

பூச்சி முருகன்
தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பூச்சி முருகன். திமுக தலைமை நிலையச் செயலாளராகவும் உள்ளார். சமீபத்திய தேர்தலின்போது தமிழ்நாடு முழுக்க பயணித்து தீவிரமாகக் கட்சிப் பணியாற்றியவர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணத்தில் இருப்பதால், ஓய்வு எடுப்பதற்காக முன்னாள் எம்.பியான ஆர்.எஸ்.பாரதி, மதுரை கவுன்சிலர் சுதன் உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்களுடன் இவர் கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்றிருந்தார்.நேற்று முன் தினம் பிற்பகலில் பூச்சிமுருகனுக்கு திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
உடன் இருந்தவர்கள் கொடைக்கானல் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில், மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் கசிவு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. ரத்தக் கசிவை தடுப்பதற்கான நவீன சிகிச்சை வழங்கப்பட்டது. தகவல் அறிந்த பூச்சிமுருகனின் மகன் மற்றும் குடும்பத்தினர், நடிகர் சங்க நிர்வாகிகள் நேற்று காலை சென்னையிலிருந்து மதுரை வந்தனர்.
முன்னாள் அமைச்சர் பி. மூர்த்தி, முன்னாள் எம்எல்ஏ வேலுசாமி, கவுன்சிலர் ஜெயராமன், பகுதி செயலாளர் புண்ணியமூர்த்தி, பொன்சேது உள்ளிட்ட உள்ளூர் திமுகவினரும் மருத்துவமனைக்கு சென்று அவரை பார்த்தனர்.பின்னர், ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அழைத்துவரப்பட்ட பூச்சிமுருகன், தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.