

ரஜினிகாந்த் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ‘தர்மன்’ படத்தில் ஸ்ரீலீலா இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்த தகவலை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அதன் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், ‘அவரிடம் அந்த நெருப்பு இருக்கிறது. அவரிடம் அந்த பிரகாசம் இருக்கிறது. அழகிய ஸ்ரீலீலாவை ‘தர்மன்’ படத்துக்கு வரவேற்கிறோம்’ எனத் தெரிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலீலா கன்னடத்தில் வெளியான ‘கிஸ்’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் இவர், தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘பராசக்தி’ படத்தில் நடித்திருந்தார். தனுஷின் ‘ஓம்’ படத்தில் நடித்திருக்கும் இவர், அஜித்குமார் அடுத்து நடிக்க இருக்கும் ‘டேர் டெவில்’ படத்திலும் இணைந்துள்ளார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல்ஹாசன், டர்மெரிக் மீடியாவுடன் இணைந்து தயாரிக்கும் ‘தர்மன்’ படத்தை 'ஓ மை கடவுளே', 'டிராகன்' படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இந்தப் படத்தில் ஏற்கெனவே சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு மற்றும் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
தர்மன் படத்தின் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு செப்டம்பரில் நிறைவடைந்தாக படத்தின் இயக்குநர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு நயன்தாராவும், தற்போது ஸ்ரீலீலாவும் இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் ராகவ் எடிட்டிங் பணிகளைக் கவனிக்கிறார்.