

ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி, முத்துராமன், டி.எஸ்.பாலையா, நாகேஷ் உள்பட பலர் நடித்து 1965-ம் ஆண்டு வெளியான திரைப்படம், ‘திருவிளையாடல்’.
மறக்க முடியாத பக்தி படங்களில் ஒன்றான இப்படத்துக்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார். இதன் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் வரவேற்பைப் பெற்றன. வெள்ளிவிழா கொண்டாடிய இப்படத்தின் வசனங்கள் பெரிதும் ரசிக்கப்பட்டன. ‘ஆணுக்குப் பெண் அடிமை’ என பேசும் ஈசனுக்கு ‘ஆணை பெற்றுத் தருவதே பெண், நானின்றி நீயில்லை.
சக்தியில்லையேல் சிவமில்லை’ என தாட்சாயணி கூறுவது, நக்கீரர் ஆவேசமாகப் பேசும் ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ உள்பட பல்வேறு வசனங்கள் இப்போதும் ரசிக்கக் கூடியவை. சிவனான சிவாஜிக்கும், தருமியான நாகேஷுக்கும் இடையிலான கேள்வி - பதில் காட்சிகள் மறக்க முடியாதவை.
சிவபெருமானது திருவிளையாடல்களைக் கூறும் திருவிளையாடற் புராணத்தில் இருந்து எடுக்கப்பட்ட சில கதைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் 61 வருடங்களுக்குப் பிறகு டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு புதிய பொலிவுடன் வெளியாக இருக்கிறது. ஸ்ரீபால விநாயகர் பிக்சர்ஸ் சார்பில் ஜி.லதா மறு வெளியீடு செய்ய இருக்கிறார்.