பட்டாபி கதாபாத்திரத்தின் காரணகர்த்தாக்கள் - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 9

பட்டாபி கதாபாத்திரத்தின் காரணகர்த்தாக்கள் - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 9
Updated on
2 min read

சென்னை வந்த புதிதில் ராயப்பேட்டை அம்மையப்ப முதலி தெருவில், 41-ம் எண் வீட்டில் நாங்கள் குடியிருந்தோம் என்று ஏற்கெனவே சொல்லியிருந்தேன். கீழே வரிசையாக போர்ஷன்ஸ் இருக்கும். நாங்கள் மாடியில் வசித்து வந்தோம்.

அப்போது பயங்கரமான தண்ணீர் கஷ்டம். அடிபம்பு இருக்கும் இடம் தேடிப் போய், குடங்களில் தண்ணீர் அடித்து எடுத்துக் கொண்டு வருவேன்! வீட்டில் பேரல்களில் அதை ஊற்றி நிரப்பி வைப்பது என் வேலை. அந்த தெருவில் நிறைய பால்காரர்கள் வசித்து வந்தார்கள். மாடுகளும் தொழுவமுமாக அந்த தெரு பிசியாகவே இருக்கும். அந்த பால்காரர்களில் ஒருவர் குப்பப்பா. எங்கள் வீட்டுக்கு இரண்டு வீடுகள் தள்ளி வசித்து வந்தார்.

பெரிய குடும்பத்துக்காரர். எனக்கும் அவருக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது, எப்போது ஏற்பட்டது என்பது தெரியவில்லை. நினைத்து நினைத்துப் பார்த்தாலும் தெரியவில்லை. அது தெரியாமல் இருப்பதும் ஜென்ம ஜென் மாந்திர பந்தம் போல எனக்குள் ஓர் சுகமான உணர்வைத்தருகிறது. அவர் என் மனதில் எப்போதும் அப்பாவாகவே இருக்கிறார்... இருப்பார். அவரை அப்பா என்றும் சில நேரம் நைனா என்றும் அழைப்பேன்.

அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. மிகப்பெரிய பலசாலி. முரட்டுத்தனமானவர். தீவிர முருகபக்தர். பயங்கரமான மதுபிரியர். நீங்கள் 24 முழத்துக்கு வேஷ்டி வாங்கிக் கொடுத்தாலும் குப்பப்பா, முழங்காலுக்கு ஒரு இன்ச்சுக்கு கீழ்வரைதான் கட்டுவார். அந்த காலத்தில், சிங்கப்பூர் செருப்பு என்று கலர், கலராக தடிமனாக வரும். அதில் நீலக்கலர் இடதுகால் செருப்பை இடதுகாலுக்குப் போட்டிருப்பார். சிகப்பு கலர் இடது கால் செருப்பை வலது காலுக்கு போட்டிருப்பார்.

“என்ன நைனா, இப்படி போட்டிருக்கீங்க? ஒழுங்கா போட வேண்டாமா?” என்று கேட்டால், “போடா, இன்னாவோ போட்னுகிறேன்ல' என்பார். அவரிடம் பேசிக்கொண்டிருப்பதே எனக்கு சுகமாக இருக்கும். தினமும் ஒரு முறையாவது அவரை பார்க்காமல், பேசாமல் இருக்க மாட்டேன். அவருடைய மனைவி பெயர் அரசலியம்மாள். நான் அம்மா என்றே அழைப்பேன். அவரும் என்னிடம் ஒரு மகனைப் போல அதிக பாசமாக இருப்பார். அவர்களுக்கு நிறைய மகன்கள் இருந்தனர்.

அவர் வீட்டில், நான் பார்க்கும் போதே கிட்டத்தட்ட 25, 30 மாடுகள் இருந்தன. பால் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அவர் சில வீடுகளையும் வாடகைக்கு விட்டிருந்தார். அதில் வரும் வாடகையை வைத்து, மாதத்தின் முதல் பதினைந்து நாட்களுக்கு அதிகமாக மது குடிப்பார். பிறகு திடீரென்று, “குடிக்கவே கூடாதுடா, உடலுக்கு அது நல்லதில்லை” என்று அட்வைஸ் பண்ணுவார்! அவருக்கு மாடுகள் தெய்வம் போல. அவற்றை யாரும் அடிக்கக்கூடாது. அப்படி அடித்துவிட்டால் அவரால் தாங்க முடியாது.

யாராவது ஒருவர் நம்மை அடித்துவிட்டால், அதை நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டிருப்போம், அல்லவா? ஆனால், ஒருவர் தன்னை அடித்ததை 'நல்லா அட்ச்சாண்டா அவன்... நல்ல ஒடம்புடா அவனுக்கு' என்று பெருமையாகச் சொல்வார். அவ்வளவு அப்பாவி! பிறகு அவர் அடித்து அவன் மூஞ்சி முகரையெல்லாம் உடைத்தது தனிக்கதை.

எழுதப்படிக்கத் தெரியாதவர் என்றாலும் பேப்பரை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார். “என்ன நைனா பண்ற?” என்று கேட்டால், “சொம்மா பொம்மை பார்க்கிறேன்” என்பார். யாருக்கும் தீங்கு நினைக்காத, ஓர் அப்பாவியான, பலசாலியான, பக்தி மிகுந்த ஒரு முரடர் அவர். “இந்த குடியில்லனா, குப்பனை வெல்ல முடியாதுடா.. அது இன்னாவோ மெய்தான்' என்று அவரே அவரைப் பற்றிச் சொல்வார்.

அவருடைய மதுபழக்கம், என் நண்பன் கோபியின் அப்பாவித்தனம், திரைத்துறையில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் சாரிடம் அஸோஸியேட்டாக இருந்த லஷ்மி அண்ணாவின் காதில் கை வைத்து பேசும் தன்மை... இம்மூன்றையும் இணைத்துதான், ‘சின்னப்பாப்பா பெரியபாப்பா’ தொலைக்காட்சி தொடரில், நான் பட்டாபி கதாபாத்திரத்தில் நடித்தேன்.

குப்பப்பாவின் வீர தீர பிரதாபங்கள், அவருக்கும் எனக்கும் ஏற்பட்டதகப்பன்- மகன் பந்தம், அவருக்கும் எனக்குமான நிறைவேறாத ஆசை பற்றி அடுத்து சொல்கிறேன்.

( திங்கள்தோறும் பேசுவோம் )

பட்டாபி கதாபாத்திரத்தின் காரணகர்த்தாக்கள் - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 9
காமராஜர் குரலில் பேசியது பெரிய பாக்கியம்..! - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 8

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in