

இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, சர்தார் 2, ஜெயிலர் 2 உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் 10 வருடங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் படம் இயக்குகிறார்.
‘கில்லர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் பிரீத்தி அஸ்ராணி நாயகியாக நடிக்கிறார். கோகுலம் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏஞ்சல் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. எஸ்.ஜே.சூர்யாவின் கனவு படமான இதில், காருக்கு முக்கியத்துவம் இருப்பதால், ஜெர்மனியில் இருந்து புதிய பிஎம்டபிள்யூ கார் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்காகச் சண்டைக்காட்சி படப்பிடிப்பு சென்னை பாலவாக்கத்தில் நடந்து வந்தது. கயிறு கட்டியபடி அக்காட்சியில் பங்கேற்ற எஸ்.ஜே.சூர்யா, கீழே இறங்கும் போது எதிர்பாராத விதமாக விபத்தைச் சந்தித்தார்.
அவர் காலில் கம்பிகள் குத்தியதால் படுகாயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு காலில் 2 தையல்கள் போடப்பட்டன. மருத்துவர்கள் 15 நாட்கள் ஓய்வெடுக்கக் கூறியிருப்பதால் அவர் ஓய்வெடுத்து வருகிறார்.