

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகி, திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் 'டிசி' திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
குறிப்பாக, படத்தின் வெளியீட்டுக்கு சில மாதங்களுக்கு முன்பே வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த 'ராகா ஆஃப் ரிவெஞ்ச்' இசைத் துணுக்கு எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது குறித்து இசையமைப்பாளர் அனிருத் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்துப் பேசிய அனிருத், “இந்த இசைத் துணுக்கு ஆரம்பத்தில் தனிப் பாடலாக உருவாக்கப்படவில்லை. பிரான்ஸில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் 'டிசி' திரைப்படத்தின் ட்ரெய்லரைத் திரையிடத் திட்டமிட்டிருந்தனர்.
ட்ரெய்லரைச் சமர்ப்பிக்கக் கேன்ஸ் நிர்வாகம் அளித்த 48 மணி நேரக் கெடுவுக்குள் பின்னணி இசையமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போதுதான், இந்த ட்ரெய்லர் இசையை இணையத்திலும் ஏன் வெளியிடக் கூடாது என்ற யோசனை தோன்றி, உடனே வெளியிட்டோம்." என்று கூறியுள்ளார்.
மேலும், அந்த இசையின் கலவை குறித்துப் பேசிய அவர், "கேன்ஸ் சர்வதேச விழா என்பதால், நமது இந்திய இசையின் அடையாளத்தை உலகளவில் கொண்டு சேர்க்க விரும்பினேன். அதற்காகத் தென்னிந்திய தாளத்தையும், வடஇந்திய இந்துஸ்தானி குரலிசையையும் இணைத்து இந்த டிராக்கை உருவாக்கினோம். ட்ரெய்லருக்குக் கிடைத்த அபார வரவேற்பைத் தொடர்ந்து, ரசிகர்கள் விடுத்த தொடர் கோரிக்கையை ஏற்று அந்த இசையைத் தனித் பாடலாகவும் வெளியிட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத்தின் பின்னணி இசை படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளதாக விமர்சகர்களும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.