

நடிகை ரோஜா
நடிகை ரோஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ள திரைப்படம் ‘அன்பே டயானா’. பாரி இளவழகன் இயக்கி, நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன் என பலர் நடித்துள்ளனர்.
இதில் நடித்தது பற்றி ரோஜா கூறும்போது, “இந்தப் படத்தில் அம்மாவாக நடித்துள்ளேன். கதைப்படி, சென்னையில் குடியேறிய தெலுங்கு குடும்பம் என்பதால் படத்தில் தெலுங்கு பேசி நடித்துள்ளேன். இயக்குநர் பாரி இளவழகன், என்னை மனதில் வைத்து தான் இந்தக் கதாபாத்திரத்தை எழுதினேன் என்று சொன்னார். கதையோடு என்னால் முழுவதுமாக கனெக்ட் ஆக முடிந்தது. ரசிகர்களுக்கும் இந்தப் படம் பிடிக்கும். படப் பிடிப்பில் மிகவும் ஜாலியாக, ரசித்து நடித்தேன்.
12 வருடத்துக்கு முன் விஜய்யின் ‘காவலன்’ படத்தில் அசினுக்கு அம்மாவாக நடித்தேன். அப்போது விஜய், “நீங்கள் அம்மாவாக நடிக்கிறீர்களா ?” என்று நம்ப முடியாமல் கேட்டார். ஒரு ஹீரோவே இப்படிக் கேட்கிறாரே, தவறாக அம்மா கேரக்டரை தேர்வு செய்துவிட்டோமோ ?” என்று நினைத்து அம்மாவாக நடிப்பதைத் தவிர்த்து விட்டு, சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்குச் சென்றுவிட்டேன்.
இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளேன். அடுத்து ‘லெனின் பாண்டியன்’ படத்திலும் நடித்திருக்கிறேன். நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் தொடர்ந்து நடிப்பேன். ஆந்திர அரசியலில் நான் வெற்றி பெற்றதற்குக் காரணம் சினிமாதான். அதுதான் மக்களிடம் என்னைக் கொண்டு சென்றது. எனக்கு சினிமா, அரசியல் இரண்டிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் ரோல் மாடல். இவ்வாறு நடிகை ரோஜா கூறினார்.