதையைப் பற்றி பேசும்போதெல்லாம் ‘முதல் வரன் முத்தான வரன்’ எனச் சொல்லி கல்லூரிக்கு போகும் முன்பே அவரின் பெற்றோர் கட்டாயப்படுத்தி தாய்மாமாவுக்கு கட்டிவைத்த கதையையும் மறக்காமல் சொல்லுவார் அத்தை மகள். அவரின் திருமணம் நடந்தது 90-களின் தொடக்கத்தில்... அக்கல்யாணத்தில் பாவாடை சட்டையில் விளையாடித் திரிந்த தங்கை, முதுகலை முடித்து சென்னைக்கு வந்த புதிய நூற்றாண்டின் தொடக்க வருடத்தில் ஒரு நாள், ‘நான் வேலைக்கு போகணும்; இப்போ எனக்கு கல்யாணம் வேணாம். அப்பாக்கிட்ட நீ பேசு’ என கலங்கிய கண்களுடன் என் தோள் சாய்ந்து சொன்னாள்.
பிறகு ‘சாஸ்தா கோயிலுக்கு பொங்கல் வைக்கணும்’ என்ற அப்பாவின் கட்டாயத்தால் சென்னையில் இருந்து கிளம்பி சொந்த ஊருக்கு சென்ற இரண்டாவது நாளில் கல்யாணத்துக்கு சம்மதித்து விட்டதாக அலைபேசியில் சொன்னாள். அதற்கும் காரணமாய் இருந்தது என் பெற்றோர் தங்கையிடம் ஓதிய ‘முதல் வரன் முத்தான வரன்’ என்ற மந்திரம்தான்.
இரண்டு கல்யாணங்களுக்குமான கால இடைவெளி ஒரு தசாப்தத்துக்கும் அதிகம். இதற்குள் வீட்டில் நடந்த கிராமத்துக் கல்யாணங்கள் மண்டபங்களுக்கு தங்களின் இருப்பிடங்களை மாற்றி கொண்டு விட்ட போதிலும், பெண்கள் கல்யாணத்துக்கு சம்மததிப்பதற்கான காரணத்தை மட்டும் கைவிடவில்லை.
80, 90-களிலில் இருந்து இன்றும் கூட கிராமங்களின் பல நிச்சயிக்கப்பட்ட கல்யாணங்களைத் தீர்மானிப்பது இந்த ‘முதல் வரன் முத்தான வரன்’ என்கிற மந்திரமே! இதை ஒரு சரடாக வைத்து கே.பாக்யராஜ் இயக்கி இருந்த படம்தான் ‘தூறல் நின்னு போச்சு’.
தன்னைப் பெண் பார்க்க வரும் முதல் மாப்பிள்ளைக்கே தன்னையும், தனக்கு மாப்பிள்ளையையும் பிடித்துவிட வேண்டும் என ஆற்றங்கரை புதுபிள்ளையாரிடம் அப்பாவி பெண் மங்களம் வேண்டுவதில் இருந்து படத்தை தொடங்கி, தன் பாணியில் திரைக்கதை அமைத்திருப்பார் பாக்யராஜ்.
தூறல் நின்னு போச்சு: 1982-ம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி நடித்திருந்த இந்தப் படத்தில் அவருடன், சுலோச்சனா, எம்.என்.நம்பியார், செந்தாமரை, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
மங்களம், ஆற்றங்கரையில் பிள்ளையார் வட்டம் போட்டு தன் வேண்டுதலில் வெற்றியடைந்த அடுத்த நாள், கனகம்பட்டியில் இருந்து அவளை பெண் பார்க்க சுற்றம்சூழ வருகிறார் மாப்பிள்ளை செல்லதுரை. அதுவும் எப்படி? ‘மாப்பிள்ளை வர்றார்... மாப்பிள்ளை வர்றார்... மாட்டு வண்டியில’ என்பது போல, டிராக்டர் வண்டியில் தார்பாய் கட்டிக் கொண்டு பகுமானமாய் வருவார். இருப்பதை வைத்துக் கொண்டு, தங்களுக்கான வசதிகளை உருவாக்கிக் கொள்வது கிராமங்களின் வழமை.
