

ஆகாஷ் டெல்சன்
சென்னை: மானாமதுரையில் கைதி மரணமடைந்த விவகாரத்தில் காவல்துறையினர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மானாமதுரையில் 2 தொழிலாளர்களை வாளால் வெட்டிய வழக்கில் கைதாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் உயிரிழந்தார். இந்த விவகாரத்துக்கு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாமக தலைவர் அன்புமணி: கடந்த ஆண்டு திருப்புவனம் காவல்நிலையத்தில் மடப்புரம் அஜித்குமார் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில், இப்போது மானாமதுரையில் ஆகாஷ் டெல்சன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். திமுக ஆட்சியில் மட்டும் இதுவரை 27 காவல் நிலையச் சாவுகள் நடந்துள்ளன.
திமுக ஆட்சியில் மனித உயிர்களுக்கு மரியாதை இல்லை. ஆகாஷ் சித்திரவதைக் கொலைக்கு காரணமான காவல் துறையினர் அனைவரும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும். ஆகாஷ் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு தர வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் குற்றச்சம்பவங்களைத் தடுக்க திறனற்ற திமுக அரசு, மக்களின் அதிருப்தியைத் திசைதிருப்பக் கைதிகள் மீது இதுபோன்ற சித்ரவதைகளை அரங்கேற்றுவதை வாடிக்கையாகக் கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கைதி ஆகாஷின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, காவல்துறையினர் சட்டவிரோதமாகச் செயல்பட்டிருப்பது உறுதியானால் அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்னசாமி: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான காவல் நிலையங்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினரே பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருப்பது, இத்தகைய மனித உரிமை மீறலுக்கு முக்கியக் காரணமாக அமைகிறது. காவல்துறையினர் மீது உடனடியாக கொலை வழக்குப்பதிவு செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.