

‘ஜெயிலர் 2’ படத்தில் தான் நடித்திருப்பதை உறுதி செய்திருக்கிறார் நடிகர் விநாயகன்.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ‘ஜெயிலர் 2’. இதன் படப்பிடிப்பு கோவாவில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் ரம்யா கிருஷ்ணன், விஜய் சேதுபதி, மோகன்லால், சிவராஜ்குமார், மிருணா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் வில்லனாக நடித்த விநாயகனும், ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்திருப்பதை உறுதி செய்திருக்கிறார். ‘ஜெயிலர் 2’ குறித்த கேள்விக்கு, “‘ஜெயிலர் 2’ குறித்து அனைவரும் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆம், அப்படத்தில் ஓர் அங்கமாக இருக்கிறேன். அது ஃப்ளாஷ்பேக் பகுதியா இல்லையா என்றெல்லாம் சொல்ல முடியாது. அதைப் படத்தைப் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள். ‘ஜெயிலர்’ தான் எனக்கு பிடித்த காமெடி ரோல்” என்று தெரிவித்துள்ளார் விநாயகன்.
‘ஜெயிலர்’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் விநாயகன் இறந்துவிடுவார். அவரை ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் நெல்சன் உபயோகித்திருப்பார் என்பது உறுதியாகிறது. டிசம்பர் 12-ம் தேதி ரஜினியின் பிறந்த நாளன்று ‘ஜெயிலர் 2’ படத்தின் டீசர் வெளியாகும் என்று கூறப்படுகிறது.