விவசாய வேலைகளுக்கான மாட்டு வண்டிகள் தேவையின்போது, கூண்டு வண்டிகளாய் மாறியது போல, மாட்டு வண்டிகளுக்கு மாற்றாய் வந்த டிராக்டர்களும் தேவையின் போது அதே மாற்றத்துக்கு உள்ளாகின. தங்களிடம் இருப்பதை வசதிகளாக்கிக் கொள்ளும் கிராமங்களில் அந்த வழமை இன்றும் நீடிகிறது. மாட்டுவண்டி தொடங்கி டிராக்டர் தொட்ட அவ்வழக்கம், இன்று குட்டியானை எனச் சொல்லப்படும் ‘டாடா ஏஸ்’ ஆட்டோக்கள் வரை தொடர்கிறது.
கூட்டுசேர்ந்து போகும் பாதயாத்திரை பயணங்களுக்கும், குடும்பத்துடன் போகும் குலதெய்வ வழிபாட்டுக்கும் செல்கையில் அவசரத் தேவைக்காக தார்பாய் போர்த்திக் கொண்டு வசதியான கூண்டு வண்டிகளாய் உருமாறிக் கொள்கின்றன ‘டாடா ஏஸ்’ ஆட்டோக்கள்.
சரி, நாம் மங்களம் வீட்டு பெண் பார்க்கும் நிகழ்ச்சிக்கு வருவோம்; மங்களத்தின் வேண்டுதலை ஆற்றங்கரை புதுப்பிள்ளையார் வெற்றிகரமாய் நிறைவேற்றி வைக்க, இரு வீட்டாருக்கும் ஒருவர் குடும்பத்தை மற்றவருக்கு பிடித்துப்போக கல்யாணத்துக்கான அடுத்தக்கட்ட வேலைகள் ஆரம்பமாகும்.
வயசு பொண்ணை வீட்டில் வைத்திருக்க வேண்டாமே என்கிற அப்பாவின் எண்ணத்திற்காய் கல்யாணத்துக்கு சம்மதித்து இருப்பாள் மங்களம். ஆனால் வரப்போற அந்த மாப்பிள்ளையைப் புரிந்து கொள்ள கிராமம் அவளுக்கு வாய்ப்பையும் கொடுத்திருக்கும்.
ஒருவகை கட்டாயக் கல்யாணங்களாக தோன்றினாலும் பெரியவர்கள் பார்த்து நிச்சயித்த இந்தக் கல்யாணங்கள், மங்களம் - செல்லதுரை போன்றவர்களுக்கு வாழ்நாளெல்லாம் நினைத்து மகிழும்படியான சில சுவாரஸ்யங்களையும் சேர்த்தே கொடுத்தன. அது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள ஊரும் உற்றாரும் வழங்கிய காதலிப்பதற்கான அங்கீகாரம்.
நிச்சயிக்கப்பட்ட பொண்ணைப் பார்க்க இல்லாத காரணம் சொல்லி, அறியாத சொந்தம் தேடி பெண் ஊருக்கு போகும் மாப்பிள்ளைகளுக்கும், கூரையேறி முற்றத்தில் குதித்து பல் இளிக்கும் வெயிலை மட்டும் துணைக்கு வைத்துக் கொண்டு, தேடிவந்த மாப்பிள்ளையிடம் பதுங்கி பேசிய பெண்ணுக்கும் முதலிரவு தொடங்கி முடிவு காலம் வரைக்கு பேசித் தீரா காதல் கதைகளையும் இந்த கல்யாணங்கள் உருவாக்கி கொடுத்தன. திருட்டு மாங்காய் ருசிப்பது போன்ற இந்த சுகானுபவம்தான் இக்கல்யாணங்கள் ஒளித்து வைத்திருக்கும் சுவாரஸ்யங்கள்.
தங்களின் கல்யாணங்களை ‘கட்டாயா கல்யாணம்’ என அங்கலாய்க்கும் அத்தை மகளும், தங்கையும் அவர்களின் கணவர்கள், அவர்களைப் பார்க்க வந்த வீர சாகச, காதல் கதைகளையும் சேர்த்தே பேசி மகிழ்வர். கிராம கல்யாணங்கள் கற்றுக்கொடுத்த இந்தக் காதலை ‘தூறல் நின்னு போச்சு’ படத்தில் தனது பாணியில் சுவாரஸ்யமாக சொல்லி இருப்பார் இயக்குநர் கே. பாக்யராஜ்.
