கரகாட்டக்காரன்: வைக்கோல் வாசம் வீசும் கிராமத்து நினைவுகள் | சினிமாபுரம் 11

கரகாட்டக்காரன்: வைக்கோல் வாசம் வீசும் கிராமத்து நினைவுகள் | சினிமாபுரம் 11
Updated on
5 min read

‘பிள்ளைக்கு எப்போ கல்யாணம்?’ என்ற சம்பிரதாயக் கேள்வியிலேயே நிச்சயிக்கப்பட்ட எல்லா கல்யாணங்களும் தொடங்குகின்றன. சம்பந்தப்பட்ட வீட்டுக்காரர்கள்தான் கல்யாண நிகழ்வுகளைத் தொடங்கினாலும், பந்தகால் நடுவதில் இருந்து பந்தி பரிமாறுவது வரை, அதை நடத்தி முடிப்பதென்னவோ உறவும் ஊரும்தான். ஒவ்வொரு சாமனியனின் வாழ்க்கையிலும் ஆகச் சிறந்த பொக்கிஷங்கள் என்றால் அது கல்யாண ஆல்பம்தான்.

ஒற்றைக் கையால் தூக்க முடியாத அதன் பக்கங்கள் முழுவதும் விரவிக் கிடக்கிறது சுற்றம் நட்பின் ‘நாஸ்டாலஜியா’ நினைவுகள். அந்தப் பக்கங்களை புரட்டிப் பார்க்கும்போது எல்லாம் சந்தோஷம் மனதுக்குள் மத்தாப்பாய் பூத்து சிரிக்கும்.

அதைப்போலவே, ஒவ்வொரு முறையும் பார்க்கும்போது எல்லாம் இசையாலும், கதைமாந்தர்களின் கலாட்டாவாலும் மனதுக்குள் மத்தாப்பூ பூக்கச் செய்யும் திரைப்படம்தான் ‘கரகாட்டக்காரன்’. இளையராஜா இசையில், கங்கை அமரன் இயக்கத்தில் 1989-ம் ஆண்டில் வெளியானது ‘கரகாட்டக்காரன்’ படம்.

ஒரு வருடத்துக்கும் மேலாக ஓடிய படம். ராமராஜன் என்ற நடிகரை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சேர்த்தப் படம் என கோடம்பாக்கத்தில் இப்படத்துக்கான சாதனை பட்டியல் ஒன்றுண்டு. பாடல்கள், இசை, கதாபாத்திரத் தேர்வு என படத்தின் வெற்றிக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், மக்கள் இந்தப் படத்தைக் கொண்டாடி தீர்த்ததற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று அதில் காட்டப்பட்ட ‘கிராமம்’.

கரகாட்டக்காரன் (1989):

கிறுக்குப்பட்டி கிராமத்தில் இருக்கும் கரகாட்டக் குழுவின் பிரதான ஆட்டக் கலைஞரான காமாட்சி தனது வீட்டில் ஆட்டத்துக்கான ஒத்திகை பார்ப்பதில் இந்தப் படம் தொடங்கும். அந்த ஆண்டு அந்தக் கிராமத்தில் நடக்க இருக்கும் அம்மன் கோயில் திருவிழாவில் உள்ளூர் ஆட்டக்காரர்களை தவிர்த்து வெளியூர் கரகாட்டக்காரரான முத்தையனின் ஆட்டத்தை அமர்த்துகிறார் கோயிலின் புதிய தர்மகர்த்தா சின்னராசு. இது இரண்டு ஆட்டக்காரர்களுக்கு இடையில் முதலில் மோதலையும், பிறகு காதலையும் உண்டாக்குகிறது.

இந்தக் காதலுக்கு காமாட்சி மீதான சின்னராசுவின் பிரியமும், பழைய குடும்பப் பிரச்சினை ஒன்றும் தடையாக வர, தடைகளைத் தாண்டி அம்மன் அருளால் காதல் வெற்றி பெறுவதே கதை.

செல்லுலாய்டில் வீசிய வைக்கோல் வாசம்

நூறு நாள் வேலை, அறுத்தடிக்கும் இயந்திர வண்டிகள்  எட்டிப் பார்த்திடாத 80-களின் இறுதிகளில் கிராமங்களில் விவசாய வேலைகளே விரவிக் கிடந்தன. விவசாயம் என்பது விதைத்து, வளர்த்து, மனிதர்களின் ஆண்டுத்  தேவைக்காக அறுத்துக் கட்டுவது மட்டுமில்லை. தன்னுடன் கழனிகளில் பாடுபட்ட கால்நடைகளுக்கான தீவனத் தேவைகளையும் பராமரித்து பாதுகாப்பதும் அடங்கும்.  

