

“ஒவ்வொரு சினிமா ரசிகரும் பார்க்க வேண்டிய படம். புரிந்துகொள்பவர்களுக்கு இது ஒரு கவிதை” என்று ‘டிசி’ படத்தை அல்லு அர்ஜுன் புகழ்ந்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ், அல்லு அர்ஜுன் இருவரும் இணைந்து பணியாற்றப் போவதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டு ‘AA23 மற்றும் LK7’ என்று தற்காலிகமாக அந்தப் படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. படத்துக்கான முன்தயாரிப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள ‘டிசி’ படத்தை அல்லு அர்ஜுன் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘டிசி’ படம் பார்த்தேன். தமிழின் சிறந்த படம். புரிந்து கொள்பவர்களுக்கு அப்படம் ஒரு கவிதை. படக்குழுவினருக்கு எனது பாராட்டுகள். இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு மிகப் பெரிய மரியாதைகள். அனிருத், உண்மையில் பெரிய ஆற்றல் ஊக்கி நீங்கள்.
அனைத்து கலைஞர்களும் சிறப்பாக பணியற்றியுள்ளார்கள். குறிப்பாக வாமிகா கபி. நிச்சயமாக படத்தின் கதாநாயகன், எனது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தை தாங்கும் தூணாக பலம் சேர்த்துள்ளார்’ என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், இன்னுமொரு பிரபல தெலுங்கு நடிகரான மகேஷ் பாபுவும் ‘டிசி’ படத்தை பாராட்டியுள்ளார். அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘டிசி’ என்ன ஒரு புதுமையான, சிறந்த படம். அருமையாக இருந்தது. படத்தின் ஒவ்வொரு பகுதியையும் ரசித்தேன். ஒட்டு மொத்த படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தேவதாஸ் என்ற கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘டிசி’. இந்த கேங்ஸ்டர் டிராமா படத்தில் சந்திரா என்ற கதாபாத்திரத்தில் வாமிகா கபியும், பார்வதி என்ற கதாபாத்திரத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் நடித்துள்ளனர். படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.