

யோகிபாபு நாயகனாக நடித்த படம், ‘கெணத்த காணோம்’. சில மாதங்களுக்கு முன் மறைந்த, இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள இதில், லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரெபேக்கா, ஜார்ஜ் மரியம், ராஜேந்திரன், கவிதா பாரதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்துக்கு வி.தியாகராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜியோ ஹாட்ஸ்டார் வழங்கிய இப்படம் மார்ச் 13-ல் வெளியாகி வரவேற்பைப் பெற்றதை அடுத்து, இதன் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது.
படக்குழுவினர் கலந்துகொண்ட இதில், யோகி பாபு பேசும் போது, “இந்தப் படம் பரவலான ரசிகர்களைச் சென்றடைய வேண்டும் என்று இயக்குநர் சுரேஷ் சங்கையா கனவு கண்டார்; அந்தக் கனவு நனவாகியுள்ளது. வழக்கமான நகைச்சுவை வேடங்களைத் தாண்டி, புதுமையான மற்றும் பரிசோதனை முயற்சிகளில் ஆன கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க, நண்பர்கள் என்னை எப்போதும் ஊக்கப்படுத்தி வந்துள்ளனர்.
அதனால்தான் மாறுபட்ட மற்றும் அர்த்தமுள்ள கதாபாத்திரங்களில் நடிக்க முடிகிறது. சாமானிய மக்களின் வாழ்க்கை மற்றும் போராட்டங்களைப் பிரதிபலிக்கும் வகையிலான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து நடிப்பேன்” என்று கூறினார்.