

சூர்யா, த்ரிஷா நடித்து வெளியான திரைப்படம், ‘கருப்பு’. ஆர்.ஜே பாலாஜி இயக்கியுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளனர்.
இப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதை அடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்தார் நடிகர் சூர்யா.
அப்போது அவர் கூறியதாவது: ‘கருப்பு’ படத்தை அரை மணி நேரத்தில் முடிவு பண்ணினேன், இதில் நடிக்கலாம் என்று. வேறு எந்தப் படத்தையும் இவ்வளவு விரைவாக முடிவு பண்ணியதில்லை. ஆர்ஜே பாலாஜி கதை சொல்லும்போது, தியேட்டரில் வேறு மாதிரி இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. அனைத்து படங்களையும் நம்பிக்கை வைத்து தான் பண்ணுகிறோம்.
ஆனால், இந்தப் படத்தின் முதல் நாளிலிருந்தே எல்லாமே சரியாகப் போனது. அதற்கு உறுதுணையாக இருந்தது, ட்ரீம் வாரியர்ஸ் பிரகாஷ், பிரபுதான். எல்லா முடிவுகளைச் சரியாக எடுத்ததற்கும் எடுக்க வைத்த கருப்பசாமிக்கும் நன்றி சொல்ல வேண்டும். இது ஆசைப்பட்ட வெற்றி. ஆனால், எதிர்பார்க்காத பெரிய வெற்றியைக் கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி.
இது மாதிரியான ரியாக் ஷனை தியேட்டரில் சமீபத்தில் பார்த்ததே இல்லை. பெரிய அன்பு கிடைத்திருக்கிறது. கடவுளின் அருள் இந்தப் படத்தில் இருக்கிறது என்பதை உணர்கிறோம். இப்படம் வெளியான அனைத்து இடங்களிலும் அதாவது தமிழ்நாடு மட்டுமின்றி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, துபாய் என எங்கும் இதே ரியாக் ஷன் கிடைக்கிறது என்பதை நினைக்கும்போது இந்தத் தொழில் பண்ணுவது பிடித்திருக்கிறது என்று மறுபடியும் சொல்லத் தோன்றுகிறது.
எல்லா படத்துக்கும் விமர்சனம் இருக்கும், இதை இப்படிப் பண்ணியிருக்கலாம், அப்படி பண்ணியிருக்கலாம் என்று. ஆனால் எல்லோரிடம் இருந்தும் ஒரே மாதிரியான அன்பையும் அவர்களுக்கு சந்தோஷத்தையும் ஒரு படம் கொடுக்கிறது என்றால் அதற்காக நான் நன்றி சொல்ல வேண்டும்.
என்னுடன் 28 வருடமாக உதவியாளராக இருக்கும் குமார் சொன்ன ஒரு விஷயம், படத்தைத் தாண்டி கருப்பசாமிக்கு ஒரு பாடல் வைக்க வேண்டும் என்பது. படத்துக்கு தொடர்பே இல்லாத குமாரின் ஐடியாதான் அந்த கிளைமாக்ஸ் பாடல். எடிட் செய்து முடித்த பிறகு 5 மாதத்துக்குப் பிறகு எடுத்ததுதான், அப்பாடல். படத்துக்கு இனி செலவு பண்ண வேண்டாம், இனி முடியாது என்று நினைத்து அந்த ஐடியாவை முடித்திருக்கலாம்.
ஆனால், எடுத்துவிடலாம் என முடிவு செய்து அப்பாடலை ஷூட் செய்தோம். அதைத்தான் இப்போது ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை தியேட்டர்களில் அத்தனை பேரும் படத்தை ரசிக்கிறார்கள். இவ்வாறு நடிகர் சூர்யா கூறினார். தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, பிரகாஷ் பாபு, 2 டி என்டர்டெயின் மென்ட் நிறுவனத்தின் ராஜ சேகர பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.