

நடிகை ஷாஷா சிவகுமார்
சஜீவ் பழூர் இயக்கியுள்ள ‘என்ன விலை’ படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன், ஷாஷா சிவகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் செப்.17-ல் வெளியாக இருக்கிறது.
ராமேஸ்வரம் அருகே கடலில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் நாணயங்களை மீட்டெடுத்து வாழும் ஒருவரின் கதையை மையமாகக் கொண்டது இப்படம். இதில் நடித்த அனுபவம் பற்றி ஷாஷா சிவகுமார் கூறும்போது, “இதற்கு முன் ரத்னம், லவ் ஓ லவ் உள்பட சில படங்களில் நடித்திருக்கிறேன். நான் ஆர்க்கிடெக்ட். நடிப்பு ஆசையால் சினிமாவுக்கு வந்துவிட்டேன். என்ன விலை படத்தில் மணிமேகலை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.
முதன்முறையாகக் கிராமப்புறப் பெண்ணாக நடித்திருக்கிறேன். படப்பிடிப்புத் தளத்துக்குச் செல்வதற்கு முன்பே இந்தக் கதாபாத்திரத்துக்காக என்னை தயார்படுத்திக் கொண்டேன். அது நடிப்பதற்கு எளிதாக இருந்தது. இது எனக்கு முற்றிலும் மாறுபட்ட அனுபவம்.
இதில் நடித்த கருணாஸ் அற்புதமான நடிகர். நிமிஷா திறமையானவர். அவர்களுடன் இணைந்து நடிக்கும்போது இயல்பாகவே நமக்கும் பொறுப்புணர்வு வந்துவிடும். மலையாளத் திரையுலகைச் சேர்ந்தவர்களுடன் பணியாற்றியது கற்றல் அனுபவமாக இருந்தது” என்றார்.