

எனக்கு 1994-ம் ஆண்டு மகள் பிறந்தது பற்றியும் அவர் படித்தது, காதல் திருமணம் செய்து கொண்டது, குரல் கலைஞராகப் பணியாற்றுவது குறித்து ஏற்கெனவே கூறியிருக்கிறேன்.
எனக்கு மகள் பிறந்ததும் ஒரு குழந்தை போதும், அவரை நல்லபடியாக வளர்க்கலாம் என்றுதான் முடிவு செய்திருந்தோம். ஆனால் மகன் உருவாகிவிட்டார். 1999-ம் ஆண்டு பிறந்தார் மகன் ஆதித்யா.
சின்ன வயதிலேயே அவருக்குக் கொஞ்சம் சேட்டை அதிகம். அது குழந்தைகளுக்கே உண்டானதுதான். எப்போதும் என் அருகில்தான், என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு படுத்துக் கொள்வார். பிறகு அவராகவே அக்காவின் புத்தகப் பையைத் தூக்கிக்கொண்டு, “ஸ்கூலு ஸ்கூலு” என்பார்.
“உங்களுக்கு இன்னும் வயசாகவில்லை தம்பி” என்போம். எங்கள் ஊரில் ஒருவருக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றால், பெரிய தம்பி, நடுத்தம்பி, சின்னத்தம்பி என்று அழைப்பது வழக்கம். அதன்படி இவரை நாங்கள் தம்பி என்றே அழைப்போம்.
என் மகளையும் சரி, மகனையும் சரி, “வா, போ” என்று ஒருமையில் அழைப்பதில்லை. “வாங்க” என்றுதான் அழைப்போம். அவருக்கு அக்கா ஐஸ்வர்யா என்றால் ரொம்ப பிரியம். அவரும் இவனை ஆதிமா என்று அழைப்பார்.
சின்ன வயதில் உடல் உறுப்புகளை ஆங்கிலத்தில் சொல்லி அதித்யாவிடம் கேட்போம். காதில் கையை வைத்து, இது என்ன? என்றால் ‘இயர்’ என்பார். வாயில் விரல் வைத்து இது என்ன என்று கேட்டால், ‘மவுத்’ என்பார்.
அப்படி கண்ணில் கைவைத்து இது என்ன என்று கேட்டால், ‘அய்ஸ்’ என்று சொல்லாமல் ‘அக்கா’ என்பார். நான் விளையாட்டாக, ‘நான் உனக்கு ஒரு கார் வாங்கித் தர்றேன், பெரிய வீடு வாங்கித் தர்றேன், ஒரே ஒரு தடவை உங்க அக்காவை, ‘வா’ என்று ஒருமையில் கூப்பிடுங்க’ என்றால் மறுத்து விடுவார்.
அவர் பள்ளிப்படிப்பு முடித்ததும் அவரை ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயர் ஆக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவர் “நான் விஸ்காம் தான் படிக்கப் போகிறேன்” என்றார். அவர் விருப்பத்துக்கு ஏற்ப சரி என்று சொல்லிவிட்டேன். அதில் ஒளிப்பதிவு படிக்கட்டும்என்று சேர்த்துவிட்டேன். பிறகு, “இல்லை இல்லை, நான் ஆக்டிங் தான் படிக்கப் போறேன்” என்றார். சரி என்று கோர்ஸ் மாற்றினோம்.
அவர் படித்துக்கொண்டிருக்கும்போது, ஒரு நாள் காலையில் எனக்கு போன் அழைப்பு வந்தது. ஒரு நிறுவனத்தின் பெயரைச் சொல்லி, “சார் இந்த மாதிரி கம்பெனில இருந்து பேசுறோம், ஒரு நல்ல கேரக்டர் இருக்கு” என்றார்கள். “சரி சார் சொல்லுங்க, கேட்கிறேன்” என்றேன்.
“சார் உங்களுக்கு இல்ல, உங்க மகனுக்கு” என்றார்கள். எனக்கு ஆச்சரியம். எப்படி என் மகனை அவர்களுக்குத் தெரிந்தது என்று. பிறகுதான் புரிந்தது, அன்று வெளியான வார இதழ் ஒன்றில் என் குடும்பப் புகைப்படம் வெளியாகி இருந்தது. பிறகு, “ஐயா, அவரு இப்பதான் படிச்சுக்கிட்டு இருக்காரு.
அவரு வந்ததும் நடிக்க விருப்பம் இருக்கான்னு கேட்டுட்டு சொல்றேன்” என்றேன். அவர் வீட்டுக்கு வந்ததும், கேட்டேன். “ஓ, நடிக்கிறேன்” என்றார். என் வீட்டுக்கு அடுத்த தெருவில்தான் அந்த அலுவலகம் இருந்தது.