பெண் பார்க்கும் படலத்துக்கு பிறகு, நிச்சயதார்த்த தேதியை சொல்வதற்காக தனது ஊரில் இருந்து 18 மைல் தள்ளி இருக்கும் மங்களத்தின் ஊருக்கு வருவான் செல்லதுரை. நிச்சயதார்த்த தேதியைச் சொல்ல வேண்டு என்பது ஒரு சாக்கு. தனக்கானவளை பார்க்க வேண்டும் என்பதே அந்தப் பயணத்தின் நிஜமான நோக்கம்.
கல்யாணங்கள் ஒரு ஆணை முழுமையாவனாக மாற்றுகிறது என்றால், அதற்கான ஆயத்த வேலைகளை இந்தத் திருட்டு பயணங்களும் சந்திப்புகளும் செய்கின்றன எனலாம்.
ஆபத்பாந்தவர்களாகும் அண்ணிகளும் அத்தைகளும்:
செல்போன்கள், வீடியோ கால் வசதிகள் இல்லாத அந்த காலத்து கிராமங்களில் மனதுக்கு பிடித்தவர்களை சந்திக்க இருந்த ஒரே வடிகால் நேரில்போய் பார்ப்பது மட்டும்தான். என்னதான் பொண்ணு கட்டப்போற ஊராக இருந்தாலும் விருந்தாளி போல் போய் ஊருக்குள் இறங்கிவிட முடியாது; அதற்கான சரியான காரணத்தை உருவாக்க வேண்டும், அடிக்கடிபோய் பார்க்கும் சாக்கை ஏற்படுத்த ஒரு சொந்தத்தை பிடிக்க வேண்டும்.
இப்படியான இக்கட்டான சூழலை சாமாளிக்க ஆண்டவனால் அனுப்பப்பட்ட ஆபத்பாந்தவர்கள் தான் அண்ணிகளும் அத்தைகளும். அவர்கள் இருவரும் அம்மா போன்றவர்கள் என்பது எந்தளவுக்கு நிஜமோ அந்த அளவுக்கு, அவர்கள் இந்த கல்யாண ஜோடிகளுக்கு ஆசி வழங்க வந்த தேவதைகள் என்பதும் நிதர்சனம்.
‘தூறல் நின்னு போச்சு’ படத்தில் செல்லதுரை, மங்களத்தின் வீட்டுக்கு வந்து, ‘வீட்டுல யாருங்க’ என கேட்கும்போது, வீட்டின் அடுக்களையில் இருந்து மங்களம் சொல்லும், ‘அப்பா சந்தைக்கு போயிருக்கு... அம்மா மணியாக்காரர் வீட்டுக்கு போயிருக்கு...’ என்ற வசனம் இன்றைய யூத்-களுக்கு ரீல்ஸ் மெட்டிரியல். அன்றைய யூத்-களுக்கோ தங்களின் திருமணத்தை நினைத்து பார்க்கும் ஒரு ‘நாஸ்டாலஜியா’!
படத்தில் வீட்டுக்குள் வந்து அமர்ந்திருக்கும் மாப்பிள்ளையிடம் பேச பக்கத்து வீட்டு பெண்கள் தயங்கி ஒளிந்து நிற்க, ஒருத்தி மட்டும் மங்களத்தின் பெரியப்பாவான குஸ்தி வாத்தியாரான நம்பியாரை அழைப்பார். அவரும் வந்து மாப்பிள்ளையிடம் வந்த காரணத்தை விசாரித்து விட்டு, ‘சொல்லிட்டு போலாம்னு வந்தீங்களா?! இல்ல அந்த சாக்குல பார்த்துட்டு போலாம்னு வந்தீங்களா’ எனக் கேட்டு, ‘இந்த மாதிரி விஷயத்துக்கு என்னை மாதிரி அனுபவஸ்தர்களைக் கூட வச்சுக்கணும்’ என தனது வயது வழங்கும் சவுகரியத்தை விவரிப்பார்.
