

வடசென்னை மக்களின் வாழ்வியலைப் பேசும் ‘ஆல்பாஸ்’ படத்தை மைதீன் இயக்கியுள்ளார். இதில், துஷ்யந்த், ஜனனி, லியோ, ஜெயப்பிரகாஷ், சரத் லோகிதஸ்வா, செந்தி குமாரி, சுப்பிரமணிய சிவா, வினோதினி உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஒன் ஸ்டெப் என்டர்டெயின்மென்ட் சார்பில் மோகனா.ஆர் தயாரித்துள்ளார். ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்துள்ள இப்படத்துக்கு தில் ராஜு ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் இசை, டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், விக்ரமன், தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் ஜேம்ஸ் வசந்தன் பேசும்போது, “இந்தப் படத்தில் அனைத்து கலைஞர்களும் அற்புதமாக உழைத்துள்ளார்கள். நான் அனைத்துப் படங்களையும் மனதுக்கு நெருக்கமாகப் பார்ப்பேன். சில படங்களைப் பார்க்கும்போது, ஏன் இவ்வளவு வன்முறை எனத் தோன்றும். ஆனால் இந்தப்படம் பார்க்கும் போது உங்களுக்கு எந்த கேள்வியும் தோன்றாது. மன அமைதி கிடைக்கும்.
இப்படத்தின் கலை இயக்குநருக்குத் தேசிய விருது கிடைக்கும். அந்தளவு உழைத்திருக்கிறார். இப்படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைத்து இசைக் கலைஞர்களுக்கும் என் நன்றிகள். வடசென்னையை யாரும் காட்டாத கோணத்தில் இயக்குநர் காட்டியுள்ளார். இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.