“அதிகார துஷ்பிரயோகம்” - ‘ஜனநாயகன்’ படக்குழுவுக்கு இயக்குநர் அஜய் ஞானமுத்து ஆதரவு

“அதிகார துஷ்பிரயோகம்” - ‘ஜனநாயகன்’ படக்குழுவுக்கு இயக்குநர் அஜய் ஞானமுத்து ஆதரவு
Updated on
2 min read

சென்னை: ‘ஜனநாயகன்’ படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படாதது குறித்து இயக்குநர் அஜய் ஞானமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் ‘அதிகாரத்தின் முழுமையான துஷ்பிரயோகம். எந்தவொரு திரைப்படமும் ஒரு தனி நபரை மட்டும் சார்ந்தது அல்ல. ஒரு படம் திரைக்கு வந்து சேருவதற்கு நூற்றுக்கணக்கான மக்களின் உழைப்பும், பணமும் அதில் அடங்கியிருக்கிறது. படக்குழுவினருக்கு எனது முழு ஆதரவும் உண்டு. இது தளபதியின் படம், அதுவும் அவரது பிரியாவிடை  படம். இது எப்போது வெளியானாலும், முன்னெப்போதும் இல்லாத வகையில் நாங்கள் அதைக் கொண்டாடுவோம். தலைவன் படம் எப்போ ரிலீஸ் ஆகுதோ அப்போதான் தியேட்டர் பக்கம் போவேன்” என்று பதிவிட்டுள்ளார்.

என்ன நடந்தது? -  விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் ஜனவரி 9 அன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழை வழங்க மத்திய தணிக்கை வாரியம் தாமதிப்பதால், தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தது

இந்த வழக்கை இன்று நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். தணிக்கை குழு சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில், “பதில் மனு தாக்கல் செய்ய அனுமதித்தால் நீதிமன்றம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் முழுமையான பதில் அளிக்கப்படும். இப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியது மத்திய அரசின் முடிவல்ல. படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் உள்ளது.

திரைப்படத்தில் பாதுகாப்புப் படைகளில் சில சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும். ஜனநாயகன் படத்துக்கு எதிராக புகாரளித்தவர் தணிக்கைக் குழு உறுப்பினர். சில காட்சிகளை நீக்கினால் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்த பின்னரும் கூட படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப அதிகாரம் உள்ளது. இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் எந்த உள்நோக்கமும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டது.

ஜனநாயகன் படக்குழு தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், “பெரும்பான்மை உறுப்பினர் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரை செய்துள்ளனர். பெரும்பான்மை ஆதரவு இல்லாவிட்டால் மட்டுமே மறு ஆய்வுக்கு அனுப்ப முடியும். ஆனால், ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கின்றனர்” என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நீதிபதி பி.டி.ஆஷா, “ஆட்சேபங்கள் பரிசீலிக்கப்படவில்லை என்று மட்டுமே புகாரில் கூறப்பட்டுள்ளது, அந்த புகார் நிலைக்கத்தக்கதல்ல. படத்துக்கு யு/ஏ சான்று வழங்க முடிவு செய்த பின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? யு/ஏ சான்றிதழ் ஒப்புதல் அளித்த குழுவில் இருந்த நபரே எப்படி தனி புகார் அளிக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.

இதனை தொடர்ந்து, ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கில் நாளை மறுநாளுக்குள் (ஜன.9) தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி உத்தரவிட்டார்.

ஜனநாயகன் படம் ஜன.9-ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நாளையோ அல்லது நாளை மறுதினம் காலையோ தீர்ப்பும் வெளியாகும் எனத் தெரிவதால், இப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.

“அதிகார துஷ்பிரயோகம்” - ‘ஜனநாயகன்’ படக்குழுவுக்கு இயக்குநர் அஜய் ஞானமுத்து ஆதரவு
ஜனநாயகன், பராசக்தி படங்களுக்கு தீர்ந்ததா தணிக்கை பிரச்சினைகள்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in