

சென்னை: “சின்மயி மேடம் எதற்காக வருத்தம் தெரிவித்தீர்கள்? உங்களுக்கு இப்படியொரு அழுத்தம் கொடுத்தவர்கள் ஏன் அதைச் செய்தார்கள்?” என்று இயக்குநர் மோகன் ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘திரெளபதி 2’. இப்படத்தில் இருந்து ‘எம்கோனே’ பாடல் வெளியாகியுள்ளது. இதனை சின்மயி பாடியிருந்தார். இது இணையத்தில் பெரும் விவாதமாகவே அதற்கு மன்னிப்புக் கோரினார் சின்மயி. இந்த விவகாரம் தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்த நிலையில், இயக்குநர் மோகன் ஜி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் மோகன் ஜி, “நேற்று ‘எம்கோனே’ பாடலை வெளியிட்டிருந்தோம். அந்தப் பாடலை சின்மயிதான் பாட வேண்டும் என்று முதலிலேயே கூறிவிட்டேன். நான் சின்மயி மேடமின் பெரிய ரசிகர். அப்பாடல் பதிவின்போது நானில்லை. எனது குழுவினர் என்ன மாதிரியான சூழலில் இந்தப் பாடல் வருகிறது என்பதை எல்லாம் விளக்கினார்கள். அப்பாடலின் ப்ரோமோ வெளியான உடன், அதில் சின்மயி பாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது. அதைப் பார்த்த சில பேருக்கு என்ன நடந்து என தெரியவில்லை.
‘திரெளபதி’, ‘ருத்ரதாண்டவம்’, ‘பகாசூரன்’ போன்ற படங்களை எடுத்துள்ளார். ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே படம் எடுப்பார். அவர் பெண்களுக்கு எதிராக படம் எடுப்பவர் என்று சொல்லி, அவருடைய படத்தில் எப்படி நீங்கள் பாடலாம், உங்களுடைய புரட்சி எல்லாம் எங்கே போனது என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்கள். அப்போதே இதற்கு சின்மயி மேடம் பதிலளிப்பார் என தோன்றியது. நான் நினைத்த மாதிரியே இப்பாடலை பாடியதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்த சித்தாந்ததில் படம் எடுப்பது தெரிந்திருந்தால் பாடியிருக்கவே மாட்டேன் என்று ட்வீட் செய்தார் சின்மயி மேடம்.
இது தொடர்பாக என்னிடமோ, இசையமைப்பாளரிடமோ எந்தவொரு விளக்கமும் கேட்கவில்லை. அது ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தில் என்ன சொல்ல வருகிறோம் என்பது சின்மயி மேடத்துக்கு தெரியாது. ஒரு முறை எங்களிடம் கேட்டுவிட்டு, அவருடைய நிலைப்பாட்டை எடுத்திருக்கலாம்.
எப்போதுமே கடவுள் இருக்கிறது என்று சொல்லக் கூடிய ஆள் நான். தமிழ் சினிமாவில் கடவுள் இருக்கிறது, இல்லை என்பதுதான் பெரிய பிரச்சினை. அதைச் சுற்றி தான் மொத்த சித்தாந்தமும் இருக்கிறது.
எனக்கு தெரிந்து சின்மயி மேடம் கடவுளுக்கு எதிராக எதுவும் பேசியதில்லை. அவருக்கு எதிராக எந்த சித்தாந்தத்தில் எதில் வேறுபட்டு நிற்கிறேன் என தெரியவில்லை. இந்த சித்தாந்தத்தில் இருப்பவரின் படத்துக்கு பாடமாட்டேன் என்று எங்கேயாவது கூறியிருந்தால் கண்டிப்பாக கூப்பிட்டிருக்க மாட்டேன். ரொம்ப விரும்பி அவருடைய குரலில் இந்தப் பாடல் பதிவாக வேண்டும் என்று நான் தான் கேட்டேன்.
எனக்கு ஒரு தெளிவு வேண்டும். சின்மயி மேடம்... எதற்காக வருத்தம் தெரிவித்தீர்கள். உங்களுக்கு இப்படியொரு அழுத்தம் கொடுத்தவர்கள் ஏன் கொடுத்தார்கள் என்பதை விளக்கி ஓர் அறிக்கை வெளியிட வேண்டும். அது எங்களுடைய படத்தை எந்தவொரு விதத்திலும் வியாபாரத்தில் பாதிக்காமல் இருக்கும்.
என்னைச் சுற்றியிருப்பவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக நிறைய கேள்விக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். நிறைய கோரிக்கை வைக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் கூறிய விஷயம் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தயாரிப்பாளரும் இது தொடர்பாக கேட்டார், அவருக்கு என்ன பதில் சொல்வது என தெரியவில்லை.
அப்படி சின்மயி மேடம் விளக்கம் கொடுக்க விரும்பவில்லை என்றால், அவருடைய ட்வீட்டையாவது நீக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்தப் படத்தை உங்களுடைய விஷயம் வியாபாரத்தில் பாதிக்க கூடாது என நினைக்கிறேன். விரைவில் சின்மயி மேடத்திடம் இருந்து நல்ல பதில் எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் மோகன் ஜி.