

ஜனநாயகன் vs பராசக்தி
‘ஜனநாயகன்’ மற்றும் ‘பராசக்தி’ ஆகிய படங்களின் தணிக்கை பிரச்சினைகள் முடிவுக்கு வரும் என நம்பிக்கை பிறந்துள்ளது. இதனால் படக்குழுவினர் நிம்மதி அடைந்துள்ளனர்.
ஜனவரி 9-ம் தேதி ‘ஜனநாயகன்’ மற்றும் ஜனவரி 10-ம் தேதி ‘பராசக்தி’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. இந்த இரண்டு படங்களின் தணிக்கை பணிகளும் தொடங்கப்பட்டன. இரண்டுக்குமே தணிக்கை அதிகாரிகளிடம் சிக்கல் ஏற்பட்டது. இதனால் திட்டமிட்டப்படி சான்றிதழ் வாங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனை முன்வைத்து டிக்கெட் முன்பதிவு தொடங்குவதிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
தமிழக திரையரங்க உரிமையாளர்கள் பலரும் தணிக்கை சான்றிதழ் இல்லாமல் டிக்கெட் முன்பதிவு தொடங்காமல் இருந்தனர். சில திரையரங்குகள் தணிக்கை சான்றிதழ் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் முன்பதிவை தொடங்கினர். ஒருவழியாக நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு ‘பராசக்தி’ படத்துக்கு மட்டும் தணிக்கை பிரச்சினை தீர்ந்துள்ளது. 2 மணி நேரம் 34 நிமிடங்கள் ஓடக் கூடிய படமாக ‘பராசக்தி’ தணிக்கைச் செய்யப்பட்டு இருக்கிறது.
இதையடுத்து, ‘பராசக்தி’ படத்தின் டிக்கெட் முன்பதிவு சூடுபிடித்துள்ளது. அதேநேரத்தில், ‘ஜனநாயகன்’ படத்துக்கான தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான வழக்கு விரைந்து நடைபெற்று வருகிறது. இதனால், மிக விரைவில் இதற்கும் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.