

நடிகை கயாது லோஹர்
யாஷ் நடித்த ‘கே.ஜி.எஃப்’, ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த ‘காந்தாரா’, பிரபாஸ் நடித்த ‘சலார்’ ஆகிய பிரம்மாண்டப் படங்களைத் தயாரித்த ஹோம்பாளே பிலிம்ஸ் அடுத்து சூர்யா கதா நாயகனாக நடிக்கும் படத்தைத் தயாரிக்கிறது.
சூர்யாவின் 48-வது படமான இதை, த.செ.ஞானவேல் இயக்குகிறார். வரவேற்பைப் பெற்ற ‘ஜெய்பீம்’ படத்தை அடுத்து இருவரும் மீண்டும் இணைகின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கும் இப்படத்தில் கயாது லோஹர் கதாநாயகியாக நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், யோகிபாபு, குமரவேல் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 22ம் தேதி தொடங்குகிறது. ஹோம்பாளே பிலிம்ஸ் நிறுவனர் விஜய் கிரகந்தூர் கூறும்போது, “வணிக வெற்றியையும், விமர்சகர்களின் பாராட்டையும் ஒருசேரப் பெறுவதில் தனித்து விளங்கும் சூர்யாவுடன் இணைவதில் பெருமிதமும் பெருமகிழ்ச்சியும் கொள்கிறோம்” என்றார்.