அந்தக் காட்சி நம்பியாரின் கதாபாத்திரத்துக்காவும், படத்தில் அவர் மாப்பிள்ளைக்கு செய்யப்போகும் உதவிகளை நியாயம் செய்வதற்காகவும், பாக்யாராஜின் கொங்கு மண்டல கிராம பெண்களின் சினிமா பெருமைக்காவும் எழுதப்பட்டவை.
ஆனால் நிஜம் வேறு; உண்மையில் அந்த சவுகரியங்களும், வசதிகளும் அண்ணி, அத்தை உறவு முறைகளுக்கே அதிகம் உண்டு.
படத்திலும் ஆற்றங்கரையில் தண்ணீர் எடுக்க வரும் மங்களத்தை பார்க்க வந்த செல்லதுரையை பார்த்து பயந்து ஓடும் மங்களத்தை தடுத்து நிறுத்தி, திருட்டு மாங்காய் கடிக்கும் ருசியை அவளுக்கும், அடுத்து மாப்பிள்ளை செல்லதுரைக்கும் சொல்லிக் கொடுப்பது அதுமாதிரியான ஒரு அண்ணி கதாபாத்திரம் தான்.
அதேபோல் மங்களத்தை செல்லதுரை சந்திப்பது எல்லாம், ஆற்றங்கரையில் பகல் பொழுதில் தான். பேசிப் புரிந்து கொள்ளும் காதலின் கண்ணியத்தை உணர, பகல் பொழுதில் காதலிக்க வேண்டும். நமக்கானவள்தான் என்றாலும் அந்திக் காதலின் துளிர்க்கும் அத்துமீறல்களுக்கு கை விலங்கிட்டு, காத்திருத்தலின் சுவையை உணர்த்தும் பகல் காதல் தருணங்கள் ஏகாந்தமானவை. பாக்யாராஜ் – சுலோச்சனா சந்திப்பு காட்சிகள் அதை அழகாய் விளக்கி இருக்கும்.
காதலிக்கச் சொல்லித் தரும் இந்தக் கல்யாணங்கள் சில புதிய உறவுகளையும் உருவாக்கித் தரும். ரத்தச் சொந்தம் இல்லாமல் உருவாகும் இந்த உறவுகள் நம் வாழ்வின் இறுதி வரை பெரும் சொந்தமாய் தொடர்வதும் உண்டு. படத்தில் அப்படி மங்களத்தைப்பார்க்க வரும் செல்லதுரைக்கு தானாக அமைந்த ஒரு சொந்தம் தான் குஸ்தி வாத்தியார் சுப்பையாவின் உறவு. அதன் நிஜம் படத்தில் ஒரு காட்சியில் உணர்வுபூர்வமாய் வெளிப்பட்டிருக்கும்.
நல்லது கெட்டதுக்கு நாலு பேர் வேண்டும்:
இன்று கிராமங்களும் நகரங்களைப் போல மாறி வருகின்றன. ஒருகாலத்தில் தனி ஒருவரின் பிரச்சினைகளும் ஊரின் பிரச்சனையாக பார்க்கப்பட்டது. ஊரோடு ஒத்துப் போகதவர்களுக்கு தண்டனைகளும் வழங்கப்பட்டன. பெரும்பாலும் அது ஊரைவிட்டு விலக்கி வைப்பதாக இருந்தது.
அதாவது ஊர் விலக்கி வைக்கப்பட்டவர்களுடன் ஊரில் உள்ளவர்கள் உறவு பாராட்டக் கூடாது; உதவியும் செய்யக் கூடாது. அப்படி செய்தால் சமந்தப்பட்டவர்களும் ஊரை விட்டு தள்ளி வைக்கப்படுவார்கள். இந்த ‘ஊர் விலக்கி’ வைக்கும் சம்பவத்தை நமக்கு சட்டென நினைவுபடுத்தும் படமாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய ‘நாட்டாமை’ இருந்தாலும், அது அந்த ஊரிலுள்ள ஒரு தனிமனிதனின் சுயபகட்டு பேசும் படமாக சுருங்கி போயிருக்கும். ஆனால் காலத்தால் முந்தைய ‘தூறல் நின்னு போச்சு’ படம் கிராமங்களில் இருந்த ஒரு தண்டனை முறையாக மட்டும் இதை காட்சிப்படுத்தி இருக்கும்.