அறுத்தடித்த நெல் மணிகளை வீடு கொண்டு சேர்ப்பது போல, மணிகள் உதிர்ந்த வைக்கோலை உலர்த்தி பக்குவமாய் வீட்டின் கொல்லையில் ‘படப்பு’ அடைவதும் ஒரு விவசாயின் பொறுப்பு கூட.

‘கரகாட்டக்காரன்’ படத்தில் காமாட்சியின் தாய் மாமனான பலராமனின் அறிமுக காட்சியில் ஊர்ப் பெயரிவர் ஒருவர் வைக்கோல் உலர்த்தியபடியே  பேசுவார்.

இந்தக் காட்சியில் இருந்து வைக்கோல் வாசம் வீசத் தொடங்கியிருக்கும்.

இதேபோல செந்தில், கோவை சரளா சந்தித்துக்கொள்ளும் காட்சி ஒன்றில், களத்து மேட்டில் சேர்க்கப்பட்டிக்கும் கதிர் கட்டுகளின் மீது அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். படத்தின் பெரும்பாலான காட்சிகளில் மாடுகளும் வைக்கோல் படப்புகளும் பதிவாகியிருக்கும். இப்படி நெல்லும் வைக்கோலுமான அன்றைய கிராமங்களை அழகாய் பதிவு செய்திருக்கும் இந்தச் செல்லுலாய்டு சித்திரம், படத்தைப் பார்க்கும்போது எல்லாம் வைக்கோல் வாசம் அதை உணர்ந்தவர்களின் நாசியை வருடுகிறது.

பண்டமாற்றின் கடைசிக் குரல் ஒலித்த படம்

அன்றைய கிராமங்களின் வழக்கங்களில் ஒன்று பண்டமாற்று வியாபாரம். பொருள் கொடுத்து பொருள் வாங்கும் வர்த்தக உலகத்தின் இந்த நதி மூலம் 90-களின் பாதி வரை கிராமங்களில் நடைமுறையில் இருந்தது. அறுவடைக்கு அறுவடை மட்டும் பணப் புழக்கம் அதிகம் இருக்கும் கிராமத்து வாழ்க்கையில், ஆசைக்கும் தேவைக்கும் வேண்டிய பொருள்களை வாங்க இருந்த வடிகால் இந்தப் பண்டமாற்றுதான்.

கரகாட்டக்காரன் படத்தில் முத்தையனின் கரகாட்டக் குழுவினர் தங்களின் காரைத் தள்ளிக் கொண்டு ஆடவரும் ஊருக்குள் நுழையும்போது, ஈயம் பித்தளைக்கு பேரீச்சம் பழம் விற்றுக்கொண்டு ஒருவர் வருவார். காமாட்சியின் வீட்டுக்கு போகும் போதும் வழியில் கார் நின்று விட, அப்போதும் அதே வியாபாரி பேரீச்சம் பழம் விற்றுக்கொண்டு வருவார். படத்தின் ஓட்டத்தோடு கலந்து வரும் இந்த நகைச்சுவைக் காட்சி, கிராமத்து வீதிகளில் ஒலித்த பண்டமாற்று வியாபாரத்தின் கடைசிக் குரலை தன்னுள் அடைகாத்து வைத்திருக்கிறது.

டீ கடையும் சினிமா போஸ்டரும்

கிராமங்களில் கூட இன்று டீ கடைகளின் முகங்கள் மாறிவிட்டன. ஆனால் இருபது, முப்பது வருடங்களுக்கு முன்பு மூங்கில் தடுப்புகளுக்கு பின்னால் திருநீற்றுப்பட்டடை பூசிய செம்பு வெந்நீர் பாய்லர் சகிதம் இருக்கும் அந்த டீ கடைகள் தான் கிராமத்து ஆண்களின் அரட்டைக் கச்சேரிக்கான இடம். பால் தீர்ந்து போனால் மூடப்படும் அந்தக் கடைகளில் காலையும் மாலையும் தேநீருடன் உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை அலசப்படும்.

கிராமத்து முகங்களாக இருந்த அந்தக் கடைகளின் இன்னுமொரு அடையாளம்தான் சினிமா போஸ்டர்கள். அந்த டீ கடைகளில் போஸ்டர் ஒட்டுவதற்கென்றே தனியாக ஓர் இடம் இருக்கும். பக்கத்து டவுனில் ஓடும் படங்கள் பற்றிய செய்திகளை அது தாங்கி நிற்கும்.

அந்த போஸ்டர்களிலும் இரு வண்ண, முழு வண்ண போஸ்டர்கள் என ரகங்கள் உண்டு. முக்கியமான படங்கள், நட்சத்திர நடிகர்களுக்கு மட்டும் கலர் போஸ்டர்கள் ஒட்டப்படும். மற்ற படங்களுக்கு இளஞ்சிவப்பு, பச்சை வண்ணங்களின் முதுகில் படத்தின் பெயர், நடிகர்கள், இயக்குநர், எத்தனை பாடல்கள், சண்டைக் காட்சிகள் என்ற தகவல்கள் கருப்பு எழுத்து தாங்கி நிற்கும்.

