மக்களை மகிழ்வித்துக்​ கொண்டே இருப்பேன் - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 41

மக்களை மகிழ்வித்துக்​ கொண்டே இருப்பேன்  - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 41
Updated on
2 min read

வாழ்க்​கை, எல்​லோருக்​கும் ஏராள​மாக கற்​றுக்​கொடுக்​கிறது. அந்​தக்​கற்​றலில் இருந்தே மனிதன் தன்னை மெரு​கேற்றிக் கொள்​கிறான், அல்​லது தன்னை மாற்​றிக்​கொள்​கிறான். அப்​படி மாற்​றிக்​கொள்​வதும், மெரு​கேற்​றிக்​ கொள்​வதுமே வாழ்க்​கைப் பாட​மாக​வும் இருக்​கிறது.

நான் எனது வாழ்​பனுவங்​களில் இருந்து கற்ற விஷ​யங்​களை இங்கே 40 வாரங்​களாகத் தொட​ராக எழுதி வந்​திருக்​கிறேன். நான் கற்​றது, பெற்​றது உள்​ளிட்ட அனுபவங்​களை வெளிப்​படையாக பேசி​யிருக்​கிறேன்.

நாகப்​பட்​டினத்​தில் நான் பிறந்​தது, 1962 சீனப்​போரின் போது, எங்​கள் ஊரிலும் குண்டு போடு​வார்​கள் என பயந்​தது, எங்​கள் ஊருக்​குள் முதல் முதலாக ஹெலி​காப்​டர் வந்​தது, எங்​கள் குடும்​பம் சென்​னைக்கு இடம் பெயர்ந்​தது, பச்​சையப்​பன் கல்​லூரி​யில் நான் படித்​தது, என் மூத்த சகோ​தரி ஹேம​மாலினி சினி​மா​வில் நடிக்​கத்​தொடங்​கி, பின்​னர் டப்​பிங் கலைஞ​ராக மாறியது, அவருடன் டப்​பிங் தியேட்​டருக்கு துணைக்குச் சென்​றது, அப்​படியே நானும் டப்​பிங் பேச கற்​றுக்​கொண்​டது, இளைய சகோ​தரி தாராசந்​துரு, காலம் சென்ற என் சகோ​தரன், பெற்​றோர், திரை​யுல​கில் எனக்கு ஆதர​வளித்​தவர்​கள், நண்​பர்​கள், பள்​ளி, கல்​லூரி நண்​பர்​கள், பழகிய​வர்​கள், இப்​போதும் பழகுபவர்​கள், என்னை தவிக்க விட்டு பிரிந்​தவர்​கள் என பல விஷ​யங்​களை வாசகர்​களு​டன் பகிர்ந்​திருக்​கிறேன்.

என்​னுடைய குரு​வான, வசனகர்த்தா ஐயா ஆரூர்​தாஸ் டப்​பிங் யூனிட்​டில் பணி புரிந்​து, நுணுக்​கங்​களைக் கற்​றுக்​கொண்​டது, பிறகு சகோ​தரர் மருத​பரணி யூனிட்​டில் வேலை பார்த்​தது, டப்​பிங்​கில் நான் சந்​தித்த சவாலான அனுபவங்​கள், ஆங்​கில படங்​களுக்​கும் டெலிபிலிம்​களுக்​கும் டப்​பிங் பேசிய போது நடந்த நகைச்​சுவை​யான விஷ​யங்​கள், சின்​னத்​திரை தொடர்​களில் நான் நடிக்​கச் சென்​றது, தொடர்​களில் நடித்த போது எனக்கு நேர்ந்த நல்​லது, கெட்​டது அனைத்​தை​யும் உங்​களு​டன் பேசி​யிருக்​கிறேன்.

மாயாவி மாரீசன், மாஸ்​டர் மாயாவி தொடர்​கள், எனக்​குப்​பு​கழை பெற்​றுத்​தந்த பட்​டாபி கதா​பாத்​திரம் உரு​வான கதை, அந்த கதா​பாத்​திரத்​துக்கு காரண கர்த்​தாக்​களாக இருந்த மூன்று பேர் பற்​றி​யும் அவர்​களின் மேனரிசங்​களை பின்​பற்​றியே அக்​க​தா​பாத்​திரத்தில் நடித்​ததை பற்​றி​யும் கூறி​யிருக்​கிறேன்.

அதன் அடுத்த கட்​ட​மாக நான் சினி​மாவுக்கு வந்​தது, பட வாய்ப்​புக் கேட்டு பலரிடம் நான் அவமானப்​பட்​டது, அந்த அவமானங்​களே எனக்கு உரமாகி என்னை மாற்​றியது, தமிழ் சினி​மா​வின் முன்​னணி நட்​சத்​திரங்​கள், சின்​னத்​திரை, பெரிய திரை இயக்​குநர்​கள் என பலருடன் பணி​யாற்​றியது, எனக்​குத் தேசிய விருது கிடைத்​தது என பல அனுபவங்​களை​யும் கூறி​யிருக்​கிறேன்.

இதற்​கிடையே என்​னுடைய மனை​வி, மகள், மகன், மாப்​பிள்​ளை, பேத்தி சம்​பந்தி வீட்​டார் பற்​றி​யும் சொல்​லி​யிருக்​கிறேன்.

இப்​படி​யான என் அனுபவங்​களை வாசித்​தும் ரசித்​தும் எனக்கு மின்​னஞ்​சல் மூல​மாக​வும் தொலைபேசி வாயி​லாக​வும் கருத்​துகளைப் பகிர்ந்​து​கொண்ட வாசகர்​களுக்​கும், என் நலம் விரும்​பிகளுக்​கும் நன்றி என்​பது வெறும் வார்த்​தை​தான். நீங்​கள் தரும் உற்​சாக​மும் கைதட்​டல்​களும்​தான் சினி​மா​வில் நான் தொடர்ந்து பயணிக்க காரணம். அந்த கைத்​தட்​டல்​களே நான் பெறும் பெரும் விருதுகள்.

அதற்​காகவே ஓடிக்​கொண்​டிருக்​கிறேன். உடலில் வலு உள்​ளவரை ஓடிக்​கொண்டே இருப்​பேன். சிறந்த கதா​பாத்​திரங்​கள் மூலம் மக்களை மகிழ்​வித்​துக்​கொண்டே இருப்​பேன்.

என் மகளுக்கு நல்ல மாப்​பிள்​ளை​யும், சம்​பந்தி குடும்​பத்​தா​ரும் அமைந்​தது போல், என் மகனுக்​கும் நல்ல மனை​வி, மக்​கள் அமைய வேண்​டும். என் மகன் திரை​யுல​கில் உயர்ந்த நிலை​யான இடத்​தைப் பெற வேண்​டும். அனை​வருக்​கும் நான் நல்​ல​வ​னாக, ஆரோக்​கி​யத்​தோடு இறுதி மூச்சு வரை உழைத்​துக் கொண்டே இருக்க வேண்​டும் என்​ப​தே இறைவனிடம்​ நான்​ வைக்​கும்​ வேண்​டு​கோள்​.

மக்களை மகிழ்வித்துக்​ கொண்டே இருப்பேன்  - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 41
நான் பெறாத மகள் - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 40

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in