சில காரணங்களால் செல்லதுரை - மங்களத்தின் கல்யாணத்தில் தடை ஏற்பட தன்தரப்பு நியாயத்தைச் சொல்ல செல்லதுரை குஸ்தி வாத்தியார் வீட்டில் தங்கி இருக்க, ஊர் கட்டுப்பாட்டை மீறி அசலூர்க்காரரை தங்க வைத்த காரணத்துக்காக குஸ்தி வாத்தியாரை ஊரை விட்டு தள்ளி வைத்திருப்பார்கள். அந்த பிரச்சினையை பேச செல்லத்துரையும், குஸ்தி வாத்தியாரும் ஊர் பஞ்சாயத்திக்கு அழைக்கப்பட்டிருக்க, அங்கு குஸ்தி வாத்தியாரிடம் ஊர் பெரியவர் ஒருவர், ‘ஏம்பா சுப்பையா... நீயோ ஒண்டிக்கட்டை.. நாளைக்கு உனக்கு ஒரு நல்லது கெட்டதுன்னா, ஊர்தானப்பா எல்லாம் பார்க்கணும்’ என, தனிமனிதன் மீதான ஊரின் அதிகாரத்தை ஞாபகப் படுத்துவார்.
அதற்கு பதில் அளிக்கும் குஸ்தி வாத்தியார், ‘அதை எல்லாம் என் மகன் செல்லதுரை என்னை எடுத்துப் போடுவான்’ என்று செல்லதுரைக்கும் தனகுமான புதிய உறவை சபையில் பிரகடனப்படுத்துவார். இன்றைய ரசனைக்கு கிரிஞ்சாக இது தெரிந்தாலும், நிச்சயிக்கப்பட்ட பொண்ணை பார்க்கப் போன புது மாப்பிள்ளையை ஊரில் ஒரு புதுசொந்தம் ஏற்றுக்கொள்ளும் என்ற காலத்தின் நிஜத்துக்கான சாட்சி அக்காட்சி.
இளவரசிகளின் தந்தையர்:
வாய்ப்புக் கிடைக்கும் போது எல்லாம் துள்ளி எழும் ஆண் என்ற கர்வம் கைகட்டி வாய் பொத்தி நிற்கும் தருணம் ஒன்று உண்டு என்றால் அது அவனது மகளின் முன்நிற்கும் போது மட்டும்தான். இன்று ‘அப்பாக்களின் இளவரசிகள்’ வெளிப்படையாக சொல்லிக் கொள்ளும் சுதந்திரங்கள் எல்லாம் அன்றைய கிராமத்து பெண் பிள்ளைகளுக்கு வாய்க்கவில்லை. ஆனாலும் தாயிடமும் தாரத்திடமும் முறுக்கிக் கொண்டு அலைந்த ஆண்கள், மகளுக்காக மட்டும் எப்போதும் பணிந்து போக தயாராக இருந்தார்கள்.
படத்தில், செல்லதுரை - மங்களத்தின் கல்யாணம் நின்று போனதற்கான காரணங்களில் ஒன்று, மாப்பிள்ளை வீட்டார் கேட்ட வரதட்சணை. அவர்கள் கேட்ட பணத்தை கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் மங்களத்தின் அப்பாவை, செல்லதுரையின் பெற்றோர் அவமதித்து விட, மனமொத்துப் போன செல்லதுரை - மங்களத்தின் கல்யாணம் தடைபட்டு போகும்.
படத்தின் ஆரம்ப காட்சி ஒன்றில், ‘மங்களத்துக்கும் கல்யாண ஆசை வந்துருச்சா’ என அவளின் பெரியப்பா கேட்கும் போது, ‘எனக்கு ஆசை இல்ல, எனக்கு ஒரு கல்யாணம் பண்ணனும்னு அப்பா ஆசைப்படுது’ என்பாள் வெள்ளந்தியாக! அதே மகள், மனம் கவர்ந்தவனுக்காக வீட்டை விட்டு வெளியேறவும் துணிவாள். அவளின் முயற்சி தோல்வியடைய, அது அப்பாவுக்கும் மகளுக்குமான உறவில் விரிசல் விழச் செய்திருக்கும்.
