

எனக்கு டப்பிங் வாய்ப்பு அதிகமாக வராத காலத்தில், ‘பினாகா’ என்ற பற்பசை நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலையில் சேர்ந்தேன். அதற்காகக் கடைகளுக்குச் செல்லும் போது பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. திருநெல்வேலிக் காரர்கள்தான் அதிகமாகக் கடை வைத்திருந்தார்கள். அப்போது வடபழனியில், அம்பாள் ஸ்டோர் என்ற கடை இருந்தது.
அந்தக் கடைக்கார அண்ணாச்சியிடம் பேசிக் கொண்டிருப்பேன். அவர்கள் கடையில் வேலை செய்பவர்கள் எப்படிப் பேசிக் கொள்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். அந்தப் பேச்சின் அழகு பிடித்திருந்தது. ‘லே’ என்று முடித்துவிட்டால் மட்டும் அது திருநெல்வேலி வழக்கு அல்ல என்பதைப் புரிந்து கொண்டேன். அதைத்தான் ‘சாது மிரண்டா’ படத்தில் பயன்படுத்தி இருப்பேன்.
நான் டப்பிங் பேச ஆரம்பித்த பிறகு தெலுங்குகாரர்கள், எப்படி தமிழ் பேசுகிறார் கள் என்பதைக் கவனிப்பேன். பொதுவாகவே மொழிகளின் மீது எனக்கு அதிக ஆர்வம் உண்டு. தெலுங்கு படங்களைத் தமிழில் மொழி மாற்றம் பண்ணும் போது நிறைய தெலுங்கு தயாரிப்பாளர்கள் வருவார்கள்.
அவர்கள் பேசும் தமிழை வைத்து தெலுங்குக்காரார்கள் என்பது தெரிந்துவிடும். அவர்களுடன் அதிக நேரம் செலவழித்தபோது தெலுங்கையும் கற்றுக் கொண்டேன். நாம் ‘அண்ணே’ என்போம். அவர்கள் மரியாதையாகச் சொல்ல வேண்டும் என்றால், ‘அண்ணையா’ என்பார்கள். தமிழுக்கும் தெலுங்குக்கும் வார்த்தைகளில் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன்.
கேப்டன் விஜயகாந்தின் மூலமாக ‘கஜேந்திரா’ படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தபோது தெலுங்கு ஸ்டைலில் தமிழ்ப் பேசுவதைப் பயன்படுத்திக் கொண்டேன். அந்தப் படத்துக்குச் சென்றபோது, என் தலையில் வழுக்கை இருந்ததால், நெற்றியில் நாமம் போட்டார்கள். நாமம் போட்டதால், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடம், “தெலுங்குகாரர் தமிழ்ப்பேசுற மாதிரி என் கேரக்டரை வச்சுக்கலாமே?” என்று சொன்னேன். “சரி” என்றார் அவர். இதைக் கேட்டதும் விஜயகாந்த் அண்ணனும் ரமேஷ் கண்ணாவும் ரசித்து உற்சாகப்படுத்தினார்கள். அதில் என் கேரக்டர் சிலாகித்துப் பேசப்பட்டது.
என் வீட்டுக்கு அருகே, நிறைய மலையாளிகள் இருந்தார்கள். அவர்கள் பேசும் ஸ்டைலும் அந்த ஏற்ற இறக்கமும் ராகம் போலவே இருக்கும். இயல்பாகவே எனக்கு அந்த ஆர்வம் இருந்ததால், அம்மொழியில் பேசக் கற்றுக்கொண்டேன். அது பிற்காலத்தில் எனக்கு டப்பிங் பேச உதவியாக இருந்தது.
‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் மலையாள வங்கி மானேஜராக நடித்திருப்பேன். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நிறைய மலையாளிகள் என்னைப் பாராட்டினார்கள். ஒரு இன்சூரன்ஸ் நிறுவன நண்பர், “சார் உங்களை எங்க ஆபிஸ்ல வேலை பார்க்கிறாங்க, ‘அவரு நம்மட மலையாளியானு’ன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க” என்றார். அந்தளவுக்கு அதை இயல்பாகப் பண்ணியிருப்பதாகச் சொன்னார். இவ்வளவுக்கும் அந்தப் படத்தின் இயக்குநர் கோகுல், என் பகுதியை ஒரே நாளில் எடுத்து முடித்தார். காலை 9 மணியிலிருந்து இரவு 11 மணி வரைக்கும் அக்காட்சிகளைப் படமாக்கினார்.
அதே போல ‘காமராஜர்’ படத்தில், ஐயா காமராஜருக்கு நான் பேசியதை, அவர் குரல் போலவே இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். எனக்குக் கிடைத்த பெரிய பாக்கியமாக அதைப் பார்க்கிறேன். முதலில் அந்தப் படத்துக்குப் பேச அழைத்தபோது எனக்குப் பயம் வந்துவிட்டது. எப்போதோ வாழ்ந்த யாரோ ஒருவருக்கு நான் பேசவில்லை.
ஐயாவின் குரலைக் கேட்டவர்கள் இன்னும் இருக்கிறார்கள். நானே கேட்டிருக்கிறேன். எந்தெந்த இடத்தில் ’...ண்ணே’ என்று சொல்வார் என்பதைக் கவனித்திருக்கிறேன். இருந்தாலும் அவர் பேசிய டேப் வேண்டும், அதைக் கேட்டு விட்டுத்தான் பேசுவேன் என்று சொல்லி விட்டேன். தந்தார்கள். கேட்டு, நன்றாக உள்வாங்கிவிட்டுத்தான் பேசினேன்.
இப்படி எனக்கு கற்றுக் கொடுத்தவர்கள் பல குருநாதர்கள். அதாவது கற்றறிந்த சான்றோர்களிலிருந்து காகிதம் எடுக்கும் தொழிலாளிகள் வரை எல்லோரையும் என் குருநாதர்களாக நினைத்து அவர்களிடம் இருந்துதான் பேச்சு வழக்கைக் கற்றுக் கொண்டேன்.
(திங்கள்தோறும் பேசுவோம்)