‘கரகாட்டக்காரன்’ படத்தில் காமாட்சியை பார்க்க முத்தையன் கிறுக்குப்பட்டி வரும்போது, அவர் காமாட்சி பற்றி அந்தக் கிரமாத்தின் அரட்டைக் கச்சேரி கூடமான ராமுமச்சான் டீ கடையில் தான் விசாரிப்பார். கதாபாத்திரங்களின் நையாண்டிகளைத் தவிர்த்து விட்டு நாம் அந்தக் கடையைக் கொஞ்சம் உற்று கவனித்தால்  அங்கே சில பல வண்ணங்களில் சினிமா போஸ்டர்கள் சிரித்தபடி கச்சேரி கேட்டுக் கொண்டிருக்கும்.

கிராமத்து கிளாசிக் ‘கரகாட்டம்’

கிராமத்துக் கோயில் கொடைகளில் தவிர்க்க முடியாத கலைகள் வில்லுப்பாட்டும், கரகாட்டமும். வில்லுப்பாட்டு பக்தியை பரப்பியது என்றால், உழைத்து களைத்து வரும் பாட்டாளிகளுக்கு கலகலப்பூட்டி மகிழ்வித்தது கரகாட்டம். பகலெல்லாம் உழைத்துக் களைத்தவர்கள், இரவெல்லாம் விழித்திருந்து கொடையில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக கலைஞர்களின் ஆட்டத்திலும் அங்கதத்திலும் காமம் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். ஆனால், முகம் சுழிக்க வைக்காது. காலத்தின் கோலத்தால் இந்த கிராமத்து கிளாஸ் கலை தன் முகமிழந்து ‘ரெக்கார்டு டான்ஸ்’ ஆக மாறி மதிப்பிழந்து விட்டது.

‘கரகாட்டக்காரன்’ படத்தில் காட்டப்பட்டது கிராமத்தில் ஆடப்படும் நிஜமான ஆட்டம் இல்லை என்றாலும், அதன் அடிப்படைகள் அதில் இருந்தன. படத்துக்காக தான் பல மற்றங்களைச் செய்ததாக  இயக்குநர் கங்கை அமரன் நேர்காணல் ஒன்றில் பதிவு செய்திருக்கிறார். ஆனாலும், சாமனியர்களுக்கான அந்த ஆட்டம்  இரவில்தான் ஆடப்படும் என்பதை படம் மிகச் சரியாக பதிவு செய்திருந்தது.

படம் தெரிந்தோ அல்லது தற்செயலாகவோ வேறு ஒரு நிஜத்தையும் பதிவு செய்திருக்கிறது. கராகட்டத்தில் பெண் கலைஞர்களே பிரதானமானவர்கள். ஆண்கள் அவர்களுக்கு காவலனாக பஃபூனாகவே வருவார்கள். கிராமங்கள் கலைகளில் கூட தன் தாய்வழி அடையாளத்தை விட்டுத்தரவில்லையோ என்னவோ?

இந்த உண்மையும் படத்தில் குறியீட்டு ரீதியாக பதிவாகி இருக்கும். திருவிழாவில் முதன்முறையாக ஆடும் முத்தையன், தன் மார்பின் குறுக்காக ஒரு துண்டு அணிந்திருப்பார். அவர் போட்டி நடனத்தின் போதும், கடைசியில் ஊர் தண்டனையை ஏற்று காமாட்சியுடன் சேர்ந்து ஆடிவரும் போதும, மார்பில் ‘சன்ன வீரம்’ போல இரண்டு மாலைகளை குறுக்கு வாக்கில் அணிந்திருப்பார். இது அந்த க்ளைமாக்ஸ் பாடலில் அழகாக பதிவாகி இருக்கும்.

இளையராஜா மீட்டிய கிராமம்

இந்தப் படத்தின் பசுமை மாறா நினைவுகளுக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று இசை. அந்தக் காலக்கட்டத்தில் தனித்து இசை ராஜாங்கம் நடத்திக் கொண்டிருந்த இளையராஜா தன் இசையில் கிராமத்தின் தனித்த அம்சங்களை வடித்திருப்பார். அது படத்தின் முதல் காட்சியிலேயே தொடங்கி விடும் அவரின் அம்மாயம் இறுதிக் காட்சி வரை தொடரும்.