ஆனால் தந்தையர்களை வழிக்கு கொண்டு வரும் தேவதைகளின் வித்தை காலந்தோறும் ஒன்றுதான். அது தந்தைக்கு எதிரான பட்டினிப் போர். வீட்டை விட்டு வெளியேறி தந்தையை ஊர் முன்பு தலைகுனிய செய்ததற்கு மங்களம் தன் பாதங்களைப் சுட்டுக் கொண்ட போது இறங்காத அவள் தந்தையிம் மனம், மகளின் பட்டினியால் உருகிப்போய் விடும்.
கட்டிலில் சுருண்டு படுத்து அழுதபடி இருக்கும் மகளின் பாதங்களைத் தடவி அந்தக் காயத்தில் அவளின் பசியை அப்பா செந்தாமரை உணர்வது, மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே எழுதத் தெரிந்த அழகிய காட்சிக் கவிதை.
80-களில் தமிழ் சினிமாவை தனது இசை வழியாக கட்டியாண்டு கொண்டிருந்த இளையராஜா இப்படத்திலும் பாடல்கள் மூலம் ஒரு ராஜ்ஜியம் நடத்தி, இசை வழி ஒரு கிராமத்தைக் காட்டியிருப்பார்.
காலத்தின் கறை: நிச்சயிக்கப்பட்ட ஒரு திருமணம் வரதட்சணையால் சந்திக்கும் சிக்கலை தனக்கே உரிய பாணியில் கே.பாக்யராஜ் எழுதி இருந்த இந்தப் படம் அன்று தமிழ் சினிமா பார்த்து வந்த ஆணின் பார்வையிலேயே இருக்கும்.
முதல் காட்சியில் 7 மாப்பிள்ளைகள் பார்த்துட்டு போய் இன்னும் கல்யாணம் நடக்காத மீனாட்சி அக்கா மாதிரி என்னையும் ஆக்கிறாத என மங்களத்தின் வேண்டுதல் வழியாக, விவரிக்கப்படாத காரணத்தால் திருமணம் கை கூடாத அந்த மீனாட்சி அக்கா மீது பரிதாபப்பட்டிருந்த இயக்குநர், பெண் பார்க்கும் வைபவத்தில் பெண்ணை அலங்காரம் செய்ய வந்த மீனாட்சியை சக பெண்கள் சகுனத் தடையாக பார்த்து வெளியே அனுப்புவதாகவும், உடனே இதே நிலை தனக்கும் வரக்கூடாது என மங்களம் வேண்டுவதுமாக காட்சி வைத்து, பெண்களுக்கு பெண்கள்தான் எதிரி என்ற ‘ட்டெம்லெட்டில்’ தப்பித்திருப்பார்.
இதே நிலைப்பாடு தான் நிச்சயதார்த்தத்தின் போதும், செல்லதுரையின் சித்தியை (அப்பாவின் இரண்டாவது மனைவி) வரதட்சணை கேட்க வைத்து, அப்பாவையும் மகனையும் மவுனியாக்கி ஆண்கள் அணிக்கு பச்சாதாபம் சேர்த்திருப்பார் இயக்குநர். பத்து பதினைந்து நிமிடம் பார்த்து பேசி காதலிப்பதற்காக கட்டிக் கொள்ளப்போகும் பெண்ணைப் பார்க்க 18 மைல் சைக்கிள் மிதித்து வரும் செல்லதுரை, அவளின் காலில் முள் குத்தியது என்பதற்காக ஆற்றுக்கு போகும் வழி நெடுக மலர்தூவி பாதையை பூ மெத்தையாக்கிய செல்லதுரை,
‘நான் வீட்டைவிட்டு ஓடி வந்தால் என் அப்பா செத்துப் போவரு’ என தன் பக்கத்து நியாயத்தைச் சொல்லி மங்களம் உடன் வர மறுக்கும்போது, தனது பேச்சைக் கேட்காத கோபத்தை அவளின் கன்னத்தில் கை விரல்பதித்து வெளிப்படுத்துவதும், இதே ஊரில் இன்னொரு பொண்ணைப் பார்த்து கல்யாணம் செய்வேன்' என கர்ஜிப்பதும் இயக்குநரின் திரைக்கதை யுக்தியின் திறமை என்பதை விட தமிழ் சினிமாவில் புரையோடிப் போன ஆண் வயப்பட்ட பார்வையாகவே புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.