

அதர்வா முரளி நாயகனாக நடித்துள்ள ‘இதயம் முரளி’, கடந்த 10ம் தேதி வெளியானது. இதில் கயாது லோஹர், ப்ரீத்தி முகுந்தன், பரிதாபங்கள் சுதாகர், ராபர்ட், இசை அமைப்பாளர் தமன், ரக் ஷன் என பலர் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கினார். இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது, அதர்வா முரளி கூறும்போது, “இந்தப் படத்தின் பயணம் தொடங்கி மூன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனை முதன்முதலாக இயக்குநராகவே சந்தித்தேன். அந்தச் சந்திப்பிலேயே இந்தப் படத்தின் தலைப்பு, தோற்றம், உணர்வு என அனைத்தையும் பற்றி அவர் பகிர்ந்து கொண்டார். இன்று அந்தக் கனவை நினைத்தபடியே திரையில் கொண்டு வந்திருக்கிறோம் என நம்புகிறேன்.
இதன் படப்பிடிப்பு மிகவும் மகிழ்ச்சியான சூழலில் நடந்தது. இந்தப் படம் எனக்கு பல அழகான நினைவுகளை கொடுத்திருக்கிறது. குறிப்பாக ‘இதயம் முரளி’ என்ற தலைப்பு என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. முதலில் இந்தத் தலைப்பை கேட்டபோது, ‘இது சரியாக அமையுமா?’ என்று ஆகாஷிடம் கேட்டேன்.
‘என்னை நம்புங்கள், இது நல்ல படமாக வரும்’ என்றார். அவர் சொன்னதை நிறைவேற்றியிருக்கிறார். இந்தத் தலைப்பின் மூலம் என் அப்பா முரளிக்கு சிறிய மரியாதை செலுத்த வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் ஒரு நண்பராக ஆகாஷ் அதை அழகாக செய்து காட்டியிருக்கிறார். அது எனக்கு பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார்.