கரகாட்டக் கலைஞர்கள் தங்களுக்குள் செய்து கொள்ளும் நையாண்டியை, ‘பாம்பப்பர பாம்பப்பம்...’ என இசைத்து தன் தர்பாரைத் தொடங்கி இருப்பார். அதேபோல் அந்த இறுதி அம்மன் பாடல்,  மேற்கத்திய இசைக் கருவிகள் இழையோட, பாரம்பரிய வாத்தியங்களின் முழக்கத்தில் அவர் நடத்தி காட்டியிருக்கும் பிரம்மாண்டம் சாமக்கொடையில் மனம் உணரச் செய்யும் ஓர் அசாத்திய அமைதியையும் அருளையும் கேட்கும் போதெல்லாம் நமக்கும் எழச்செய்யும்.

இன்னும் இன்னும் நினைவுகள்

‘கரகாட்டக்காரன்’ படம் என்றதும் சட்டென ஞாபகத்துக்கு வருவது வாழைப்பழ காமெடி தான். அந்த காமெடியுடன் நீக்கமற நிறைந்திருப்பது அது நிகழும் களம். ‘ஒரு வாழப்பழம் இங்க இருக்கு... அந்த இன்னொன்னு எங்க?’ என கவுண்டமணி கேட்க நினைக்கும் போதே சிரிப்பு வர வைக்கும் அந்த நிகழ்களம் அந்த ஊரின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. கிராமத்து பள்ளிக்கூடங்கள் இப்படி பொதுப் பயன்பாட்டுக்கும்  பயன்படுத்திக் கொள்வதுண்டு என்ற நிஜம் அழகாக பதிவாகி இருக்கும்.

அதேபோல், காமாட்சியின் வீட்டில் அவர்களது குழுவினரின் தவில் நாதஸ்வரம் எல்லாம் வீட்டின் பிரதான அறையில்தான் மாட்டி வைக்கப்பட்டிருக்கும். அன்றைய கிராமத்தின் வீடுகளில் புழங்கு பொருட்கள்தான் பிரதான இடம் பிடித்திருந்தன என்ற உண்மையை அந்த வீடு அடைகாத்திருக்கும்.

அன்றைய கிராமங்களின் பிரதான போக்குவரத்து வாகனம் மாட்டு  வண்டிகளே, பாரம் அடிக்க தட்டு வண்டி, பயணங்களுக்கு  கூண்டு வண்டி... அவசரத் தேவைகளுக்கு தட்டு வண்டிகளும் கூண்டு வண்டிகளாக மாறுவதும் உண்டு. படத்தில் காமாட்சி கத்திக் குத்து காயம்பட்டு மருத்துவமனையில் இருந்து கூண்டு வண்டியில் திரும்பி வருவார். அது பயணங்களுக்கான கூண்டு வண்டி. அந்தக் கூண்டில் வண்ணம் அடிக்கப்பட்டு காற்றுக்காக சின்ன சாளரம் எல்லாம் இருக்கும்.

ஆனால், ஒரே ஊரில் ஆடப்போகும் இரண்டு கரகாட்டக் குழுவினரையும் அழைத்துச் செல்ல வந்திருக்கும் கூண்டு வண்டிகள்  தற்காலிகமானவை. அவை தேவைக்காக உருவாக்கப்பட்டவை.

நினைக்க நினைக்கத் திகட்டாத கிராமத்து நினைவுகளை புதைத்து வைத்திருக்கும் ‘கரகாட்டக்காரன்’ படம், ஆட்டக் கலைஞர்களை இந்தச் சமூகம் ஆபாசமாக பார்க்கும் நிஜத்தையும் சேர்த்தே வைத்திருக்கிறது.

கரகாட்டக்காரன்: வைக்கோல் வாசம் வீசும் கிராமத்து நினைவுகள் | சினிமாபுரம் 11
சினிமாபுரம் - 10 | பாஞ்சாலங்குறிச்சி - உப்புக்கண்ட மணமும், செம்மறி ஆட்டின் முடையும்!
கரகாட்டக்காரன்: வைக்கோல் வாசம் வீசும் கிராமத்து நினைவுகள் | சினிமாபுரம் 11
சினிமாபுரம் - 9 | தேவர் மகன்: மறக்கப்பட வேண்டிய அழகிய(ல்) வன்முறைக் கனவு!
கரகாட்டக்காரன்: வைக்கோல் வாசம் வீசும் கிராமத்து நினைவுகள் | சினிமாபுரம் 11
சினிமாபுரம் - 8 | சின்னக் கவுண்டர் - மொய் விருந்தின் மறுபக்கத்தைக் காட்டிய முக்கியப் படைப்பு!
கரகாட்டக்காரன்: வைக்கோல் வாசம் வீசும் கிராமத்து நினைவுகள் | சினிமாபுரம் 11
சினிமாபுரம் - 7 | மதயானைக்கூட்டம் - ஆணாதிக்கத்தால் வாதை சுமந்த பெண்களின் கதை!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in