ஆதித்யாவை அழைத்துச் செல்லும்போது, இயக்குநர் இல்லை. அசிஸ்டென்ட், அசோசியேட் இயக்குநர்கள் இருந்தார்கள். “ஐயா, இது என் பையன், கூட்டிட்டு வந்திருக்கேன், பாத்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அந்த படம் 96.
‘96’ படத்தில்...
பின்னர் இயக்குநர் பிரேம் படத்தின் கதையைத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார். நான் ஆதித்யாவிடம், கதை என்ன, கேரக்டர் என்ன? என்பது பற்றி எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. பிறகு அதில் நடித்தார். கும்பகோணத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது. நான் இயக்குநருக்கு போன் செய்து, “படப்பிடிப்புக்கு ஆதித்யா சரியாக வருகிறாரா?”என்று அக்கறையில் கேட்டேன்.
“சார், உங்களை விட சரியா நடந்துக்கிறார். ‘உங்களுக்கு ஷாட் முடிந்தது, போகலாம்’ என்றால்தான் போகிறார். எதிர்பார்க்கிறதை விட பிரமாதமாக நடிக்கிறார்” என்றார்கள். அந்த படத்தின் ஸ்கூல் பகுதி காட்சிக்காக, பட்டினி கிடந்து, உடல் இளைத்து நடித்தார்.
அந்தப் படப்பிடிப்பு முடிந்ததும் காலேஜ் பகுதிக்காக நன்றாகச் சாப்பிட்டு, தினமும் ஜிம்முக்கு சென்று உடலை ஏற்றி வைத்திருந்தார். அந்தப் படம் பார்க்கும் போதே, தெரிந்திருக்கும், ஸ்கூல் மற்றும் கல்லூரி காலத்துக்குமான உடல் வித்தியாசம். என்னுடைய நண்பன் சீயான் விக்ரம் மாதிரி, இவரும் கதாபாத்திரத்துக் காக என்ன வேண்டுமானாலும் செய்கிறார் என்பது மகிழ்ச்சியாக இருந்தது.
அந்தப் படம் முடிந்து டப்பிங் பேசச் செல்வதற்கு முன், ‘எட்டு தோட்டாக்கள்’ படத்தில் நான் நடித்த கேண்டீன் காட்சியைப் போட்டுக் காண்பித்தேன். “இதுல அப்பா எவ்வளவு நேச்சுரலா பேசிருக்கேன்றதைப் பாரு. அதுபோல டப்பிங்ல எல்லாமே கொடுக்கணும்” என்றேன். கேட்டுக்கொண்டார். படம் முடிந்துவிட்டது. படம் பார்க்கக் கூப்பிட்டார்கள். பார்த்துவிட்டு, மிரண்டு போயிட்டேன்.
“இப்படிப்பட்ட ஒரு பையனை நம்ம வேறொரு துறைக்கு அனுப்ப இருந்தோமே, இவருக்கு நடிப்பு இயல்பாகவே வருது, நாம அதைத் தடுக்க வேண்டாம்” என்று முடிவு செய்தேன். படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்ததுமே “நான் ஆதித்யா பாஸ்கரின் தந்தை எம்.எஸ்.பாஸ்கர்” என்று போனில் ஸ்டேட்டஸ் வைத்தேன். எனக்கு அதை டைப் பண்ணும்போது அவ்வளவு மகிழ்ச்சி.
‘96’ படம் வரவேற்பைப் பெற்று ஆதித்யாவின் நடிப்புக்கும் பாராட்டு கிடைத்தது. எனக்கு யாராவது போன் பண்ணி, “உங்க பையனுக்கு ஒரு கதை சொல்லணும்” என்றால், “பையன்கிட்ட சொல்லுங்க, என்கிட்ட ஏன் சொல்றீங்க?” என்று மறுத்து விடுவேன்.
அவரவர் வாழ்க்கை அவரவர் கையில். தீதும் நன்றும் பிறர்தர வாரா. அதனால் அவர் நடிக்கும் கதாபாத்திரத்தை அவரே தேர்வு செய்துகொள்ளட்டும் என்று அவரிடம் சொல்லிவிட்டேன். பிறகு ‘ரெபல்’ என்ற படத்தில் நடித்தார்.
பிறகு ‘ஹாட்ஸ்பாட் 1’ பண்ணினார். இப்போது ‘ஹாட்ஸ்பாட் 2’ படத்தில் நடிக்கிறார். நான்கைந்து படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மக்கள் எனக்குக் கொடுத்துக் கொண்டிருக்கக் கூடிய அதே ஆதரவை, அவருக்கும் கொடுக்க வேண்டும் என்பதும் சினிமாவில் அவரும் மிகப் பெரிய இடத்தை அடைய வேண்டும் என்பதும் என் ஆசை.