

சென்னை: பேயை பார்த்து பயப்படுவதை விட ‘ஏஐ’-யை பார்த்து பயப்படுவது அதிகமாகிவிட்டது என நடிகர் சந்தானம் கலகலப்பாகப் பேசினார். சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சார்பில், இணையவழி (சைபர்) குற்றத் தடுப்பு விழிப்புணர்வு பேரணி மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலையிலிருந்து கண்ணகி சிலை வரை நேற்று நடைபெற்றது.
இதில் நடிகர் சந்தானம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேரணியைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம் பேசியதாவது: முன்பெல்லாம் வீட்டுக்குள் புகுந்து திருடுவாங்க. இப்போது வீடியோ கால் மூலமாகவே திருட ஆரம்பிச்சிட்டாங்க.
இந்த எல்லா குற்றங்களும் நம்ம கையில் இருக்கும் இந்த போன் மூலம்தான் ஆரம்பிக்கிறது. இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் என்று நிறைய செயலிகளை பயன்படுத்துகிறோம். போனை வைத்துக் கொண்டு நாம் சும்மா இருப்பதில்லை. வாழைக்காய் பஜ்ஜி போடுற மாதிரி எப்ப பாத்தாலும் போனை தடவிக்கொண்டே இருக்கிறோம்.
இதை தெரிந்து கொண்டுதான் சைபர் குற்றவாளிகள் நம்மை ஏமாற்றுகிறார்கள். இப்போது பேயைப் பார்த்து பயப்படுவதை விட, ஏஐ-யை பார்த்து பயப்படுவது அதிகமாகிவிட்டது. எனவே, சைபர் மோசடிகள் தொடர்பாக பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அதையும் மீறி சைபர் மோசடி நடைபெற்றால் 1930 என்ற இணைய குற்ற உதவி மைய எண்ணைத் தொடர்புகொண்டு உடனடியாக தகவல் அளிப்பது மிகவும் அவசியம். மேலும், சைபர் மோசடி புகார்களை www.cybercrime.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும் பதிவு செய்யலாம். அனைவரும் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே சைபர் குற்றங்களை முற்றிலுமாக தடுக்க முடியும் என்றார்.
துணை ஆணையர் ஸ்ரீநாதா பேசுகையில், “2025 ஜன. 1 முதல் 2026 பிப்.28 வரை 3,692 இணையவழி குற்றம் சார்ந்த புகார்கள் பெறப்பட்டு, 208 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் 164 பேர் கைது செய்யப்பட்டனர்” என்றார்.
பேரணியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் இணையதள குற்றங்கள், ஆன்லைன் வர்த்தக மோசடி, டிஜிட்டல் கைது மோசடி, இணையவழியில் மிரட்டி பணம் பறிப்பு மோசடி மற்றும் சமூக வலைதளங்களை பொறுப்புடன் கையாள்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.
இந்நிகழ்ச்சியில், சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கார்த்திகேயன் (பொறுப்பு - மத்திய குற்றப்பிரிவு), துணை ஆணையர் கீதாஞ்சலி உட்பட பலர் பங்கேற்றனர்.