

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு கதாநாயகனாக நடித்த படம், `ஸ்பைடர்’. தமிழ், தெலுங்கில் உருவான இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடித்தார். எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடித்தனர்.
இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்படம் மோசமான தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் இப்படத்தின் தோல்வி தன்னை மிகவும் பாதித்தது என்று ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “தெலுங்கில் தொடர்ச்சியாக 8, 9 வெற்றிகளைப் பெற்ற பிறகு, ‘ஸ்பைடர்’ எனது வாழ்க்கையில் முதல் தோல்வி படம். அதிகம் எதிர்பார்த்த ஒரு படம் தோல்வி அடையும் போது அந்த உணர்வு எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டேன். அந்த ஏமாற்றம் என்னை மிகவும் பாதித்தது.
அந்தப் படத்துக்குப் பிறகு மனதளவில் மீள்வதற்கு எனக்கு நீண்ட காலம் ஆனது. அதனால் தான் சிறிது காலம் தெலுங்கு சினிமாவில் இருந்து விலகி இருக்க முடிவு செய்தேன்” என்றார்.
ரகுல் ப்ரீத் சிங், தமிழில் ‘தடையறத் தாக்க’ படம் மூலம் அறிமுகமானார். ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அயலான்’, ‘இந்தியன் 2’ படங்களில் நடித்துள்ளார்.