

அர்ஜுன் பிரபாகரன், ஆராத்யா முதன்மை வேடங்களில் நடித்துள்ள திரைப்படம், ‘பேட்டில்’. சுப்பிரமணியம் சிவா, சரவண சுப்பையா, காயத்ரி, முனீஷ்காந்த், உறியடி சுருளி, திஹான், திவ்ய ஸ்ரீ உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
எலைட் டாக்கீஸ் சார்பில் கே.பாஸ்கரன் தயாரித்துள்ள இப்படத்தை நாராயணன் பழனி இயக்கியுள்ளார். ஜீவா இசையமைத்துள்ளார். யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இதன் டிரெய்லர் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ஏப். 24-ம் தேதி படம் வெளியாகிறது.
படம் பற்றி இயக்குநர் நாராயணன் பழனி கூறும்போது, “நல்ல அரசு நாட்டுக்கு எவ்வளவு முக்கியமோ, நல்ல கல்வியும் அவ்வளவு அவசியமானது. அதை வலியுறுத்தும் படம் தான் இது. தரமான கல்வியை அனைவரும் பெறுவதற்கு தடையாக உள்ள கல்வி வியாபாரம் குறித்து சொல்லியிருக்கிறோம். மியூசிக்கல் லவ் ஸ்டோரியாக உருவாகி இருக்கும் இப்படம் முக்கியமான சமூக சிக்கல் ஒன்றையும் வெளிச்சம் போட்டுக்காட்டும்” என்றார்.