

புதுடெல்லி: பண மோசடி வழக்கில் ஆஜராகாத நடிகை நோரா பதேஹிக்கு டெல்லி நீதிமன்றம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர், அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களுடன் நட்பு இருப்பதாகக் கூறி தொழிலதிபர்கள், அரசியல்பிரபலங்கள் உள்பட பலரை ஏமாற்றி பணமோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு உள்பட சில வழக்குகளில் கைது செய்யப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டார்.
அங்கு இருந்தவாறே தொழி லதிபர் ஷிவிந்தர் சிங்கின் மனைவி அதிதி சிங்கை ஏமாற்றி ரூ.200 கோடி மோசடி செய்தது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் மீது டெல்லி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவ்வழக்கில் இந்தி நடிகை நோரா பதேஹியிடம் போலீஸார் ஏற்கெனவே விசாரணை நடத்தினர்.
இவ்வழக்கு தொடர்பாக நோரா பதேஹி நவ.2-ம் தேதி ஆஜராக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. “மிகக் குறைந்த அவகாசத்தில்தான் சம்மன் கிடைத்தது.முந்தைய தொழில்முறை ஒப்பந்தங்கள் காரணமாக ஆஜராக முடியவில்லை” என்று நோராவின் வழக்கறிஞர்கள் கூறினர். ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி மனு தாக்கலும் செய்தனர்.
இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி ககன் தீப் சிங், “நீதிமன்ற நடவடிக்கை களை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவர் ஒரு சாட்சி. கட்டாயம் ஆஜராகி இருக்க வேண்டும். அவரது நடவடிக்கை ஏற்றுக்கொள்ளும்படி இல்லை” என்று எச்சரித்தார். பின்னர் நவ.6-ல் கண்டிப்பாக ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். நடிகை நோரா பதேஹி ‘ஜெயிலர் 2’ படத்தில் ஒரு பாடலுக்கு நடன மாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.