

‘டிமாண்டி காலனி 3’
அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் ‘டிமாண்டி காலனி 3’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.
அருள்நிதி – அஜய் ஞானமுத்து கூட்டணியில் வெளியான படம் ‘டிமாண்டி காலனி’. இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை முன்வைத்து இதன் 2-ம் பாகம் உருவாக்கப்பட்டது. அதுவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது அதன் தொடர்ச்சியாக 3-ம் பாகத்தினை படக்குழு உருவாக்கி இருக்கிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
கோடை விடுமுறைக்கு ‘டிமாண்டி காலனி 3’ வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அஜய் ஞானமுத்து இயக்கி வரும் இப்படத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன், முத்துக்குமார்உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் குறித்து இயக்குநர் அஜய் ஞானமுத்து, “புது வருடத்தில் 'டிமாண்டி காலனி3' படத்தின் முதல் பார்வை போஸ்டரை பகிர்ந்து கொள்வது எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். படத்திற்கு முழு ஆதரவு கொடுத்த சுதன் சாருக்கு நன்றி. கதையில் எந்தவிதமான தலையீடும் செய்யாமல் எங்களை சுதந்திரமாக பணிபுரிய வைத்தார். நடிகர் அருள்நிதிக்கும் நன்றி. முந்தைய படங்களை விட இதில் அருள்நிதியின் நடிப்பை நிச்சயம் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.