

அர்ஜுன், அபிராமி நடிப்பில் உருவாகியுள்ள படத்துக்கு ‘பிளாஸ்ட்’ என தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் புதிய படம் ஒன்றில் நடித்திருந்தனர். பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் தலைப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் சுபாஷ் கே.ராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ‘பிளாஸ்ட்’ என தலைப்பிட்டுள்ளது படக்குழு.
குடும்ப பின்னணியில் ஆக்ஷன் த்ரில்லராக இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இதில் ஜான் கொக்கேன், திலீபன், பவன், அர்ஜுன் சிதம்பரம், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதற்கு இசையமைப்பாளராக ‘கே.ஜி.எஃப்’ புகர் ரவி பஸ்ரூர் பணிபுரிந்துள்ளார். அவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது.
இப்படம் குறித்து இயக்குநர் சுபாஷ் கே.ராஜ் கூறும்போது, “அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் ஆக்ஷன் திரைப்படமாக இது அமைந்துள்ளது. தாய், தந்தை, மகள் ஆகியோரைக் கொண்ட அன்பான குடும்பத்துக்கும், தீமை ஒன்றையே குறிக்கோளாக கொண்ட, எதற்கும் துணிந்த ஒரு பயங்கர கும்பலுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்கள் தான் ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் மையக்கரு.
எனது முதல் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருப்பதையும் அதில் அர்ஜுனை இயக்கியதையும் மிகப் பெரிய வாய்ப்பாக கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.