

மறைந்த மூத்த இயக்குநர் ராஜசேகரின் பேத்தியும், மாடலுமான புவனேஷ்வரியை கரம் பிடித்தார் நடிகர் அஸ்வின். இவர்களது திருமணம் இன்று கோயம்புத்தூரில் நடைபெற்றது.
திருமண படங்களை நடிகர் அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘கடவுளின் திட்டம் நாம் எதிர்பார்ப்பதைவிட உயர்வானதாகவும், மேலானதாகவும் இருக்கும். என் வாழ்வின் காதலை எனக்கு அளித்து ஆசிர்வதித்த இந்த பிரபஞ்சத்துக்கு என்றென்றும் நன்றி உடையவனாக இருப்பேன். சில ஆன்மாக்கள் ஒருவரை ஒருவர் கண்டடைவதற்காகவே படைக்கப்பட்டவை’ எனத் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி தொடர்கள் மூலம் அறிமுகமான நடிகர் அஸ்வின் குமார், தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் மூலமாக பரவலாக மக்கள் மனதில் இடம் பெற்றார்.
கோயம்புத்தூரில் பிறந்த அஸ்வின் குமார், ஸ்டார் விஜய்யில் வெளியான ‘ஆபிஸ்’ தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதேபோல், தமிழ் தொலைக்காட்சி தொடரான ‘சரவணன் மீனாட்சி’யின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகனாக நடித்தார்.
மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் சிறிய வேடத்தில் வந்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமான அஸ்வின், ‘ஆதித்ய வர்மா’ படத்தில் துருவ் விக்ரமின் தம்பியாக வந்தார். ‘மீட் க்யூட்’, ‘என்ன சொல்ல போகிறாய்’, ‘செம்பி’ போன்றவை அஸ்வின் நடித்த மற்ற படங்களாகும். இவரது நடிப்பில் ‘குட் நியூஸ்’, ‘நொடிக்கு நொடி’ ஆகிய படங்கள் வெளிய வர இருக்கின்றன.